என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இன்று மாலை திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி- டிரோன்கள் பறக்க தடை
- துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
- தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோவை:
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வர உள்ளார்.
அப்போது அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து துணை ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து 6.30 மணிக்கு சாலை மார்க்கமாக கோவை பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்புராயன் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் 10,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் ராஜ்பூர் சென்றடைகிறார்.
துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் ஒன்னிபாளையம் கருப்புராயன் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிவரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே துணை ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக மாநகர அளவில் 500 போலீசாரும், புறநகர அளவில் 1000 போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






