என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கு விற்பனையானது.
    • சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை கடந்த 17-ந் தேதி விலை உச்சத்துக்கு சென்றது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது.

    இப்படி இருந்த சூழலில் கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.

    இதனையடுத்து தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் பிற்பகலில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 920 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனையாகிறது.

    இதன்மூலம் கிராமுக்கு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை , இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600

    27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

    26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-10-2025- ஒரு கிராம் ரூ.165

    27-10-2025- ஒரு கிராம் ரூ.170

    26-10-2025- ஒரு கிராம் ரூ.170

    25-10-2025- ஒரு கிராம் ரூ.170

    24-10-2025- ஒரு கிராம் ரூ.170

    • விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது விவசாய பணிகளில் பெரும்பாலான பொறியியல் படித்த இளைஞர்கள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி செய்து விட்டு தாயகம் திரும்பிய இளைஞர்களும் ஆர்வம் காட்டி அவர்களது பூர்வீக நிலங்களைக் கொண்டும், விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    விவசாயத்தில் ஆர்வமாக விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை, தோட்டகலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை மூலம் புதிய, லாபகரமான முன்னோடி விவசாயம் செய்யும் பகுதிகளுக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு அழைத்துச் சென்று எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

    இதற்காக இளைஞர் களால் வேளாண்மை மேம்பாட்டு திட்டம் போன்ற ஒரு திட்டத்தை தமிழக வேளாண்மைத் துறை கூட்டுக் குழுவாக செயல்பட்டு உடனடியாக நிறைவேற்றி விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களின் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
    • தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம்.

    திருப்பூர்:

    இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    எல்லோரோடும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு பெரிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்திருக்கிறான். தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். அ.தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நான் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் சார்ந்த இயக்கத்தினுடைய கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை.

    அன்றைக்கு கம்யூனிஸ்ட் சகோதர கவுன்சிலர்களோடும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். அதனால்தான் என்னவோ என்னை கட்சி அரசியலில் இருந்து இறைவன் விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எதுவுமே நம்முடைய முடிவிலே மட்டும்தான் நம்முடைய பயணம் தொடர்கிறதா என்று கேட்டால் என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை.

    நாம் ஒரு திசையில் பயணிப்போம் என்று நினைப்போம். அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம். அதே தான் நம்முடைய முழு வாழ்வும் என்கின்ற நிலை இருக்கும். ஆனால் கால சூழலும் இறைவனுடைய விருப்பமும் வேறாக இருக்கும். பங்களாதேஷ்க்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நினைக்கவே இல்லை. அரசியல் ஈடுபாடு என்பது எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது.

    பள்ளியிலே படிக்கின்ற போது மாணவர் தலைவனாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். அவினாசி சுந்தரமூர்த்தி நாயனார் அருள் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நான் இந்த இடத்திலே உங்கள் முன்பாக நிற்பதற்கான வாய்ப்பே நிச்சயமாக சத்தியமாக இல்லை.

    என்னுடைய ஜாதகத்தை ஒருவர் பார்த்து சொன்னார். நீ இரண்டு முறையாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று. அவரது வாழ்க்கை முழுவதும் தொழில் ஜோசியம் அல்ல. அவர் அரசியலில் ஒரு பொறுப்பிலே இருக்கிறார். அவர் சொன்னதும் உடனே எனக்கு சிரிப்பே நீக்கவில்லை. நான் சார்ந்து இருக்கிற இயக்கத்திலே நான் ஒரு முறை கவுன்சிலர் ஆனாலே பெரியது என்று சொன்னேன். இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் சொன்ன வாக்குப் பலித்திருக்கிறது. காங்கயத்தை சேர்ந்த நாவிதர் ஒருவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் அரசியலை விட்டு விலகி விடாதீர்கள் என்றார். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும்.

    எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. வாழ்க்கையில் ஒருவன் பிறந்து விட்டான் என்று சொன்னால் அவன் இறக்கின்ற வரை உழைக்க வேண்டும் என்பதுதான். நான் என்னுடைய தகப்பனாரோடு பல நேரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பேன். அவர் சொன்னது ஒன்று என்னுடைய மனதில் என்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். எவ்வளவு வசதி வந்தாலும் எவ்வளவு அதிகாரம் உன்னிடத்தில் வந்தாலும் சாப்பிடுகிறவரை நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் உனக்கு தருகின்ற உணவு உழைக்காமல் வரக்கூடாது. ஒருவர் தலைவராக உயர்கிறார் என்று சொன்னால் அவரிடத்தில் ஏதாவது ஒரு பண்பு இருந்தால் மட்டும்தான் அவர் தலைவராக உருவாக முடியும். நான் சார்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிக எதிரானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்பொழுது தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல . ஆனால் கலைஞர் கருணாநிதி இடத்தில் எனக்கு ஒன்று பிடிக்கும். எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத ஒரு தலைவர் . தோல்வியைப் பற்றி துவண்டு விடாமல் அவர் தொடர்ந்து உழைத்தார். கடுமையாக முயற்சிக்காமல் யாராலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியாது.

    தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம். குறிக்கோளை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், சத்தியமும் தர்மமும் அந்த பயணத்தில் இருக்க வேண்டும். அடுத்தவரை வீழ்த்துவதை விட தான் உயர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

    திருப்பூர் பின்னலாடைக்கு எத்தனையோ சரிவுகள் வந்துள்ளது. ஆனால் இன்றைய சரிவு நம் கையில் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏற்றுமதி இதைவிட 2 மடங்காகும் நாள் விரைவில் வரும். அதுவரை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பேசினார்.

    • சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது.

    அந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டிப்பட்டி பழனிசாமி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கியது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக போராடியது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

    பின்னர் சிறுத்தையை மீட்டு பார்த்ததில் சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுத்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
    • சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    31-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.
    • மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

    தென்காசி:

    தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * நெல்கொள்முதல் ஈரபதத்தை 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.

    * பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.

    * மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

    * SIR என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்க முயல்கிறார்கள்.

    * வாக்குரிமை பறிப்பை எந்த நிலையிலும் நடக்க விடமாட்டோம்.

    * ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான், அதனை எந்நாளும் விட்டுத்தரமாட்டோம் என்றார். 

    • கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    • கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது?

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளது.

    இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும்? என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    • தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
    • கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

    தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    * தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

    * தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.

    * ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

    * கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

    * அடவி நயினார் அணைத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.

    * ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.

    * வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    * கடையநல்லூர் வட்டம் வரட்டாறு பாசன அணைக்கட்டுகள், குளங்கள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.

    * கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம், சிவசைலம் கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
    • மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை.

    தென்காசி:

    தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 22,70,293 மெட்ரின் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சியை போல் இல்லாமல் செப்டர்பர் 1-ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் ஆயிரம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

    * கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 1,70,45,545 மெட்ரின் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    * ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் பாசன நிலத்தின் பரப்பளவு அதிகரித்து கொள்முதலும் அதிகரித்துள்ளது.

    * மக்களை மகிழ்விக்கவும் மக்களை காக்கவுமே இந்த ஆட்சி நடந்து வருகிறது.

    * வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தேன்.

    * 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதுடன் போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

    * எடப்பாடி பழனிசாமியிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

    * நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.

    *தி.மு.க. அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை, அதனால் அவதூறு பரப்புகின்றனர்.

    * மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை என்றார்.

    • எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.
    • தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

    தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.

    * வடக்கே ஒரு காசி என்றால் தெற்கே ஒரு தென்காசி என சொல்லும் அளவிற்கு பெருமை வாய்ந்த நகரம் தென்காசி.

    * தூறலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி.

    * காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு.

    * கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சமாவது வீட்டை பயனாளிக்கு ஒப்படைத்தது பெருமை.

    * வருவாய் துறை சார்பில் 17 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

    * 10 லட்சம் பேருக்கு இதுவரை இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    * அன்பு மகள் பிரேமாவிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடைபெறும் வீடு கட்டும் பணியை நேரில் பார்வையிட்டேன். வீடு கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது.

    * தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

    * 15 ஊர்களில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * எல்லோருக்கும் எல்லாம் என்பதை நோக்கமாக கொண்டு அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம்.

    * தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றி வருகிறோம்.

    * திராவிட மாடல் அரசு அமைந்த பின்னர் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

    * மாவட்டந்தோறும் அரசு விழாக்களில் பங்கேற்று அந்த மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும்.
    • நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.

    அவர் படித்த காலத்தில் நடந்த பள்ளி விழாவில் அப்போதைய கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்.

    அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை பார்த்து தானும் கலெக்டராக வேண்டும் என உறுதி கொண்டு வான்மதி படிக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சியால் நன்கு படித்து அவர் நினைத்தது போன்று கலெக்டராக தேர்ச்சி பெற்றார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்தார். இதையடுத்து அவர் தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.

    அவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வான்மதி மாணவிகளிடம் பேசும்போது,

    தான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்து கலெக்டர் ஆனதாக கூறினார். மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள் என மாணவிகளிடம் பேசினார்.

    ×