என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது.
- சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் தி.மு.க. அரசு, தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
தி.மு.க. அரசின் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடித்த அந்தர் பல்டியைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இவ்வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, முதலமைச்சரின் ஏவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மழைநீர் சேகரிப்பின் காரணமாக சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததை சென்னை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்களும் பருவ மழைக்கு முன்பே தூர் வாரப்பட்டதன் காரணமாகவும், சென்னை சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் காரணமாகவும், கன மழையின்போது சென்னை சாலைகளில் மழைநீர் தேங்குவது பெரிய அளவு குறைந்தது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. விரைவில் பருவ மழையை சென்னை மாநகரம் எதிர் கொள்ள உள்ளது. கடந்த 40 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாருதல் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறும் தங்களது வேஷம் கலைந்துவிடுமோ என்றும், தி.மு.க. ஆட்சியின் மீது கூறப்படும் 4 ஆயிரம் கோடி ரூபாய் பற்றிய புகார்கள் மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்படுமோ! தங்களின் ஊழல்கள் அம்பலப்பட்டு விடுமோ! என்ற பயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.
"மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை" என்று தி.மு.க. அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இது போன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வை முடக்கிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
தி.மு.க. ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான். நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் புகார்.
- 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷ் என்பவர் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்திருந்த புகாரில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.290 கோடி மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிக்காக ரூ.246.39 கோடி மதிப்பிலான பணிகளை ஒப்பந்தம் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகவே எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநகராட்சி என்ஜினீயர்கள் உள்பட 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளில் விரைவில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முறைகேடு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் வீடுகளிலும் விரைவில் சோதனை நடத்துவது பற்றி உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றனர் .
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உடனேயே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் எஸ்.பி.வேலு மணி மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையிலும் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அதுபற்றி விரைவில் முடிவெடுத்து சோதனை நடத்துவோம் என்று தெரிவித்தார்.
- குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
- பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில,
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
- தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் கச்சேரி ரோட்டில் செய்யது அகமது என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன மெக்கானிக் ஒர்க்ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க்ஷாப் முன்பு பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 14 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் அங்கு 5 ஜெனரேட்டர்கள், 5 பேவர் பிளாக்கல் பதிக்கும் மெஷின்கள், 4 வாட்டர் பம்புகள், 3 கரும்புச் சாறு எடுக்கும் எந்திரங்கள், ஒரு களை வெட்டும் கருவி உள்ளிட்டவைகளும் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த வாகனங்களிலும் தீயானது பரவி பற்றி எரியத்தொடங்கியது.
உடனே சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அனைத்து இரு சக்கர வாகனங்கள், பழுது நீக்க வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் முழுவதும் தீயில் எரிந்தது.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.
வேலுார்:
வேலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இந்த பழக்கத்துக்கு ஆளான மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.
இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தம்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என கூறினர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களுடன் ஆன்லைன் மூலம் அவசர கூட்டம் நடந்தது.
இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் புத்தகப்பைகளில் கத்தி, செல்போன் போன்று தேவையில்லாத பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால், அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல், வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.
மேலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்கள் எடுத்து வர கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த உத்தரவுகளை இன்று முதலே பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காகத்தை அழைத்துச்சென்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிழல் பகுதியில் விட்டனர்.
- காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் அருகே டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) ஒன்றும் உள்ளது. சம்பவத்தன்று மின்மாற்றியின் மீது காகம் ஒன்று அமர்ந்திருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக காகத்தின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் காகம் சாலையில் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தது.
இதனை தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்த வெள்ளத்துறை என்ற தீயணைப்பு வீரர் பார்த்தார். உடனடியாக ஓடி சென்று அவர், காகத்தை தூக்கி பரிசோதித்து பார்த்தார்.
அப்போது காகம் இதயத்துடிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காகத்திற்கு மீண்டும் இதயத்துடிப்பை வரவைப்பதற்காக, தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்தார்.
பின்னர், காகத்தின் வாயில் காற்றை ஊதினார். இதில் சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது. தொடர்ந்து, அந்த காகத்தை அழைத்துச்சென்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிழல் பகுதியில் விட்டனர்.
சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்த காகம் அங்கிருந்து பறந்து சென்றது. மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் ஒருவர், சி.பி.ஆர்.சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும், காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.97,500-க்கு விற்பனையாகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து கடந்த 2 மாதமாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வந்தது. இதையடுத்து கடந்த 16-ந்தேதி சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இருப்பினும் கடந்த 3 தினங்களாக தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. அதன்படி கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,885-க்கும் சவரன் ரூ.55,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97.50-க்கும் கிலோவுக்கு ஆயிரத்து 500 உயர்ந்து பார் வெள்ளி ரூ.97,500-க்கு விற்பனையாகிறது.
- வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரை வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு வந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருதாசல அடிகளார் மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
- வக்பு வாரிய திருத்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
கோவை:
சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உள்ளது.
மத நல்லிணக்கத்துக்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலையே உருவாகி உள்ளது. இது கவலை அளிக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையையும், துணை முதல்-அமைச்சர் பதவியையும் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார். அதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் உரிய நேரத்தில் துணை முதல்-அமைச்சர் பதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கிறிஸ்தவ பாதிரியார்கள், அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் மதுக்கரை தாலுகா பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும் தெரிவித்த அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கல்லறை அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
- தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீமான் கூறிய கருத்து அமைந்துள்ளது.
- தமிழகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என்று கூறுவது கவர்னரின் அரசியல் விமர்சனம்.
கும்பகோணம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீமான் கூறிய கருத்து அமைந்துள்ளது. இது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற முயற்சி. தி.மு.க. கூட்டணிக்குள் பேசக் கூடிய அரசியலை கூட்டணிக்கு வெளியில் உள்ளவர்கள் பேசுவது ஏற்புடையது அல்ல.
அது அவர்களின் சூது, சூழ்ச்சி நிறைந்த ஒரு அரசியல். டெல்லியில் இருப்பது போல் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால் இங்கு ஆண்ட கட்சிகளாக அல்லது ஆளும் கட்சிகளாக இருக்கும் அ.தி.மு.க., தி.மு.க. தனித்து ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள் என்றுதான் அதற்கு பொருள். இந்த அடிப்படையை உணராத கட்சி அல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி.
கடந்த 1999-ம் ஆண்டு முதன் முதலில் தேர்தல் களத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அடி எடுத்து வைத்த போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் எங்களது முழக்கமாகும். எங்களுக்கே அந்த விழிப்புணர்வு இருக்கும் போது
நூற்றாண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதது அல்ல, கம்யூனிஸ்டு கட்சியினர் தெரியாதவர்கள் அல்ல.
எனவே எந்த நேரத்தில் எதை கேட்க வேண்டும்? எப்படி கேட்க வேண்டும்? அதற்கான காலம் கனிந்திருக்கிறதா? இதையெல்லாம் அறிந்தவர்கள் தான் தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றோம். எங்களுக்கு கேட்கவேண்டிய நேரத்தில் கேட்கும் வலிமை வரும்.
ஆளுங்கட்சி அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு யாரையும் துணை முதலமைச்சர் ஆக்கலாம். ஒருவர் அல்ல, பலரை கூட துணை முதலமைச்சர் ஆக்கலாம். எந்த அதிகாரத்தையும் அவர்கள் மாற்றிக் கொள்ளலாம்.
தி.மு.க. ஆட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பது தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் செயல் திட்டம்.
இந்தியாவிலேயே மிக சிறப்பான கல்வி திட்டங்களுடன் இயங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என்று கூறுவது கவர்னரின் அரசியல் விமர்சனம்.
அவர் அரசியல்வாதியாக தான் இருக்கிறாரே தவிர, கவர்னர் என்பதை மறந்து விடுகிறார். கவர்னராக இருந்து அவர் கருத்துக்களை சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
- விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.
கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024). மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு. நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.
தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.
விரைவில் சந்திப்போம்!!
வாகை சூடுவோம்!!
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
- சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என வரையறுத்தவர் ஜான் மார்ஷல்.
- பிரிட்டிஷாரின் தொல்லியல் துறை தலைவராக இருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என வரையறுத்தவர் ஜான் மார்ஷல். 1924-ம் ஆண்டு இதே நாளில் இந்த உண்மையை உலகுக்கு கூறினார் ஜான் மார்ஷல்
பிரிட்டிஷாரின் தொல்லியல் துறை தலைவராக இருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Exactly 100 years ago, on 20th September 1924, Sir #JohnMarshall announced the discovery of the #IndusValleyCivilisation, reshaping the history of the Indian subcontinent. I look back with gratitude and say, "Thank you, John Marshall."
— M.K.Stalin (@mkstalin) September 20, 2024
By taking right cognisance of the material… pic.twitter.com/G3SpbQvf1x






