என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெண்கள்தான் உண்மையான தெய்வங்கள்.
- குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வேதாத்திரிய வாழ்க்கை நெறி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெண்கள்தான் உண்மையான தெய்வங்கள். உயிர், உடல் கொடுத்து, தாய் தந்தையரின் ஞானத்தை குழந்தைக்குள் வைத்து, 10 மாதம் சிரமப்பட்டு, குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள்.
இப்படிப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் தெய்வங்கள் தான். இந்த மண்ணில் பிறந்ததற்கும், என்னை பெற்ற தாய்க்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
எனது 17 வயதில் யோகா செய்ய துவங்கினேன். எனது நாக்கில் காபி, டீ பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. கண் மூடினால் மனம் கெடக்கூடாது. இது நானாக உருவாக்கி கொண்ட வாழ்க்கை. அதுதான் தியானம்.
உடம்பும் மனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்வது வீண். வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைப்பட்ட வேதாத்திரி மகரிஷி மண்சோறு சாப்பிட்டு வாழ்ந்துள்ளார்.
திருக்குறள் நமக்கு மட்டுமின்றி, எதிர்கால தலைமுறைகளாக உள்ள குழந்தைகளுக்கும் பயன்படும். காந்தி, காமராஜர் உள்ளிட்ட அனைவரது வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்களில் திருக்குறள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி.
- விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி. அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.
கோவை:
காரமடை சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களை சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் இருந்து விமானம் மூலம் சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து சென்று வருகிறார்.
அதன்படி இந்தாண்டு 200 மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ள ஞானசேகரன், முதல்கட்டமாக இருமுறை தலா 50 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர்கள் காலை உணவுக்கு பிறகு மெட்ரோ ரெயில் மூலம் அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் ஞானசேகரன் அடுத்தகட்டமாக அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கோவை விமான நிலையம் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சென்னைக்கு விமானத்தில் பறந்தனர்.
முன்னதாக சென்னைக்கு விமானத்தில் செல்வது குறித்து மாணவிகள் கூறுகையில், இதுவரை தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை வெறும் கண்களில் மட்டுமே பார்த்து உள்ளோம்.
ஆனால் ஊராட்சித்தலைவர் உதவியால் நாங்களும் விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி என்று தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும்.
- இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு மற்றும் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து, ரெயில் தண்டவாளத்தை மண் மூடியது.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்ததால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை ஊட்டி மலை ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் முடிந்ததாலும், 23 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
23 நாட்களுக்கு பிறகு இன்று ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் சேவை தொடங்கியது.
- பூலித்தேவன் 309-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- பூலித்தேவன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
தமிழகம் முழுவதும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 309-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய பெருமைகளை எல்லோரும் அறிந்திடும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. சார்பில் பூலித்தேவரின் உருவச்சிலைக்கு நேரடியாக சென்று மலர்தூவி மரியாதை செய்ய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மாமன்னன் பூலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாமன்னன் பூலித்தேவன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
- 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
- நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல்.
மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தன.
அதன்படி, மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது.

தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினீயரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள், இதுதவிர அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள், தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.
அதேபோல், ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும், வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்கிறது.
அதன்படி, தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட உள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.
- பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை.
எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும்.
அந்த வகையில் செப்டம்பர் 1-ந்தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மட்டும் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50ஆக நீடிக்கிறது.
ஆனால், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.38 உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார்.
- என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம்.
சென்னை:
தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார். அதில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அளித்த தடம் பரிசுப் பெட்டகத்தில், நெல்லையில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளம், புலிகாடு பனை ஓலை ஸ்டாண்ட், கும்பகோணம் பித்தளை விளக்கு ஆகியவை அதில் உள்ளன.

பவானி ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர் என்பதை இந்த பரிசுப் பெட்டகம் வெளிப்படுத்துகிறது.
தடம் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தன்னை சந்திக்கும் விருந்தினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
- அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, "கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. அதனால் சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும்.
கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன்" என்று பேசினார்.
கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 வெளியாகவில்லை எனவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா(வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி யாஸ்பின்(47). இவர்களுக்கு இம்ரான்(27), முக்தார்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இம்ரான், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது-நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது உடல், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் காபியில் விஷம் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார், இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வீனை அவரது பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதை அவரது பெற்றோரால் கொடுக்க முடியவில்லை.
இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக ஊட்டியில் உள்ள ஒரு நகை கடையில் நகைக்கு பாலீஸ் போட பயன்படுத்தும் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்து உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
இதையடுத்து இம்ரான், யாஸ்பின், முக்தார் ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
வடமேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் (ஒடிசா) இருந்து தெற்கு- தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மறுநாள் முதல் முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
- சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
சென்னை:
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 -ந்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
- பார்முதலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது.
முன்னதாக இதற்காக மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கார்பந்தய பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட போலீசார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவக்குமார் உயிரிழந்தார்.
இந்நிலையில், பணியின்போது உயிரிழந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






