என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.
    • மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், வாணியம்பாடியில் இருந்து வெலதிகா மணிபெண்டா வழியாக பெங்களூரு, கோலார் தங்க வயல் மற்றும் சித்தூருக்கு பஸ்கள் இயக்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.

    மேலும், வெலதிகாமணி பெண்டாகிராமம் தமிழக ஆந்திர மாநில எல்லையில் வருவதால் இரண்டு மாநிலத்திற்கு இடையே இயக்க ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பே பஸ்களை இயக்க முடியும். மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது. தற்போது வாணியம்பாடியில் இருந்து மினி பஸ் மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
    • ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும்.

    ஏற்காடு:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டத்திலும் போலீசார் பல்வேறு இடங்களில் சாராயம் விற்க்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏற்காடு மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.

    ஏற்காடு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    மேலும் ஆத்துஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய போலீசார் மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறும் போது, சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம் காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை கிராமங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊர்தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறும் போது. ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும். சட்டத்துக்கு புறம்பாக யாராவது மது மற்றும் சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    • சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
    • தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீலாங்கரை:

    நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் 50-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ECR சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வில், சிறுவனை அழைத்த வந்து சாகசம் செய்ய வைப்பதாக கூறி ஓடுகளை தீ எரியும் கையால் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறுவனின் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி லைட்டரில் தீ பற்ற வைத்ததுடன் கையில் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறியதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சி அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

    இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தை புறக்கணித்துள்ளனர்.

    • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் 26-ந் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 5 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு குறித்து இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் 26-ந் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். 

    இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று 35 முதல் முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 96 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து வெளியே இழுத்து சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் மைதீன் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் நேற்று இரவு திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் கூச்சலிட்டவாறு நின்றார். அப்போது அந்த வழியாக குன்னத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பஸ்சின் முன் சக்கரத்தின் கீழ் தலை வைத்து படுத்தார். இதனால் பதற்றம் அடைந்த டிரைவர் உடனடியாக கீழே இறங்கி அந்த வாலிபரை நகர்ந்து செல்லுமாறு கூறினார்.

    பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் அங்கு சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் வாலிபரிடம் எவ்வளவு எடுத்து கூறியும் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. வீட்டில் படுப்பது போன்று 'ஹாயாக' காலுக்கு மேல் கால் போட்டபடி படுத்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து வெளியே இழுத்து சென்றனர்.

    அப்போது அவர் 'என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். எப்படியாவது அவளுடன் என்னை சேர்த்து வையுங்கள். இப்போது இல்லை என்றால் எப்போதும் எனக்கு கிடைக்க மாட்டாள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் உயிரை மாய்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்' என போலீசின் காலில் விழுந்து கெஞ்சினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • சர்வதேச யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.
    • இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகம் சென்றார் அங்கு அவருக்கு வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதன் பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் பாக்நீரினை கடல் இந்திய-இலங்கை எல்லைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து, நேற்று காலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று ஸ்படிகலிங்க தரிசனம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். இதன் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.

    பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பலில் மன்னார் வளைகுடா கடல் இந்திய இலங்கை எல்லையில் அமைந்துள்ள 5-ம் மணல் தீடைக்கு சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள இந்திய-இலங்கை பெயர் பலகை மற்றும் இந்திய தேசிய கொடியை பார்வையிட்டார்.

    மேலும் மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதன் பின்னர் உச்சிப்புளி சென்று அங்கிருந்து ராணுவ விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    • தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.
    • தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது.

    சென்னை :

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

    * கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவே அவையில் பேச அனுமதி கேட்டோம், ஆனால் தரப்படவில்லை.

    * மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இது மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் அவையில் விவாதிக்க அனுமதி கேட்டோம்.

    * கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 183 பேரில் 55 பேர் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகிறது.

    * விஷ முறிவு மருந்து இருப்பு இல்லை என நான் கேட்டதற்கு வயிற்று புண்ணுக்கான மருந்து ஸ்டாக் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். நான் சொன்ன மருந்து வேறு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன மருந்து வேறு..

    * தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.

    * கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக மருத்துவமனை வந்ததே பலர் பலியாக காரணம் என கூறப்படுகிறது. இதற்கு அரசு தான் காரணம்.

    * கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியான நிலையில், கள்ளக்குறிச்சி ஆட்சியரோ அரசுக்கு ஆதரவாக பொய் கூறியுள்ளார்.

    * வலிப்பு வந்ததால் ஒருவர் பலி, வயது முதிர்வின் காரணமாக மற்றொருவர் பலி என ஆட்சியர் கூறிய பொய்யால் பலர் பலி.

    * தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த வாரம் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் 60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

    இந்த நிலையில் வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரினை பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்தது.

    இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட மீனவ நலத்துறையும் அனுமதி டோக்கன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
    • ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதியையொட்டி காவல் நிலையங்களில் முக்கியமானது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையம். இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சில மாதங்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக புகார் எழுந்தது.. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் சிலர் புகார் அளித்தனர்.

    அதை தொடர்ந்து, எஸ்பியின் தனிப்படை போலீசார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.

    அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எஸ்பி வருண்குமார், ஓபன் மைக்கில், "கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர மீதமுள்ள போலீசார் 22 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாகச் சென்று ஒரு மணிநேரத்துக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும்"என்று உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நேற்று இரவுக்குள் மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர். ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    • நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல.
    • 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு, நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    முன்னதாக, இன்றும் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×