என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை.
    • ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.

    இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன்படி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு இன்று நேரில் சென்ற அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

    பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூன் மாதம் 23-ந்தேதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்தது தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    அண்ணாமலை கூட்டு சதி செய்து எங்கோ ஒரு இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து கொடுத்ததாலேயே மக்கள் இறந்துள்ளனர் என்று சொல்லி இருந்தார்.


    ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்து எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

    அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை. என் மீது எத்தனையோ பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் கூறப்பட்டுள்ளன.

    ஆனால் நான் யார் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லை தாண்டி சென்று விட்டது. 80 வயதை தாண்டிய அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் காலம் முழுமையாக முடிந்து விட்டது என்பதை தெரிந்த பிறகு அவரது வாயில் இருந்து அவதூறு மற்றும் பொய் பேச்சுகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன.

    அதனுடைய வெளிப்பாடாகத்தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு நான்தான் காரணம் என்று குற்றம் சுமத்தி உள்ளார்.

    இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளோம். இந்த பணத்தை அவரிடமிருந்து பெற்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக அங்கேயே ஒரு முகாம் அமைக்க உள்ளோம். அதுவே எங்கள் நோக்கம்.

    எனவே இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம். ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.


    இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கை கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்வோம். இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.வை யாரும் எதிர்காமலேயே இருந்தனர். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறோம்.

    அவரிடமிருந்து பெறப் போகும் ரூ.1 கோடி பணத்தை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப் போவதாகவும் அபிடவிட் மனுவில் தெரிவித்து உள்ளோம்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி என்னைப் பார்த்து சின்னப் பையன் என கூறியிருந்தார். யார்-யாரையெல்லாமோ நான் சிறைக்கு அனுப்பி இருந்தேன். எனது கையில் ஜாதக ரேகை நன்றாக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    இந்த சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை என்ன செய்யப்போகிறார்? என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் நாங்கள் விடப் போவது இல்லை. எல்லோரும் ஒதுங்கிப் போவதால்தான் பி.ஏ. படித்தவர்களை அவர் நாய் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவத்தை தாண்டி அட்டூழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். டாஸ்மாக் மது விற்பனை பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். யாரெல்லாம் சாராய ஆலை வைத்துள்ளனர். முறையாக தயாரிக்கப்படுகிறதா? என்பது பற்றியெல்லாம் விசாரணை நடத்த வேண்டும்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சியினரே கேட்கிறார்கள். அது போன்ற ஒரு விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.
    • கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). பெயிண்டர்.

    இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு ஹரிணி (9), சிவானி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். தங்கராஜ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதேபோல் சம்பவத்தன்று இரவும் தங்கராஜ் குடிபோதையில் வந்து மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளார்.

    மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.

    இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் தங்க ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருந்த நான் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டேன். இதைப்பார்த்து எனது மனைவி, 2-வது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். அதன்பேரில் தங்கராஜ் மீது போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    விசாரணையின் போது தங்கராஜ் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் தங்கராஜே தண்ணீர் தொட்டியில் தள்ளி அவர்களை மூச்சு திணறடித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் குதித்த புஷ்பா, மூடியை மேலே தள்ளி விட்டு வெளியே வந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் குடிபோதையில் இருந்த தங்கராஜ், மூடியை திறக்க முடியாதவாறு தடுத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அதன் முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும்.

    பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற விவரம் தெரியவரும். அதன்பிறகே தங்கராஜ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 3 பேரும் கொல்லப்பட்டது உறுதியாகும்பட்சத்தில் தங்கராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என போலீசார் தெரிவித்தனர்.

    கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நஞ்சுண்டாபுரத்தில் அவர்களின் இறுதிச்சடங்குகள் நடந்தன.

    • துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (11-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையடுத்து துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அழிஞ்சிவாக்கம் ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர். ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை,கணேஷ் நகர், சாய் கிருப நகர், சங்கீதா ஓட்டல், சித்தி விநாயகர், பண்ணை ஸ்ரீநகர் விஷ்ணு பவன், மாதவராவ் பெட்ரோல் பங்க், இருளிப்பட்டு எம்.கே. கார்டன், அத்திப்பட்டு விருந்தாவனம் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது.
    • மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை ஏலத்தில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லுமா? என்பதே இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், அதனடிப்படையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதன் காரணமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன. இத்தகைய சூழலில் செல்லுமா, செல்லாதா? என்றே தெரியாத ஒரு தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது எந்த வகையில் நியாயம்?

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே பொதுமானது, மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படாமல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும், மாணவர்கள் அவர்களின் விவரங்களை மட்டும் வழங்கினால் போதுமானது, பல்கலைக்கழக நிர்வாகமே கலந்தாய்வுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, மத்திய அரசால் நடத்தப்படும் கலந்தாய்வின் மூலம் கண்டிப்பாக இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும், முன்கூட்டியே பதிவு செய்து முன் தொகை செலுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படும் என்றெல்லாம் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தனியார் பல்கலைக்கழகங்களின் இத்தகைய செயல்பாடுகள் புதிதல்ல. நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருபவை தான். தகுதி மற்றும் தரவரிசையைப் பற்றிக் கவலைப்படாமல் அணுகும் மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ இடங்களை ஒதுக்குவது எவ்வாறு சாத்தியம்?

    நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது. அதே நேரத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் தனியார் கல்லூரிகளை அணுகும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இடம் ஒதுக்குகின்றன. இது சமூக அநீதி ஆகும்.

    தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் ஓராண்டில் கூட இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை. மருத்துவக் கல்வி வணிகமயமாக்குவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு இனியும் தொடரக்கூடாது. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

    • போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் செம்மேடு காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிக்கு சென்றபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகம்படும்படி கையில் வெள்ளை நிற கேனுடன் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசார் வருவதை கண்டதும் கேனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

    உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், பென்னாகரம் அருகே மஞ்சாரஅள்ளியை அடுத்த டி.சோளப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது51) என்பவர் 10 லிட்டர் கேனில் கள்ளச்சாரயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர்.

    • மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.

    இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (11-ந்தேதி) ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.

    இதை தொடர்ந்து 20 புதிய நகர பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் விழா மேடை வந்தடைகிறார்.

    இதனை அடுத்து கலெக்டர் சாந்தி வரவேற்புரையாற்றுகிறார்.

    காலை 11 மணிக்கு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கலெக்டர் சாந்தி நினைவு பரிசுகளை வழங்குகிறார். விழா அரங்கில் திட்டப்பணிகளின் குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து 11.10 மணிக்கு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.20 மணிக்கு பேரூரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வரை சாலையில் வழிநெடுங்கிலும் தொண்டர்கள் தி.மு.க. கட்சி கொடியை கட்டி வருகின்றனர்.

    • தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
    • அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

    தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

    தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்போது தான் காலியாக உள்ள பிற ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை மேலும் சீரழித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, காலியாக உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தவுலத் மகள் சுமையா பேகம் (வயது 22).

    இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 5-ந் தேதி 2 பேரும் வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் மூலம் சென்னைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் 2 பேரும் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • 2024ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.

    2024ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடிய அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும், கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
    • இன்று இரவில் இருந்து 13-ந்தேதி காலை வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு செய்வது தாமதமானது. அதன்பிறகு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    இன்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது. பின்னர் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று இரவில் இருந்து 13-ந்தேதி காலை வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
    • வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது42) இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ஏழுமலை என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கனிமொழிக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஏழுமலை கனிமொழியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் கனிமொழி தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மீது ஏழுமலை ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கனிமொழி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று 11.30மணியளவில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனிமொழியை கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கனிமொழிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போலீசார் கனிமொழியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனிமொழிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது.
    • சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

    அடர்ந்த மலை பகுதியாக உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன.

    இதனிடையே இந்த வனப்பகுதியில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமிக்க தாசம்பாளைத்தில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை திடீரென்னு தடுப்பணையில் படுத்தவாறு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அந்த பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் ஆண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் யானை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் யானை தண்ணீரில் படுத்தவாறு உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதால், சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×