என் மலர்
உள்ளூர் செய்திகள்
- செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் நீட் முறைகேடுக்கு எதிராக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
- மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் துரையூர் நெசக்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து உளவுத்துறைக்கு அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
- மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதன் மூலம் மொத்தம் விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, சுயேச்சை வேட்பாளர்கள் காந்தியவாதி ரமேஷ், அக்னி ஆழ்வார், நூர்முகமது, ராஜேந்திரன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, விதவைக்கோலத்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். வேடத்தில் நூர்முகமது உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.
- குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
- 5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
சென்னை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:-
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்படும். 2 கோடி ரூபாய் செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுய தொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
6 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படும். காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும்.
குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
பள்ளி சத்துணவு மையங்களில் ரூ.9 கோடி செலவில் முட்டை உரிப்பான் எந்திரங்கள் வழங்கப்படும்.
முதியோர்கள் பயனடையும் வகையில் ரூ.40 லட்சம் செலவில் யோகா, தியான பயிற்சி வழங்கப்படும்.
அரசினர் குழந்தைகள் இல்லங்களில் கழிவறை வசதியுடன் கூடிய அறை ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மகளிர் விடுதிகள் பதிவு உரிமம் எளிமையாக்கப்படும்.
5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய திறன் கைபேசிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
- தற்போது மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர் மருத்துவ குழுவினர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர் மருத்துவ குழுவினர். ஏனென்றால் ஏற்கனவே ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரில் 8 பேர் மிகவும் கவலை கிடமான இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கள்ளச்சாரயம் குடித்ததில் கண்பார்வை இழந்தவர்கள் 8 உள்ளன. பார்வை இழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.
- கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 121 கோடியே 13 லட்சம் வருவாய் வந்துள்ளது.
சென்னை:
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசுக்கு மது விற்பனையில் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் கடந்த 2003ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 121 கோடியே 13 லட்சம் வருவாய் வந்துள்ளது. அதன்படி முந்தைய ஆண்டினைவிட கடந்தாண்டு ரூ.1,734 கோடியே 54 லட்சம் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்டிட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
- நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.
சென்னை:
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன் அடையும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்பட்டும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டிட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
அதே போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் அதற்காக விதிகளை மீற கூடாது. கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி, அந்த துறையின் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் நகர்புற வளர்ச்சி குழுமங்கள் பொதுமக்களுக்கு எளிதான சேவைகள் வழங்க தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் கொண்டு மக்களுக்கு தனி இணைய செயலி உருவாக்கப்படும். முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு நகரில் நிலச்சேர்ம வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும். நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.
300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் ஈரோட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய வாகன நிறுத்த கொள்கை உருவாக்கப்படும்.
இவ்வாறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
- பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.
வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக மாணவரணி சார்பில் கூறப்பட்டுள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
- ஓரிரு இடங்களில் இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 25ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 25-ம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் சில இடங்களில் பருவமழை தீவிரம் அடைந்தாலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை ஐசிஎஃப் 8 ரெயில்களை தயாரித்து வருகிறது.
- இதில் இரண்டு சென்னை- செங்கல்பட்டு வழித்தடத்திற்காக சென்னை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களின் தலைநகரில் புறநகர் ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் புறநகரில் இருந்து வேலை பார்க்க வருபவர்கள் இந்த ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வேலைக்கு செல்லும் நேரம், வேலை முடிந்து புறப்படும் நேரத்தில் (PeaK Hours) முண்டியடித்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் புறநகர் ரெயிலில் பயணம் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் ஏ.சி. ரெயில்களை விட முன்வந்தது. மும்பையில் ஏற்கனவே புறநகர் ரெயில்களில் ஏ.சி. வசதி உள்ளது.
சென்னையில் சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டது. இதற்கான பிரத்யேக ரெயிலை சென்னை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. மொத்தம் 8 ரெயில்கள் தயாரித்து வருவதாகவும், அதில் இரண்டு சென்னை புறநகர் சேவைக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரெயில்வேத்துறை இரண்டு ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் பயணிப்போர் ஏ.சி. பெட்டியில் பயணிக்கலாம். இதனால் வியர்வையின்றி, சோர்வின்றி வேலைக்கு செல்லலாம். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லலாம். இதில் பயணிப்பதற்கான கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
- மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.
- இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் அரிய வகை மா மரம் மியா சகி இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் காய்க்க துவங்கியுள்ளது.
இதில், அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் ஏ, சி மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது. இந்த மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.
இந்நிலையில், காவேரி கூக்குரல் - முக்கனி திருவிழாவிற்கு வருகை தர பதிவு செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மியா சகி மா மரக்கன்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம் என்றும் காவேரி கூக்குரல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் 3000 வரை விற்கக்கூடிய மியா சகி மா மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம்.
இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் - முக்கனி திருவிழாவில் பங்கேற்க
இன்றே பதிவு செய்யவும் என்றும், குறைந்த அளவு நாற்றுகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விழாவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்..
https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8 அல்லது 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
- சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது.
- முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழை ரகங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது.
இதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்களும் பண்ருட்டி முன்னாள் வேளாண்மை துணை இயக்குனர் அக்ரி.பி. ஹரிதாஸ் அவர்களும் பங்கேற்று பேசினர்.
இதில் தமிழ்மாறன் அவர்கள் பேசியதாவது:-
பருவ நிலை மாற்றத்தால் முக்கனி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வழக்கத்தைவிட மா, பலா, வாழையின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 30% இந்தாண்டு குறைந்துள்ளது.
ஒரு பயிர் சாகுபடியை விடுத்து, பலப்பயிர் பல அடுக்கு முறையில் உணவுக்காடாக உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்கலாம்.
சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது. அதுவும் குறிப்பாக பழ மரமாக இருந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும், சுற்றுச்சுழல் மேம்படும், நிலம் வளமாகும் மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இத்தோடு விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும்.
எனவே, விவசாயிகள் தங்களிடம் எவ்வளவு நிலம் இருந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியில் உணவுக்காடு உற்பத்தி செய்ய வேண்டும். நிலமே இல்லாவிட்டாலும் மாடியில் கூட உணவுக்காடு சாத்தியம் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா பழங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைகாகவும் வைக்கப்பட உள்ளது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






