என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- இனறு காலை மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைந்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கனிமொழி எம்.பி., அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
- திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது.
- பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை.
அதிமுக சார்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள இந்த சமயத்தில், பெண்களை மிகவும் கொச்சையாக, ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை Award-ஆக வழங்கி, அழகு பார்த்துள்ளது அறிவாலயம்.
ஆபாசமாக, அவதூறாக, இன ரீதியாக இழிவுபடுத்தி பேசினால் பெயருக்கு ஒரு நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்கள் சேர்த்து மீண்டும் அதே பதவி வழங்கப்படுவதே திமுக-வின் பார்முலா!
பள்ளி, கல்லூரி, ஏர்போர்ட் வரை எந்த பக்கமும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டின் ஆட்சியைத் தள்ளிய கட்சியான திமுக, இந்த நியமனத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களுக்கு சொல்லவரும் செய்தி ஒன்றுதான்:
திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை.
இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளார்.
- இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது.
- தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17-ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21-ஆம் தேதி ஆங்கிலம், 23-ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25-ஆம் தேதி அறிவியல், 27-ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2-ஆம் தேதி இந்தி, மார்ச் 7-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 21-ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23-ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத்தேர்வை எழுத வேண்டியிருக்கும்.
இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23-ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.
மாறாக, இந்தி பாடத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதிதான் நடைபெறும் என்பதால், அப்பாடத்தைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுக்கும், அறிவியல் தேர்வுக்கும் இடையில் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் அறிவியல் தேர்வுக்கு நன்றாக படிக்க முடியும்.
அதேபோல், இந்தி பாடத் தேர்வுக்கு முந்தைய கணினி அறிவியல் பாடத் தேர்வுக்கு இரு நாள்களும், பிந்தைய சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 4 நாள்களும் இருப்பதால் அந்தப் பாடங்களை அவர்களால் நன்றாக படிக்க முடியும். இந்தித் தேர்வுக்கு இரு நாள் இடைவெளி இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை இரண்டாம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரானது ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார்.
- திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.
2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் மனோஜ் பாண்டியன். எடப்பாடி பழனிசாமி- ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்.
திமுக-வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட போது என்னை அவர் முழு மன தோடு வரவேற்றார். நான் இன்று மாலை எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்.
தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைக்காமல் தமிழகத்தின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளை யும், அதனால் ஏற்படும் சோதனைகளையும் எதிர் கொண்டு தமிழக உரிமை களை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்.
எந்த கொள்கைக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ அதே கொள்கையில் ஜெயலலிதாவும் பயணித்து வந்தார். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை வழி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உணர்வு களை மதிக்காத தலைவராக உள்ளார். பா.ஜனதா கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னவர் பிறகு மீண்டும் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை.
இதுபற்றி தொண்டர்கள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. பா.ஜனதா கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி தி.மு.க.வில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.
திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்.
அ.தி.மு.க.வை தோற்றுவித்த தலைவரும், அம்மாவும் எந்த சூழ்நிலையிலும் கட்சியை அடகு வைக்கவில்லை. ஆனால் இன்றைய அ.தி.மு.க. வேறு ஒரு இயக்கத்தை நம்பி உள்ளது. எனவே நான் எஞ்சிய வாழ்க்கையை தி.மு.க.வில் பயணிக்க முடிவு செய்து உள்ளேன். இது நான் எடுத்த தீர்க்கமான முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் திமுக-வில் இணைந்தது குறித்து வைகைச்செல்வன் கூறியதாவது:-
தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார். திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.
இவ்வாறு வைகைச் செல்வன் தெரிவித்தார்.
- பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்கக் கோரி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தலைமைச்செயலாளர் வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்தது.
பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
மக்களின் பணத்திற்கு அரசு அறங்காவலர்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது.
- அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடிஆறு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
கடந்த மாதம் 27ந் தேதி அணையின் நீர்மட்டம் 70.24 அடியாக உயர்ந்தது. அதன்பின்பு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியாறு பிரதான கால்வாய் வழியாகவும், 58-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. வரத்து 2176 கன அடி. திறப்பு 3499 கன அடி. இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது.
இதேபோல் முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்வரத்து சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. வரத்து 927 கன அடி. திறப்பு 1800 கன அடி. இருப்பு 6395 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் நீர் இருப்பு 252 மி.கன அடியாக உள்ளது.
சண்முகாநதி அணையின் நீர் மட்டம் 51.10 அடி. திறப்பு 14.47 கன அடி. இருப்பு 75.04 மி.கன அடி.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
சென்னை:
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது.
- நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரமாக மாறி உள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டு பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.
ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.
துரோகத்தைப் பற்றி, சமூக நீதி, சுயமரியாதை பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழன் என்று வந்தால் பார்ப்பனர்கள் நானும் தமிழன் என்று உள்ளே வந்து விடுவார் என்று வீரமணி போன்றவர்கள் பேசுகிறார்கள்.
அதே கருத்தை தான் அ.தி.மு.க.வினரும் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா தலைமையை இவர்கள் எப்படி ஏற்றார்கள்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் பா.ஜ.க. தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்து பார்க்கிறார்கள். அப்போதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும்.
ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. 2 மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும். பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டு வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செய்கிறார்கள்.
அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றும் ஒரு பீகாராக மாறிவிடும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நான் சொன்ன அதே கருத்தை தான் நடிகர் அஜித்தும் தெரிவித்து உள்ளார். இந்த முறையே தவறு, இது போன்ற கலாச்சாரமே தவறு என்று தான் அஜித் கூறுகிறார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் பொதுவான இடத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் அங்கு வந்து பேசிவிட்டு செல்லட்டும். மக்கள் அதை பார்த்து ஓட்டு போடட்டும். இதைத்தான் அவரும் சொல்கிறார்.
மற்ற நாடுகளில் இங்கு செய்வது போன்ற பிரசாரம் போன்ற நிலை இல்லை.
வருகின்ற தேர்தலில் இங்கு கட்சிகளுக்கு போட்டி அல்ல கருத்துகளுக்கு தான் போட்டி. நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உடன் இருந்தார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில், மியான்மார் நகரக்கூடும். பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.
ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
6-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ந்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 மற்றும் 10ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை மத்தியகிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
- இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர்.
கோவை:
கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் லீலா உண்ணி, விமலா கண்ணம்மாள் முன்னிலை வைத்தனர். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மகஸே்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முட்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். அவர் கதறி அழுத பின்னரும் வக்கிர புத்தியுள்ள அந்த கும்பல் அவரை விடாமல் சீரழித்துள்ளது.
இந்த சம்பவத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்பேரில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்களை யாருக்கும் காட்டவில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா அல்லது போலி குற்றவாளிகளாக என்ற சந்தேகம் உள்ளது.
இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. தலைவர்கள் கண்டித்துள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னரை சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி. இதுவரை வாய் திறக்கவில்லை. அதேபோல கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. தி.மு.க. ஆட்சியில் 4150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமானோர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் பிரபாகரன், சிங்கைபாலன்,ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
- சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் 2-வது தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் வீடு, தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு ஆகியவற்றிலும் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தொழில் அதிபர்களின் வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதன் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






