என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
- எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன் என்றார்.
தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று காலை கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார்.
அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.
இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் காணொளியுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.
முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு.. எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.
அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
- சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
- தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 37000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க அறிவுறுத்தியுள்ளது.
- கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
- மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .
பூந்தமல்லி:
சென்னையை ஒட்டி அமைந்துள்ளது பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள். இங்கு பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் தேவார பாடல் பெற்ற தலமான வேதபுரீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை நகருக்கும், புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். இதனால் பூந்தமல்லி, திருவேற்காடு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த 2 பஸ்நிலையங்களும் தற்போது கட்டணம் இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வருவதிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதிக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பூந்தமல்லி பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும். பஸ்நிலையத்தில் கட்டணம் கொடுத்து வாகனங்கள் நிறுத்த நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பஸ்நிலையத்திற்கு உள்ளேயே கட்டணமின்றி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பஸ்நிலையம் முழுவதுமே வாகனம் நிறுத்தும் இடம் போல் காட்சி அளிக்கிறது. பயணிகள் பஸ்நிலையத்திற்கு சென்று வரவும், பஸ்கள் இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சில ஷேர் ஆட்டோக்கள் பஸ்நிலையத்தின் உள்ளேயே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனை கட்டுப்படுத்தி பஸ்நிலையத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதே நிலைதான் திருவேற்காடு பஸ்நிலையத்திலும் நீடிக்கிறது. திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 72 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்நிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் விளங்குகிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு பேரூராட்சியாக இருந்த போது, இந்த பஸ் நிலையம் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் திருவேற்காடு நிலையத்தை சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் பராமரித்து வருகிறது. ஆனால் மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவேற்காடு பஸ்நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேற்கூரை பகுதிகளில் சிறுமழை பெய்தால் கூட மழைநீர் ஒழுகுகிறது. இங்கு போதிய மின் விளக்குகள் இல்லை.
பஸ்நிலையத்தை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் மாற்றி விட்டனர். குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. இதேபோல் தான் பூந்தமல்லி பஸ்நிலையமும் காட்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
- சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை.
சென்னை:
திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது எருமை மாடு அவரை முட்டி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற வந்தவரையும் மாடு முட்டி தள்ளியது. இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும் மாடு முட்டியது.
ஆவடியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை மாடு முட்டியது. திருவல்லிக்கேணி டி.பி.தெருவில் கஸ்தூரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காயமடைந்தார். குன்றத்தூர் அருகே நேற்று சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்த பூந்தமல்லியை சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்.
மாடு முட்டி பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன. மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் திரியவிடுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கும், வளர்க்கவும் தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டு உள்ளது. தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாடுகளை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை. எனவே, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாடுகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.
சென்னை:
கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே பருவமழை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 200, பட்டாணி ரூ. 240, இஞ்சி ரூ. 170, பூண்டு ரூ. 330, அவரைக்காய் ரூ. 100, சின்ன வெங்காயம் ரூ. 100, வண்ண குடை மிளகாய் ரூ. 190-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல, ஒரு கிலோ தக்காளி, பச்சைமிளகாய், பீா்க்கங்காய் ஆகியவை தலா ரூ. 75, ஊட்டி கேரட் மற்றும் பீட்ரூட், காராமணி, சேனைக்கிழங்கு ஆகியவை தலா ரூ.70, முள்ளங்கி ரூ. 50, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60, புடலங்காய் ரூ. 45, எலுமிச்சை ரூ. 90, கட்டு புதினா, கொத்தமல்லி தலா ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
- கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.
ஆனி மாத பவுர்ணமி இன்று வெள்ளிக்கிழமை காலை 7.46 மணிக்கு தொடங்கி நாளை சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு நிறைவு பெறுகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.
கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி விட்டன. அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி தனி வழி அமைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சாமி தரிசனம் செய்த அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
- மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய அவமானம். இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியது யார்?"
என்னைப் பொறுத்தவரை மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத மதுபான விற்பனையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இருப்பதால் அவர் இந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை பாதுகாத்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவராக பலி எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று நினைக்கிறேன். நோயாளிகளை காப்பாற்ற மாற்று மருந்து இல்லை. எஸ்பி மற்றும் கலெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
Kallakurichi hooch tragedy | Pattali Makkal Katchi (PMK) president Dr Anbumani Ramadoss says, "According to me the CB-CID investigation announcement by the state government is just an eye wash. Chief Minister must take responsibility. Ministers E. V. Velu and S. Muthusamy must be… pic.twitter.com/s3WjUKYsPH
— ANI (@ANI) June 21, 2024
- கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.
- கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.
சென்னை:
தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது கள்ளக்குறிச்சியில் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் செத்து, 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற செய்தி இதயத்தில் ஈரம் உள்ளவர்களை நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்.
50-க்கும் மேற்பட்ட பலியான உயிர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும்.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும்.
- அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் துறை உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.
சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
- சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
* பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
* கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
* சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
* கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அறிந்து அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.
* கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காக ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
* கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.
* கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
* பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக்.
- விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.
சென்னை:
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில் யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்து இருந்தோம்.
கட்சி நிர்வாகி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர். இன்று காலை வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் பயிற்சி செய்பவர்களையும் வர விடாமல் பார்க்கை மூடி விட்டனர். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இதை பார்க்கிறோம்.
சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் மக்களுடன் சேர்ந்து யோகா செய்வதில் என்னவாகி விடப்போகிறது.
தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கு எல்லாம் கவனம் கொடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும் பார்க்கை பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை.
உங்கள் தவறுகளை பேசும் எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து பார்க்கில் செய்யும் யோகா நிகழ்ச்சிகளை தடை செய்கிறீர்கள்.
பா.ஜக. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் யோகா பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச யோகா தினத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் எத்தனையோ முயற்சி எடுத்து யோகா செய்யும் தன்னார்வலர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். யோகா பயிற்சியை மேற்கொள்ளும் மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகத்தில் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் குறிப்பாக, உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.
இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது.
இது முதல் தடவை இல்லை. ஒரு வருடத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.
விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.
ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.






