என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகளும் அடங்கும்.
இந்த நிலையில், தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தும் அங்குள்ள 2 மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா, என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மரப்பட்டடைகள், பழங்கள், உள்ளிட்டவை மூலம் சாராயம் தயாரிக்கப்படுவதில்லை. முழுக்க, முழுக்க ரசாயனங்களை கொண்டு தான் சாராயம் தயாரிக்கப்படுகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கும், அதை அழிப்பது குறித்தும் தீர்வு காண வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம்.

நாங்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களது உறவினர்களுக்கு தான் பணம் கொடுக்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் நிராதரவாக நிற்கின்றனர். அவர்களுக்கு தான் நிவாரணம் வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. ஆனால் கள்ளுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே.
கள்ளுக்கடைகளுக்கு என தனி லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, அதில் தனி கவனம் செலுத்தப்பட்டு முறைப்படுத்தினால் மதுவிலக்கு சாத்தியம் தான்.
கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை பீகார் மாநிலம் நிரூபித்து காட்டியுள்ளது. கேரள அரசு அதற்கான முயற்சியில் உள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
- கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
சென்னை:
சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது.
* காவல் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறார்கள்.
* இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.
* சட்டசபையில் தி.மு.க. அரசு ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது.
* பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் குரல் கொடுக்க முடியவில்லை.
* காவல் அதிகாரிகளுடன் பல ஆய்வு கூட்டங்கள் நடத்தியும் சாராய விற்பனையை தடுக்க முடியவில்லையா?
* கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
* கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
* கள்ளச்சாராயம் குடித்தவர்களை காப்பாற்றும் குறிப்பிட்ட மருந்து அரசு மருத்துவமனையில் இல்லை. போதிய மருந்து இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பச்சை பொய் கூறுகிறார். குறிப்பிட்ட மருந்து இல்லாததால் பல மரணம் நிகழ்ந்துள்ளது.
* கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடப்பது என்ன? உண்மை மறைக்கப்படுகிறது.
* கள்ளச்சாராயம் உயிரிழப்புகளை மறைக்க ஆட்சியராக இருந்த ஷ்வரன் குமார் முயன்றார். தி.மு.க. அரசின் நிர்பந்தத்தால் ஷ்வரன்குமார் கள்ளச்சாராய பலி இல்லை என பொய் கூறினார். 3 பேர் உயிரிழந்த போதே கள்ளச்சாராயம் தான் காரணம் என கூறியிருந்தால் பலி அதிகரித்திருக்காது. பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியதற்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என கலெக்டர் கூறியது தான்.
* எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்த முதலமைச்சர் ஆட்சியரை மட்டும் பணியிட மாற்றம் செய்தது ஏன்?
* திமுகவினர் துணையோடு தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.
* கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி வீட்டில் திமுக தலைவர்கள் புகைப்படம் உள்ளன.
* கள்ளச்சாராயத்தால் 50 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
* கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்கள் குறித்த அறிக்கையை ஏன் வெளியிடவில்லை?
* எத்தனை பேர் சிகிச்சை, எத்தனை பேர் கவலைக்கிடம் என ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிடுகிறது. ஜிப்மர் போல் கள்ளக்குறிச்சி, சேலம் மருத்துவமனைகள் அறிக்கை வெளியிடாதது ஏன்?
இவ்வாறு அவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார்.
- கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது.
- ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை, சட்ட விரோத மது விற்பனை குறித்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது. இதற்கு காரணம் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் வேதிப்பொருட்கள் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இதனை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆஸ்பத்திரி, கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
தனியார் ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் அளவுக்கு அதிகமாக எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயவகங்களில் சோதனை நடத்த உள்ளதாக மது விலக்கு போலீசார் தெரிவித்தனர்.
நகர் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் சட்ட விரோதமாக மது விற்பனைக்கு பதுக்கிய 345 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
- நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் நேற்று பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது:-
கள்ளச் சாவு....க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்)? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டள்ள பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடு கட்டாது. இனி மரணங்கள் நிகழாத வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து இயக்குனர்கள் பா.ரஞ்சித், மோகன்ஜி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.
- நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
- மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் கடலோர பகுதிகளில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
குறிப்பாக மேற்கண்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தனர். இந்த தடை மூன்றாவது நாளாக தொடருகிறது.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறைமுகங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலம் முடிந்த நாளில் இருந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
- கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.
சென்னை:
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட 146 பேரில் 50 பேர் பலியானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
* கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மரில் 96 பேர் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் வந்துள்ளன. ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
* சிகிச்சை பெறும் பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என செய்திகள் வந்துள்ளன.
* நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு.
* மக்களின் பிரச்சனை சட்டமன்றத்தில் தான் பேச முடியும். இங்கு நடப்பது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி போல் உள்ளது.
* கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
* சட்டசபை சபாநாயகர் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார்.
* கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை நடந்துள்ளது.
* எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரை அலேக்காக தூக்கி கைது செய்ய முயன்றனர்.
* நிர்வாகத்திறனற்ற அரசு, பொம்மை முதலமைச்சர் என்பதால் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக ஊத்தங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது அங்கு உள்ள ஒரு பெட்டிக் கடையில் அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை அதிக விலையில் விற்பனை செய்த கருமாண்டபதி பகுதியை சேர்ந்த முருகேசன் (59), அவரது மனைவி குணா (54) என்பது தெரியவந்தது.
உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
- கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.
இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே புத்தனேந்தல் பகுதியில் பட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1977-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ள பழமையான கட்டிடத்தில் இந்த சங்கம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நகைக்கடன் உட்பட அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கியில் வீரசோழன் அருகேயுள்ள வத்தாப்பேட்டை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) என்பவர் எழுத்தராகவும், கூடுதல் பொறுப்பு செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பாப்பாங்குளம் கூட்டுறவு செயலர் ஓய்வுபெற்ற நிலையில் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இதற்கிடையே முத்துப்பாண்டி வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கூட்டுறவு வங்கியை பூட்டிய நிலையில் வீடு திரும்பினார். நேற்று காலை அவர் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு மதிய வேளையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு வந்தபோது வங்கி கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் வங்கியின் அலுவலக சுவர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு முத்துப்பாண்டி அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து வங்கியை சுற்றி வந்து கட்டிடத்தை சரிபார்த்த போது கட்டிடத்தின் பின்பக்க சுவர் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் துளையிட்டிருந்ததை அறிந்தார். அதேபோல் லாக்கர் இருந்த பகுதியின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் வங்கிக்குள் சென்று லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் கூட்டுறவு வங்கிக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கூட்டுறவு வங்கிக்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.
தொடர்ந்து பின்பக்க சுவரை கடப்பாரையால் இடித்து துளையிட்ட கொள்ளையர்கள் வங்கிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். பின்னர் கழிவறை அருகேயுள்ள ஜன்னல் பகுதியையும் கடப்பாரையால் இடித்து தள்ளி ஜன்னல் வழியாகவும் வங்கியினுள் நுழைய முயன்றுள்ளனர்.
ஆனால் வங்கியினுள் இயங்கி கொண்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்ததும் கொள்ளையர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்வோம் என தெரிந்து அங்கிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு சென்ற மேற்கூரையை பிரித்து லாக்கர் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள சுமார் 67 பவுன் நகைகள் தப்பியது.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கூட்டுறவு வங்கியில் லாக்கர் வசதி இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நகைகள் தப்பியது. மேலும் அங்கு வந்த விருதுநகர் கைரேகை நிபுணர்கள் வங்கியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்தனர். மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடந்தது.
நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- தவறான ஆவணப் பதிவுகள் மேற்கொள்வது தடுக்கப்பட்டு வருகின்றன.
- சார் பதிவாளர் ஆவணப் பதிவின் உண்மை நிலையை விசாரித்து அதன் அடிப்படையில் பதிவு மேற்கொள்வார்.
சென்னை:
ஆவணப் பதிவின் போது போலிகளைத் தடுக்க விரல் ரேகை ஒப்பீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சொத்துக்களை பதிவு செய்ய தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த செய்திகள் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. மேலும் சொத்தை எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரின் விரல் ரேகை, ஆதார் மற்றும் கருவிழிப்படலங்கள் ஒப்பிட்டு சரி பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் தவறான ஆவணப் பதிவுகள் மேற்கொள்வது தடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒரு நபர் சொத்தை விற்கும் போது தனது சொத்து விற்பனையை ஒத்துக் கொள்ளும் வகையில் சார் பதிவு அலுவலகத்தில் விரல் ரேகையைப் பதிவு செய்வார். அப்போது இதே சொத்து தொடர்பாக முந்தைய ஆவணப் பதிவின் போது சொத்தின் உரிமையாளர் செய்திருந்த விரல் ரேகைப் பதிவுடன் இப்போதுள்ள விரல் ரேகை ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
2 விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வகையில் கணினி மென் பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பொருந்தாத நிகழ்வுகளில் சார் பதிவாளர் ஆவணப் பதிவின் உண்மை நிலையை விசாரித்து அதன் அடிப்படையில் பதிவு மேற்கொள்வார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






