என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது
- வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும் போது முன்கூட்டியே அந்த தெரு மக்களுக்கு இன்று முன்அறிவிப்பும் செய்யப்பட்டது.
- 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலுக்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் வீடு வீடாக தொடங்கி உள்ளது.
பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது.
இதற்கான பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதால் அதன் அடிப்படையில் இன்று வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இவர்களிடம் கடந்த 2002-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதால் அதன் அடிப்படையில் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏதாவது ஒன்றை இணைத்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
புதிய வாக்காளராக பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-யை நிரப்பி தர வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள். அப்போது தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து இடம் பெயர்ந்து வந்த வாக்காளர்கள் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.
பகுதி அளவு நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். அதில் தொடர்புடைய வாக்காளர்களின் பெயர், முகவரி விபரம் இடம் பெற்று உள்ளது. இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் 2002-ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால் மற்ற விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
முகவரி மாறியவர்கள், இதற்கு முன்பு வேறு ஒரு தொகுதியில் அவர்கள் இருந்த பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் தேர்தல் ஆணையம் கூறி உள்ள ஆதார் உள்பட 12 ஆவணங்களில் விண்ணப்ப படிவத்தில் வாக்காளர்களின் புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கு இடம் விடப்பட்டு உள்ளது. அதில் வாக்காளர்கள் தங்களது சமீபத்திய கலர் போட்டோ ஒட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இணையதளம் மூலமும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி அனுப்பலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளதால் இதற்காக பகுதியளவு முன் நிரப்பப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தை இ.சி.ஐ.என்.டி. செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம். அல்லது voters.eci.gov.in இணையதளத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்.
வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும் போது முன்கூட் டியே அந்த தெரு மக்களுக்கு இன்று முன்அறிவிப்பும் செய்யப்பட்டது.
ஊழியர்கள் விண்ணப்பத்துடன் வீடு வீடாக வரும்போது அவர்களுடன் கட்சி நிர்வாகிகளும் உதவுவதற்காக உடன் வந்தனர்.
இன்று விண்ணப்பம் வழங்கிய வீடுகளில் மெதுவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வைத்திருங்கள். இன்னொரு நாளில் வந்து விண்ணப்பத்தை வாங்கிக் கொள்கிறோம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம் என்றும் உரிய ஆவணங்களை காட்டி விண்ணப்பிக்கலாம் என்றும் எடுத்துக் கூறினார்கள்.
அதுமட்டுமின்றி டிசம்பர் 9-ந்தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதை அப்போது உறுதி செய்ய முடியும் என்று எடுத்துரைத்தனர்.
வாக்காளர் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கொண்டு பூர்த்தி செய்யவும், தகுந்த ஆலோசனை வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






