என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.
பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்.
நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக இன்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக நேற்று மாலை மதுரை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார். பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தங்கிருப்பதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசை முதலமைச்சர் வழங்கினார்.
அவருடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! என்று தெரிவித்து உள்ளார்.
- தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
- சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
சென்னை:
குரூப்-4 பணிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணினிவழிதிரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர்- பழங்குடி இளைஞர்கள் ஆகிய பதவிகள் தவிர) www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) பிரிவு வாயிலாக நவம்பர் 7-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
- முதல்வர் ஸ்டாலின் இரவில் புறப்பட்டு நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழகம் வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் நடந்த பாராட்டு விழாவுக்கு பின் கோயம்பத்தூர் விமானம் நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நாளை மதியம் 12 மணியளவில் மீண்டும் டெல்லி செல்கிறார். இன்று தென்காசி, நெல்லையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
- 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.
இதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. வருகிற 2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக-அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசன் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
த.வெக, நாம் தமிழர் கட்சி SIR பணியை கடுமையான எதிர்ப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து, இந்திய அரசின் அறிவிப்பானது 16.06.2025 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் (அறிவிப்பு எண். S.O. 2681) வெளியிடப்பட்டு, அது 16.07.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 பிரிவு 17எ-ன் படி, 16.10.2025 தேதியிட்ட இந்திய அரசிதழ் அறிவிப்பு எண். S.O. 4698(E) இல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கனக்கடுப்பு ஆணையர் அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்-சோதனையை நடத்த இருக்கிறது.
இந்த முன்-சோதனையானது, 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்மொழியப்பட்ட கருத்துக்கள், நடைமுறைகள், கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெறவுள்ளது.
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். இந்த முன்-சோதனையின் முடிவுகள், 2027 ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.
முதல் முறையாக, முன்-சோதனையின் போது, மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) வலைத்தளம் மூலம் இந்த முழு செயல்பாடுகளும் நிர்வகிக்கப்படும். இது நிகழ்நேர மேற்பார்வை மற்றும் முன்னேற்ற கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்ட வலைத் தளமாகும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை 10.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெறவுள்ளது, இதனுடன் 01.11.2025 முதல் 07.11.2025 வரை சுய-கணக்கெடுப்பு (Self-enumeration) செய்வதற்கான முன்- சோதனையும் நடைபெறவுள்ளது.
முன்-சோதனைக்காக தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:
• கிராமப்புற பகுதி - அஞ்செட்டி தாலுக்கா, கிருஷ்ணகிரி மாவட்டம்
• கிராமப்புற பகுதி - ஆர்.கே. பெட் தாலூக்காவின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்டம்
• நகர்ப்புற பகுதி - மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம், முன்-சோதனை சுமூகமாக நடைபெறுவதற்கு, தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.
மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலுள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள். களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன்-சோதனையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். களப்பணியாளர்களுடன் துல்லியமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் அது, கணக்கெடுப்பின் போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகள் மற்றும் செயல்முறைகளைச் செம்மைப்படுத்த உதவும்.
இந்த முன்-சோதனையானது, 2027-ஆம் ஆண்டு வெற்றிகரமான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வழி வகுக்கும். நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2027 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அதிக துல்லியம், செயல்திறன் மற்றும் தயார்நிலையை உறுதி செய்ய இந்தப் முன்-சோதனை பயிற்சி உதவும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான்,அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் எடுத்து வைக்க வேண்டும்.
- இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு.
வணக்கம்.
நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு. உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.
சூழ்ச்சியாளர்கள். சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.
தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை. அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.
கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
இவ்வாறு கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
- தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கு விற்பனையானது.
- சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கடந்த 17-ந் தேதி விலை உச்சத்துக்கு சென்றது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது.
இப்படி இருந்த சூழலில் கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.
இதனையடுத்து தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் பிற்பகலில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 920 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனையாகிறது.
இதன்மூலம் கிராமுக்கு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை , இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170
24-10-2025- ஒரு கிராம் ரூ.170
- விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.
- எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது விவசாய பணிகளில் பெரும்பாலான பொறியியல் படித்த இளைஞர்கள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி செய்து விட்டு தாயகம் திரும்பிய இளைஞர்களும் ஆர்வம் காட்டி அவர்களது பூர்வீக நிலங்களைக் கொண்டும், விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாயத்தில் ஆர்வமாக விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை, தோட்டகலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை மூலம் புதிய, லாபகரமான முன்னோடி விவசாயம் செய்யும் பகுதிகளுக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு அழைத்துச் சென்று எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
இதற்காக இளைஞர் களால் வேளாண்மை மேம்பாட்டு திட்டம் போன்ற ஒரு திட்டத்தை தமிழக வேளாண்மைத் துறை கூட்டுக் குழுவாக செயல்பட்டு உடனடியாக நிறைவேற்றி விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களின் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
- தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம்.
திருப்பூர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
எல்லோரோடும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு பெரிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்திருக்கிறான். தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். அ.தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நான் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் சார்ந்த இயக்கத்தினுடைய கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை.
அன்றைக்கு கம்யூனிஸ்ட் சகோதர கவுன்சிலர்களோடும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். அதனால்தான் என்னவோ என்னை கட்சி அரசியலில் இருந்து இறைவன் விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எதுவுமே நம்முடைய முடிவிலே மட்டும்தான் நம்முடைய பயணம் தொடர்கிறதா என்று கேட்டால் என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை.
நாம் ஒரு திசையில் பயணிப்போம் என்று நினைப்போம். அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம். அதே தான் நம்முடைய முழு வாழ்வும் என்கின்ற நிலை இருக்கும். ஆனால் கால சூழலும் இறைவனுடைய விருப்பமும் வேறாக இருக்கும். பங்களாதேஷ்க்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நினைக்கவே இல்லை. அரசியல் ஈடுபாடு என்பது எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது.
பள்ளியிலே படிக்கின்ற போது மாணவர் தலைவனாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். அவினாசி சுந்தரமூர்த்தி நாயனார் அருள் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நான் இந்த இடத்திலே உங்கள் முன்பாக நிற்பதற்கான வாய்ப்பே நிச்சயமாக சத்தியமாக இல்லை.
என்னுடைய ஜாதகத்தை ஒருவர் பார்த்து சொன்னார். நீ இரண்டு முறையாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று. அவரது வாழ்க்கை முழுவதும் தொழில் ஜோசியம் அல்ல. அவர் அரசியலில் ஒரு பொறுப்பிலே இருக்கிறார். அவர் சொன்னதும் உடனே எனக்கு சிரிப்பே நீக்கவில்லை. நான் சார்ந்து இருக்கிற இயக்கத்திலே நான் ஒரு முறை கவுன்சிலர் ஆனாலே பெரியது என்று சொன்னேன். இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் சொன்ன வாக்குப் பலித்திருக்கிறது. காங்கயத்தை சேர்ந்த நாவிதர் ஒருவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் அரசியலை விட்டு விலகி விடாதீர்கள் என்றார். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும்.
எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. வாழ்க்கையில் ஒருவன் பிறந்து விட்டான் என்று சொன்னால் அவன் இறக்கின்ற வரை உழைக்க வேண்டும் என்பதுதான். நான் என்னுடைய தகப்பனாரோடு பல நேரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பேன். அவர் சொன்னது ஒன்று என்னுடைய மனதில் என்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். எவ்வளவு வசதி வந்தாலும் எவ்வளவு அதிகாரம் உன்னிடத்தில் வந்தாலும் சாப்பிடுகிறவரை நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் உனக்கு தருகின்ற உணவு உழைக்காமல் வரக்கூடாது. ஒருவர் தலைவராக உயர்கிறார் என்று சொன்னால் அவரிடத்தில் ஏதாவது ஒரு பண்பு இருந்தால் மட்டும்தான் அவர் தலைவராக உருவாக முடியும். நான் சார்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிக எதிரானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்பொழுது தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல . ஆனால் கலைஞர் கருணாநிதி இடத்தில் எனக்கு ஒன்று பிடிக்கும். எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத ஒரு தலைவர் . தோல்வியைப் பற்றி துவண்டு விடாமல் அவர் தொடர்ந்து உழைத்தார். கடுமையாக முயற்சிக்காமல் யாராலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியாது.
தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம். குறிக்கோளை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், சத்தியமும் தர்மமும் அந்த பயணத்தில் இருக்க வேண்டும். அடுத்தவரை வீழ்த்துவதை விட தான் உயர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
திருப்பூர் பின்னலாடைக்கு எத்தனையோ சரிவுகள் வந்துள்ளது. ஆனால் இன்றைய சரிவு நம் கையில் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏற்றுமதி இதைவிட 2 மடங்காகும் நாள் விரைவில் வரும். அதுவரை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பேசினார்.
- சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது.
அந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டிப்பட்டி பழனிசாமி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கியது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக போராடியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர் சிறுத்தையை மீட்டு பார்த்ததில் சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுத்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
- நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
- சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.






