என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா - மதுரையில் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
- மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.
பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்.
நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.






