என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார்.
    • நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக்கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

    இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

    குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

    "காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், "மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் " என தனது கருத்தை மாற்றினார்.

    அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை?

    "இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும்.

    நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?

    இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர்.

    மு.க.ஸ்டாலின் அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

    ஏனென்றால், In case you've forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.
    • மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர். கடந்த ஜூலை 9-ந்தேதி பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கள் நிலங்களை, முதன்முதலாக விமான நிலைய திட்டத்திற்கு வழங்கினார்கள்.

    கடந்த செப்டம்பர் மாத வரையிலான கணக்கீட்டின்படி, 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதியிலான கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக இழப்பீடு தொகையாக, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்திற்கு தேவையான மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும்.
    • அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை 2025 ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    அதேபோல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது. மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

    * அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும்.

    * தேர்தல் பிரசாரம், தர்ணா, பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுக்கு கொடிக்கம்பம், பேனர் வைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

    * அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது.
    • கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஆகும். ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு வருவது வழக்கம்.

    தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து அங்கிருக்கும் பூங்கா பகுதியில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். மேலும் அணையின் வெளிப்பகுதியில் விற்கப்படும் பொரித்த மீன் புகழ்பெற்றதாகும்.

    இந்நிலையில் பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு கரைகளிலும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனினும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிடித்து நிற்க வசதியாக பதிக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்திருந்தது.

    இதனால் கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சேதமடைந்த தடுப்புகளை ஊழியர்கள் சீர் செய்தனர். சீரமைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 நாட்கள் தடைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    • சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    தங்கம் விலை எகிறி வந்து, பின்னர் மளமளவென சரிந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல், ஏற்ற-இறக்கத்துடனேயே நீடிக்கிறது.

    அந்த வகையில் கடந்த 1-ந்தேதி முதல் விலை உயர்ந்து வந்து, நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,180-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,000

    03-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,800

    02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    01-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-11-2025- ஒரு கிராம் ரூ.165

    03-11-2025- ஒரு கிராம் ரூ.168

    02-11-2025- ஒரு கிராம் ரூ.166

    01-11-2025- ஒரு கிராம் ரூ.166

    31-10-2025- ஒரு கிராம் ரூ.165

    • ஆத்திரமடைந்த அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் ராஜேஷை தாக்கினர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதற்கிடையே கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கார் மீது கல்வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இருதரப்பினக்கும் வடுகத்தம்பட்டி பகுதியிலேயே மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    ராமதாஸ் அணி சார்பாக சேலம் தொகுதி எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்ட கார்களில் நேற்று காலை 11.30 மணியளவில் வடுகத்தம்பட்டி பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் பாக்கு காய்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், துக்க வீட்டிற்கு சென்ற நேரத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே இருந்த அன்புமணி ஆதரவாளரான விவசாயி ராஜேஷ் என்பவர், அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளரின் கார் கண்ணாடியை தட்டி இந்த இடத்தில் காரை நிறுத்த வேண்டாம், வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று சொன்னதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் ராஜேஷை தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் தொடா்ச்சியாக தான் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மீது தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம்.
    • அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன்.

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நான் 53 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னை யாரும் இயக்க முடியாது.

    * இ.பி.எஸ். குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகம் இருக்கிறது. மகன், மைத்துனர், மருமகன் தலையிடுகிறார்கள். மூத்த நிர்வாகிகளுக்கு அது இடையூறாக இருக்கும்.

    * மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம்.

    * அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன்.

    * யார் யாரிடம் பேசுகிறேன் என்பதை தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து.

    * தனது அடுத்தகட்ட நகர்வுகளால் நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

    த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.

    எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது. விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்துள்ளது.

    • இந்த மாதம் இயல்பைவிட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் 2 சுற்று மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையை கடந்த மோந்தா புயலால், ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

    வருகிற 7-ந் தேதி வரை வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்க உள்ளது.

    8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    இந்த மாதம் இயல்பைவிட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே கருத்தை சில தனியார் வானிலை ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

    ஆனால் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், நவம்பரில் (அதாவது இந்த மாதத்தில்) இயல்பைவிட அதிகமாக மழை பெய்யும் என்றும், முதல் பாதியில் வெயில் சுட்டெரித்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.

    வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதனைத்தொடர்ந்து 15-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும்.

    அதனையடுத்து 4-வது வாரத்தில் அதாவது 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்து, மழைப்பாதிப்பை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    • திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.
    • துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்.

    திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது- நீதிமன்றம்/ true essence of marital relationship lies in reciprocity, respect, friendship and kindness Court

    திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது- நீதிமன்றம்/ true essence of marital relationship lies in reciprocity, respect, friendship and kindness Court

    உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தன்னை தாக்கிய வழக்கில் கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து இந்திரா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் "இந்திராவின் கணவனர் தனசீலனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனையைமாற்ற குறைக்க தேவையில்லை. குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தது.

    மேலும், "திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது. திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.

    துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம். வீட்டிற்குள் நடக்கும் துன்புறுத்தல் பல நேரங்களில் நான்கு சுவருக்குள் மட்டுமே நிகழ்பவையாக இருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் எனக் கூறுவது அந்த சட்டப்பிரிவின் நோக்கத்தையே சிதைக்கும்" எனக் கருத்து தெரிவித்தது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம்,

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டம் முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி லாலாபேட்டை, தக்கம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட் பேஸ்-3, கல்மேல்குப்பம்,வில் வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், பெல் டவுன்ஷிப், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.

    • ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • இனறு காலை மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைந்தார்.

    முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கனிமொழி எம்.பி., அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

    ×