என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    • பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் பகுதியில் தர்மபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் வளைவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் வாகன ஓட்டிகள் நேரடியாக தண்ணீரில் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்தது. அதனை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இரும்பாலான பேரிகார்டு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் அந்த பேரிகார்டை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அதனை திருடிச் சென்றனர். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    தற்போது மர்மகும்பல் சரக்கு வாகனத்தில் வந்து இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (01-09-2024) அதிகாலை 0030-0230 மணி அளவில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்திற்கு அருகே கரையை கடந்தது.

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும். 27°-28° செல்சியஸை ஒட்டியும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 5-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

    இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
    • இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகள் விலை சீரற்ற நிலையில் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் உள்ளூர் வரத்து தக்காளிகள் அதிகமாக வருகிறது.

    இதனால் தக்காளி விலை நாள்தோறும் இறங்குமுகமாக காட்சியளிக்கிறது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.14 முதல் ரூ.17 வரை விற்பனையானது. உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்டது. மொத்த மார்க்கெட்டில் 6 கிலோ தக்காளி ரூ.100 என்று கூவி கூவி வியாபாரிகள் விற்றனர். தக்காளி விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இதேபோல் 3 கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயமும் நெல்லை, தென்காசியில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருவதால் விலை வெகுவாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சில்லறை விற்பனைக்காக வாங்கி செல்பவர்கள் ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தின் பிரதான காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து அவை ஏலம் விடப்பட்டு வருகிறது. காய்கறிகளை ஏலம் எடுப்பதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு வருவார்கள்.

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பெத்த நாடார்பட்டி, மகிழ்வண்ண நாதபுரம், அடைக்கலப்பட்டணம், மேலபட்டமுடையார்புரம், ஆலங்குளம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். தற்பொழுது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை தக்காளி கிலோ ரூ.20 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்தது.

    இதனால் தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதேநேரம் விலை குறைவால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர்.

    நெல்லை:

    மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில் இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துவிட்டு லேட்டரல் என்ட்ரி என்று சொல்லக்கூடிய பக்கவாட்டு அனுமதியின் மூலம் விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்பது விவசாயத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிறுவனம்.

    இதில் இட ஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படுவதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசுத் துறைகளில் எல்லா தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

    வக்பு வாரிய திருத்தச் சட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தீய நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

    மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.

    சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர். பாலியல் குற்ற வழக்குகளை ஒரு மாதத்திற்குள் விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு செல்வதற்காக ஆய்வு பணி நடைபெற்றது.
    • அருண்நேருவின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் அவ்வப்போது இரு கட்சிகள் இடையேயும் உரசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரத்துக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி. அருண்நேருவுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி உள்ளது.

    சென்னையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு செல்வதற்காக ஆய்வு பணி நடைபெற்றது. இதற்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து கார்த்தி ப.சிதம்பரம் தனது வலைதள பதிவில் விமர்சனம் செய்தார். அதில், "திருச்சிக்கு இப்போது இந்த திட்டம் தேவையா? தேவையில்லாத இதுபோன்ற திட்டங்களை கைவிட்டு நல்ல சாலை வசதிகளை செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், "கார்த்தி, நான் பெரம்பலூர் தொகுதி எம்.பி. இதில் அடங்கி உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் திருச்சியில் வருகின்றன. இந்த திட்டத்தை மக்கள் வரவேற்கிறார்கள். திருச்சி வளர்ந்து வரும் நகரம் என்பதை நீங்கள் அறியவில்லையா? வரும் காலத்தில் மக்கள் அரசு அலுவலங்கள் உள்பட பல பகுதிகளுக்கும் செல்வதற்கு மெட்ரோ ரெயில் கை கொடுக்கும். எனவே தேவையற்று பேசுவதை நிறுத்துவது நல்லது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    இதற்கிடையில் அருண்நேருவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைப் போர் இரு கட்சிகளுக்கு இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்தது.
    • கோடம்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

    போரூர்:

    கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் 12-ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளியும் உள்ளது.

    இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்தது.

    இதையடுத்து கோடம்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பிய மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புலித்தேவரின் 309-வது பிறந்த நாள்.
    • வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-வது பிறந்தநாள்!

    மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
    • விசாரணையில் பேராசிரியர்கள் உள்பட 4 பேரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து ஒருங்கிணைந்த சேவை மைய குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக்கல்லூரிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது இந்த குழுவினரிடம், கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள், இந்த கல்லூரியில் பணியாற்றி வரும் 2 தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்.சி.சி மாஸ்டர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான குழுவினர் நேராக வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து, புகார் அளித்தனர். புகாரின் பேரில் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பேராசிரியர்கள் உள்பட 4 பேரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பத்திரிகையாளருக்கும், ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம்.
    • சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

    தேனி:

    தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர்.

    ஆனால் அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவரை சூழ்ந்த நிருபர்கள் மலையாள சினிமா குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

    ஆனால் அவர் அந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார். இருந்த போதும் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ஜீவா உங்களுக்கு அறிவு இருக்கிறதா, நான் எந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

    இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
    • பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார்.

    அங்குள்ள சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 30-ந்தேதி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

    ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்கால திறன் ஆகியவற்றில் ஏ.ஐ. கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

    அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

    சான்பிரான்சிஸ்கோ நகரில் 5 நாட்கள் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (2-ந்தேதி) சிகாகோ நகரம் செல்கிறார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    • மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார்.
    • சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் நடிகை சனம் ஷெட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார்.

    போராட்டத்தில் பேசிய அவர், "நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட சொல்கிறார்கள். இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என் வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்கிற்கான பதிவுகளை பகிர முடியும். இதனால் சினிமா வாய்ப்பு கூட போனால் போகட்டும். பரவாயில்லை. எது போனாலும் நான் பேசுவேன்.

    மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார். ஹேமா அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது. பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது.

    ஆணுறுப்பை வெட்டி வீசினால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும். நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா? நீதிமன்றம், காவல்துறை, சட்டங்கள் எல்லாம் எதற்கு?"

    தமிழ்நாட்டில் 6 வயது 10 வயது குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்குது. ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது" என்று ஆவேசமாக பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×