என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆற்றின் ஒரத்தில் நின்று யானைகள் தண்ணீர் குடித்தன.
- யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று, தர்மகிரி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தன. ஆற்றின் ஒரத்தில் நின்று யானைகள் தண்ணீர் குடித்தன.
அந்த சமயம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடி கொண்டிருந்தது.
அந்த யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் யானையும் அடித்து செல்லப்பட்டது. ஆனாலும் யானை கலங்காமல், நம்பிக்கையுடன் போராடி, ஆற்றில் எதிர்நீச்சல் போட்டு கரைக்கு வந்து சேர்ந்தது.
தன்னம்பிக்கையுடன் கலங்காமல் தனியாய் போராடிய காட்டு யானையின் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ரூ.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனைகள்.
- ரூ. 32 கோடி மதிப்பீட்டில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள்.
மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மிக அதிக உடல் எடையுடன் (Morbid Obesity) உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடலிறக்கம், கல்லீரல் செயலிழப்பு, இதயநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளோருக்கான உயிர்காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரூ.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ரூ. 32 கோடி மதிப்பீட்டில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊடுகதிர் பரிசோதனை.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட நிதியுதவியுடன், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த ரூ.18.13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவைகள்.
பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு கண்காணிப்பு மையங்கள்.
ரூ. 26.62 கோடி மதிப்பீட்டில் "பாதம் பாதுகாப்போம்" திட்டம்
ரூ 50.00 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ வகுப்பறைகள்.
ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள்.
குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை!
₹250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் அமைகிறது.
- ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
சென்னை:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 3-ந்தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் என்பது பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- கர்நாடகா அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தலையில் மண்பானையை கவிழ்த்து கொண்டு அதில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியப்படி கலெக்டரிடம் நூதன முறையில் மனு கொடுத்தனர்.
விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்தும் 2022-23-ம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் வழங்கவில்லை. 2023-24 பயிர் காப்பீடு செய்தும் இன்சூரன்ஸ் வழங்கவில்லை. எனவே ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கர்நாடகா அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே சென்றனர். இதனால் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
அதை தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
- 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
- தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.
கோகிலாவுக்கு ஏற்பட்டு இருக்கும் சோகம் உலகில் யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த சிறுமிக்கு தற்போது 16 வயதே ஆகிறது.
உலகம் எப்படிப்பட்டது? உறவினர்கள் எத்தகையவர்கள்? நட்பு வட்டாரங்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற எதுவுமே தெரியாத பருவம். சுருக்கமாக செல்ல வேண்டுமானால் வஞ்சகம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் எந்த ஒரு பாகத்தையும் அனுபவித்து அறியாத பருவத்தில் இருப்பவள்.
மற்ற சிறுவர்-சிறுமிகள் ஓடியாடி துள்ளி விளையாடி துளியும் கவலை இல்லாமல் வாழும் நிலையில் மனதில் அந்த சிறுமி பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்பட்ட இந்த சோகத்துக்கு காரணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.
அந்த சம்பவத்தில் பலியான 64 பேரில் கோகிலாவின் தாயும், தந்தையும் அடங்குவார்கள். ஒரே நாளில் தனது தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.
அவளது தந்தை சுரேஷ். பெயிண்டர். தாய் வடிவுக்கரசி. பண்ணையில் வேலை பார்தது வந்த கூலித்தொழிலாளி. அவர்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தனர். 20க்கு 20 அடி வாடகை வீட்டில் வசித்த வந்த அவர்கள் தினசரி உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் காலத்தை தள்ளியவர்கள்.

அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மகள் கோகிலா. 2 மகன்கள் ஹரிஸ், ராகவன். கோகிலாவுக்கு 16 வயது. ஹரிசுக்கு 15 வயது, ராகவனுக்கு 14 வயது.
இந்த இளம் வயதில் இந்த 3 பிஞ்சுகளையும் தவிக்க விட்டுவிட்டு சுரேசும், வடிவுக்கரசியும் கள்ளச்சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் சுரேஷ் தினமும் உடல்வலி நீங்குவதற்காக கள்ளச்சாராயம் குடிப்பதை பழக்கத்தில் வைத்திருந்தார்.
சம்பவத்துன்று கள்ளச்சாராயத்தை அவர் ரகசியமாக ஒளித்து வைப்பதற்காக வேறு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தார். வடிவுக்கரசி அதை ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த ஓமம் தண்ணீர் என்று தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். விளைவு கணவன்-மனைவி இரண்டு பேருமே உயிரை பறிக்கொடுத்து விட்டனர்.
இந்த பரிதாபத்தால் தற்போது குடும்ப பொறுப்பு 16 வயது கோகிலா மீது விழுந்துள்ளது. 15 வயது ஹரிசையும், 14 வயது ராகவனையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை கோகிலா ஏற்று இருப்பதாக கூறி உள்ளாள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் அவளுக்கு இடையூறு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
தந்தை சுரேசுக்கு கடன் கொடுத்து இருப்பதாகவும் எனவே அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி உதவியை தங்கள் கடனை கழிக்க தர வேண்டும் என்றும் மிரட்ட தொடங்கி இருக்கிறார்களாம்.
இந்த 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தையும் சிலர் கேட்டு மிரட்டுகிறார்களாம். இதனால் கோகிலா மிரண்டு போய் இருக்கிறாள்.
திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த சிறுமி ஒரே ஒரு உதவிதான் கேட்கிறாள். சொந்தமாக குடியிருக்க வீடு இல்லை. முதலமைச்சர் தனக்கு ஒரு வீடு தந்தால் பிழைத்துக் கொள்வோம் என்று அவள் கண்ணீர் மல்க சொன்னது நெஞ்சை கடப்பாரையால் குத்துவது போல் இருக்கிறது.
சிறு வயதிலேயே இப்படி ஒரு பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோகிலா நிச்சயம் போராடி ஜெயிப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். அவளுக்கு உற்சாகம் கொடுத்தாலே போதும் 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி விட முடியும்.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன்.
- நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.
சென்னை:
நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி ஊக்கத் தொகையை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:-
கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;
'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி' எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித் தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப் பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த பாராட்டு தொடர்பாக சீமான் அளித்துள்ள பேட்டியில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான அஸ்திவாரமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-
கல்வியில் சிறந்த மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருவது உன்னதமான பணியாகும்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயுடனான கூட்டணிக்கு அஸ்திவாரமாக தான் அவரை பாராட்டியதை எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கிறீர்கள். அப்படியும் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லையே, நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.
இருப்பினும் விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன். அவரது பெயரில் தபால் தலை வெளியிட்ட போது பலரும் எதிர்த்தனர். ஆனால் நான்தான் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். 'கத்தி', 'தலைவா' படங்களுக்கு எதிர்ப்பு வந்தபோதும் அவருக்கு ஆதரவாக நின்றேன். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.
போதை பொருள் தொடர்பான அவரது பேச்சு மாணவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் விஜயுடன் கூட்டணி... என்று கூறி இருப்பதை கூட்டணி உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டபோது அதுபற்றி இதற்கு மேலும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அப்போது தான் பேசி முடிவெடுப்போம் என்றார்.
விஜயுடனான கூட்டணி பற்றி சீமான் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- யானை இறந்து கிடந்ததை பார்த்த ராமர் அதிலிருந்த 2 தந்தங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
- 5 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
பழனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பாலசமுத்திரம் கிழக்கு பீட் பகுதியில் கடந்த 16ம் தேதி யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்போது பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த ராமர் (வயது 53) என்பவர் அங்கு தேன் சேகரிக்க சென்றார்.
அப்போது யானை இறந்து கிடந்ததை பார்த்த ராமர் அதிலிருந்த 2 தந்தங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் தந்தங்களை விற்றால் அதிக விலை கிடைக்கும் என நினைத்து இதுகுறித்து கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரம் (49) என்பவரை அணுகினார். பின்னர் பழனி அடுத்துள்ள வயலூரை சேர்ந்த கணேசன் (55) என்பவருடன் சேர்ந்து தந்தத்தை விற்க புரோக்கர்களை தேடினர். அப்போது தந்தம் வாங்க வருவதுபோல வனத்துறையினர் மாறுவேடத்தில் வந்து அவர்கள் 3 பேரையும் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 40 செ.மீ. உயரமுள்ள 2 கிலோ எடைகொண்ட 2 யானை தந்தங்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே மதுரை மண்டல வன உயிரின கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் யானை இறந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனப்பாதுகாவலர் காஞ்சனா தெரிவிக்கையில்,
பழனி வனப்பகுதியில் யானை இறந்த விவகாரத்தில் அதுகுறித்த எந்தவித அறிகுறியே இல்லாமல் தந்தங்கள் கடத்தப்படும் வரை மெத்தனமாக இருந்த பழனி வனச்சரக அலுவலர் கோகுலகண்ணன், பாரஸ்டர் பழனிச்சாமி, ஜெயசீலன், கார்டு சரண்யா, களப்பணியாளர் ஆல்வின் ஆகிய 5 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உரிய ஆதாரம் இல்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- முதல் கட்டமாக இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார்.
- மாணவன் சின்னத்துரை அருகே அமர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சின்னத்துரை கடந்த ஆண்டு சாதிய வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் இன்று முதல் கட்டமாக 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார்.
இதில் மாணவன் சின்னத்துரைக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தார். இதன்பின்னர் மாணவன் சின்னத்துரை கூறுகையில், முதல் ஆளாக விஜய் தன்னுடைய அருகில் அமர்ந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் முதலமைச்சர் ஆவார் என நம்புகிறேன். இப்போதே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். முதலமைச்சர் ஆனால் கல்விக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் மாணவன் சின்னத்துரை அருகே அமர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும்.
- ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை:
2024-ம் ஆண்டில் மருத்துவ துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவர் சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் பதவியில் உள்ள 367 இடங்கள், கண் மருத்துவ உதவியாளர் பதவியில் உள்ள 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் உள்ள 49 இடங்கள், உள்ளிட்ட 21 வகை பதவிகளில் காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.
- கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மாலை பள்ளி முடிந்து மாணவி ஒருவர் அப்பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் . அப்போது மாணவியை பினதொடர்ந்து 3 வாலிபர்கள் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியும், தங்களிடம் பேசும்படியும் வற்புறுத்தினர்.
இதனை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தட்டிக்கேட்டார். அவர் போதை கும்பலை எச்சரித்தார். இதனால் அந்த வாலிபருக்கும் போதை கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மாணவி அங்கிருந்து அச்சத்துடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் தங்களை தட்டி கேட்ட வாலிபரை பின்தொடர்ந்து அவரது வீடுவரை சென்று மிரட்டினர். மேலும் அங்கு நின்று ரகளையில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர், வரமறுத்து அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கம்பத்தில் தனது தலையை மோதி ஆவேசம் ஆனார். பின்னர் ஒருவழியாக போதை வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் அழைத்து சென்றனர். விசாரணியில் பிடிபட்டவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் ஷியாம், தீனா என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். நான் விரைவில் திரும்பி வருவேன், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினந்தோறும் இந்த பகுதியில் போதை வாலிபர்கள் மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்வது அதிகரித்து உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்து அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டும் இதே பகுதியில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விசாரணைக்காக சென்றபோது கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






