என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராய உயிரிழப்புகள்- சட்டசபையில் இரங்கல்
- நாளை முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது.
- 29-ந்தேதி காலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
சபாநாயகர் அப்பாவு சரியாக 10 மணிக்கு வந்ததும் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், புலவர் இந்திர குமாரி, டாக்டர் ராம கிருஷ்ணன் உள்பட 17 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசிக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரசாயனம் கலந்த சாராயம் அருந்தியதன் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்தது இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணா துயரமும் கொள்கிறது.
சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்வதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் உயிர் இழந்தவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு சபாநாயகர் கூறியதும் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்து அஞ்சலி செலுத்தினர்.
இதன் பிறகு விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 10 நிமிடம் மட்டும் இன்று சட்டசபை நடந்தது. அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.






