என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்
அ.தி.மு.க.வில் பயணித்து வந்த மனோஜ் பாண்டியன் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு, 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதன்பின், அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
- பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டோம்.
* சந்தேகத்திற்கு இடமானவர்கள் வெள்ள கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர்.
* போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
* கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
* கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிவகங்கையை சேர்ந்தவர்கள், 15 ஆண்டுகளாக கோவையில் உள்ளனர்.
* சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன.
* சம்பவ இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 3 பேரும் கல்லை கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம்பெண்ணை தூக்கி சென்றனர்.
* கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை தூக்கிச்சென்றனர்.
* பிடிபட்ட மூவரில் 2 பேர் இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளிகள்.
* கைது செய்யப்பட்ட சதீஸ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர்.
* சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் 3 பேரும் சிக்கி உள்ளனர்.
* பிருந்தாவன் நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணி சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் சம்பவம் நடந்துள்ளது.
* இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
* கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு 15 நிமிடத்திலேயே சென்றாலும் போலீசாரால் உடனடியாக கண்டறிய இயலவில்லை.
* பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
* பிடிபட்டுள்ள 3 பேரும் கூலிப்படையுடன் தொடர்புடைய நபர்களாகத் தெரியவில்லை. விசாரணைக்குப்பின் தெரியவர வாய்ப்பு உள்ளது.
* 3 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
- 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
சென்னை:
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று வெளியிட்டார். அதன்படி,
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும்.
* 8.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
* 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
* 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படும்.
* 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந்தேதி வெளியிடப்படும்.
- வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும் போது முன்கூட்டியே அந்த தெரு மக்களுக்கு இன்று முன்அறிவிப்பும் செய்யப்பட்டது.
- 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலுக்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் வீடு வீடாக தொடங்கி உள்ளது.
பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது.
இதற்கான பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதால் அதன் அடிப்படையில் இன்று வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இவர்களிடம் கடந்த 2002-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதால் அதன் அடிப்படையில் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏதாவது ஒன்றை இணைத்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
புதிய வாக்காளராக பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-யை நிரப்பி தர வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள். அப்போது தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து இடம் பெயர்ந்து வந்த வாக்காளர்கள் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.
பகுதி அளவு நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். அதில் தொடர்புடைய வாக்காளர்களின் பெயர், முகவரி விபரம் இடம் பெற்று உள்ளது. இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் 2002-ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால் மற்ற விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
முகவரி மாறியவர்கள், இதற்கு முன்பு வேறு ஒரு தொகுதியில் அவர்கள் இருந்த பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் தேர்தல் ஆணையம் கூறி உள்ள ஆதார் உள்பட 12 ஆவணங்களில் விண்ணப்ப படிவத்தில் வாக்காளர்களின் புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கு இடம் விடப்பட்டு உள்ளது. அதில் வாக்காளர்கள் தங்களது சமீபத்திய கலர் போட்டோ ஒட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இணையதளம் மூலமும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி அனுப்பலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளதால் இதற்காக பகுதியளவு முன் நிரப்பப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தை இ.சி.ஐ.என்.டி. செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம். அல்லது voters.eci.gov.in இணையதளத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்.
வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும் போது முன்கூட் டியே அந்த தெரு மக்களுக்கு இன்று முன்அறிவிப்பும் செய்யப்பட்டது.
ஊழியர்கள் விண்ணப்பத்துடன் வீடு வீடாக வரும்போது அவர்களுடன் கட்சி நிர்வாகிகளும் உதவுவதற்காக உடன் வந்தனர்.
இன்று விண்ணப்பம் வழங்கிய வீடுகளில் மெதுவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வைத்திருங்கள். இன்னொரு நாளில் வந்து விண்ணப்பத்தை வாங்கிக் கொள்கிறோம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம் என்றும் உரிய ஆவணங்களை காட்டி விண்ணப்பிக்கலாம் என்றும் எடுத்துக் கூறினார்கள்.
அதுமட்டுமின்றி டிசம்பர் 9-ந்தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதை அப்போது உறுதி செய்ய முடியும் என்று எடுத்துரைத்தனர்.
வாக்காளர் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கொண்டு பூர்த்தி செய்யவும், தகுந்த ஆலோசனை வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- செங்கோட்டையன் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விரைந்து விசாரிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார். கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதி உள்ள கடிதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விரைந்து விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது உண்மையான அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
- நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையானது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனிடையே, தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.
இதனை தொடர்ந்து, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,800
02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480
01-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480
31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-11-2025- ஒரு கிராம் ரூ.168
02-11-2025- ஒரு கிராம் ரூ.166
01-11-2025- ஒரு கிராம் ரூ.166
31-10-2025- ஒரு கிராம் ரூ.165
30-10-2025- ஒரு கிராம் ரூ.165
- பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர்.
- போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிப்புக்குள்ளான அம்மாணவி, காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை துடியலூரில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல் நிபுணர் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.
- இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம்.
- 2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும்.
சென்னை:
இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த பணி 2-ம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த பணிகள் இன்று தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம். முதல் கட்டமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) 4-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள்.
2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்படும்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதையடுத்து ஓரிரு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வருகிற 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி 63 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை வசதி இருக்கிறது. இதில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 204 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 1 லட்சத்து 79 ஆயிரத்து 535 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை மற்றும் 60 லட்சத்து 19 ஆயிரத்து 723 கிலோ மீட்டர் இதர சாலைகள் ஆகும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணத்தை தனியார் சுங்க கட்டணம் அமைத்து வாகன ஓட்டிகளிடம் வசூலித்துக்கொள்கிறார்கள். சுங்க கட்டணம் வசூலித்துக்கொள்கிறார்களே தவிர, நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து வருகிறது. மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற இடர்களை தவிர்க்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவர சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை முடிவெடுத்துள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட 500 மீட்டர் தொலைவில் 2-வது தடவையாக விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
விபத்து நடந்த மறு ஆண்டு மீண்டும் விபத்து பதிவானால் காண்டிராக்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பந்த பணிகளை எடுத்த காண்டிராக்டர்கள் மாதத்துக்கு ஒரு முறை கட்டுமான பணிகளின் நிலை குறித்து டிரோன்கள் மூலம் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
- 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
கோவையில் நேற்றுமுன்தினம் இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.
பாதிப்புக்குள்ளான அம்மாணவி, நேற்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர்.






