என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
    • சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் 2-வது தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் வீடு, தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு ஆகியவற்றிலும் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக தொழில் அதிபர்களின் வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதன் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • அருள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார்.
    • அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார்.

    சேலம்:

    சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் இன்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலம் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் கார்களை வழிமறித்து நிறுத்தி அருள் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் திடீரென அவர்கள் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மற்றும் அவருடன் சென்ற 15-க்கும் மேற்பட்ட கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்து சேதமானது.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அருள் எம்.எல்.ஏ.வை மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அருள் எம்.எல்.ஏ. கூறும்போது, என்னை கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தார்.

    • தற்போது புதியதாக நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்து தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர்.
    • திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    மேலும், அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனும் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    துணை பொதுச்செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டதால் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். 

    • தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தான்.
    • கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து 36 மணி நேரம் கழித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவிக்கு நடந்த கொடுமைக்கு தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், இந்தக் கொடுமைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார் முதலமைச்சர். தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொடூர நிகழ்வில் தமது தோல்வியை மூடி மறைக்க முதலமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது.

    கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதும் அரசு மற்றும் காவல்துறையின் அடிப்படைக் கடமைகள் ஆகும். இவற்றைக் கூட செய்ய முடியவில்லை என்றால் ஓர் அரசு அரசாகவும், காவல்துறை காவல்துறையாகவும் இருக்கத் தகுதியற்றவையாகி விடும். எனவே, குற்றவாளிகளை கைது செய்ததையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிட்டிருப்பதையும் சாதனையாகக் கூறி கடமை தவறியதிலிருந்து தப்பிக்க முடியாது.

    கோவையில் நடந்திருப்பது, கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய மூன்றாவது பாலியல் வன்கொடுமை ஆகும். கடந்த ஆண்டு திசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும், கடந்த ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இனி இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வந்தது. ஆனால், கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறித் தான் ஆக வேண்டும்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். அவற்றின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; அதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது; இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் நான் நேரில் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை. அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளன.

    அடுக்குமொழி வசனங்களை பேசுவதன் மூலமாகவும், கோவையில் நடந்த கொடுமையை 'வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலை' என்று கூறி மிகவும் எளிதாக கடந்து போவதன் மூலமாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர் மீது படிந்திருக்கும் கறைகளை துடைத்தெறிய முடியாது. ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்களிலாவது தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.
    • சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.

    இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

    இந்த உத்தரவைக் காரணம் காட்டி, அறிவாலயம் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    'குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக' தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன்.

    சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
    • தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கோவை:

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வர உள்ளார்.

    அப்போது அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதனையடுத்து துணை ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து 6.30 மணிக்கு சாலை மார்க்கமாக கோவை பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்புராயன் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் 10,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் ராஜ்பூர் சென்றடைகிறார்.

    துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் ஒன்னிபாளையம் கருப்புராயன் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிவரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே துணை ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக மாநகர அளவில் 500 போலீசாரும், புறநகர அளவில் 1000 போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
    • பேருந்தில் பயணித்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடிவந்தநிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மதுக்கரை பகுதியில் அ.தி.மு.க.வினர் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினர். பேருந்தில் பயணித்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி அ.தி.மு.க.வினர் பெப்பர் ஸ்பிரே வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-

    * தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    * வேறொரு கட்சியின் சொல்பேச்சை கேட்டு அ.தி.மு.க. வழி நடத்தப்படுகிறது.

    * பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக அ.தி.மு.க மாறிவிட்டது.

    * இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார். 

    • கோவையில் 300 சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோவையில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.

    * கோவையில் பல இடங்களில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. பொதுமக்களும் அதனை கவனிக்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

    * பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.

    * தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

    அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

    அ.தி.மு.க.வில் பயணித்து வந்த மனோஜ் பாண்டியன் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு, 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதன்பின், அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
    • பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

    கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டோம்.

    * சந்தேகத்திற்கு இடமானவர்கள் வெள்ள கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர்.

    * போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.

    * கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

    * கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிவகங்கையை சேர்ந்தவர்கள், 15 ஆண்டுகளாக கோவையில் உள்ளனர்.

    * சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன.

    * சம்பவ இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 3 பேரும் கல்லை கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம்பெண்ணை தூக்கி சென்றனர்.

    * கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை தூக்கிச்சென்றனர்.

    * பிடிபட்ட மூவரில் 2 பேர் இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளிகள்.

    * கைது செய்யப்பட்ட சதீஸ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர்.

    * சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் 3 பேரும் சிக்கி உள்ளனர்.

    * பிருந்தாவன் நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணி சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் சம்பவம் நடந்துள்ளது.

    * இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    * கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு 15 நிமிடத்திலேயே சென்றாலும் போலீசாரால் உடனடியாக கண்டறிய இயலவில்லை.

    * பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

    * பிடிபட்டுள்ள 3 பேரும் கூலிப்படையுடன் தொடர்புடைய நபர்களாகத் தெரியவில்லை. விசாரணைக்குப்பின் தெரியவர வாய்ப்பு உள்ளது.

    * 3 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
    • 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று வெளியிட்டார். அதன்படி,

    * பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும்.

    * 8.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

    * பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    * பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

    * 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.

    * 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படும்.

    * 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந்தேதி வெளியிடப்படும்.

    ×