என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிரதமரை நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு.
    • ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பு.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு பல தடவை கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை மாநில அரசே செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு தமிழக அரசு பல தடவை கோரிக்கை விடுத்தது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அறிவித்து விட்டது.

    இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

    சமீபத்தில் அமெரிக்காவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்ற அவர் சென்னை திரும்பியதும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து செப்டம்பர் 20-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வதால் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 24-ந்தேதி மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    மறுநாள் 25-ந்தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டு திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். இது தொடர்பான கடிதத்தையும் வழங்குவார்.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் மறைந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் சீதாராம் யெச்சூரி மரணம் அடைந்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தார். எனவே டெல்லியில் உள்ள சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 25-ந்தேதி இரவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதாவது இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    தமிழக கடலோரப்பகுதிகள்:

    20.09.2024 முதல் 24.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வங்கக்கடல் பகுதிகள்:

    20.09.2024 முதல் 23.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    24.09.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    அரபிக்கடல் பகுதிகள்:

    20.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21.09.2024 முதல் 24.09.2024 வரை: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை.
    • எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சொற் பொழிவாற்றிய திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது திருப்பூருக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மகாவிஷ்ணுவை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சித்தர்களின் ஆலோசனையின்படியே நான் செயல்படுகிறேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிறையிலும் எனது ஆன்மிக சொற்பொழிவு தொடரும் என்று தெரிவித்திருந்தார்.

    இதன்படி புழல் சிறையில் உள்ள மகாவிஷ்ணு தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக கைதிகளுக்கு ஆன்மீக அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சிறை வளாகத்தில் வைத்து தன்னுடன் உரையாடும் கைதிகளிடம் வாழ்க்கை முறை என்றால் என்ன என்பது பற்றியும், எதை யெல்லாம் செய்யக் கூடாது? என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாக கூறி பாடம் நடத்தியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் எடுத்த போது, ஜாமீன் மனு போடுவதற்காக வந்திருந்த தனது வக்கீலிடம் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மகாவிஷ்ணு அதுபற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். அதே மனநிலையில்தான் தற்போதும் மகாவிஷ்ணு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எந்த சூழலிலும் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை என்றும், எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம் என்றும் கூறியுள்ள மகாவிஷ்ணு இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல்களை வெளியாகி உள்ளன.

    இது பற்றி போலீசார் கூறும் போது, மகாவிஷ்ணு ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யாத நிலையில் 3 மாதம் வரையில் சிறையில் இருக்க நேரிடும் என்றும் அதன்பிறகே கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் வெளியில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    எந்த வழக்கில் கைதானவர்களாக இருந்தாலும் எப்போது சிறையில் இருந்து வெளியில் செல்லலாம் என்கிற மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் மகா விஷ்ணுவின் நிலைப்பாடு ஆச்சரியம் அளிப்பதாக இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள்.
    • பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்கள்.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள். நசுக்கப்பட்டவர்கள் முதலானவர்களை ஆதிக்கவாதிகளிடமிருந்து காக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களெல்லாம் முன்னேறுவதற்கு வித்திட்ட சமூக நீதிக் காவலர் என்பது உலகறிந்த உண்மையாகும். அப்பெருமகனார் உடல் உறுப்புகளும் மனவளர்ச்சியும் குன்றிய நிலையில் வாழ்ந்தவர்களுக்குப் புத்துணர்வும் புது வாழ்வும் அளிப்பதற்காக ஊனமுற்றவர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என அவர்களுக்குப் பெயர் தந்து அவர்கள் நலன்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின்கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என 27.3.2010 அன்று தனியே ஒரு துறையை புதிதாக ஏற்படுத்தி, அதன்மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி எண்ணற்ற சலுகைகளை வழங்கி அவர்கள் வாழ்விலும் வளம் சேர்த்தார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தறிஞர் கலைஞர் காட்டிய வழியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள். அத்துடன், தற்போது, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்கள்.

    அதாவது, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் என்றும்;

    6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய் என்றும்;

    9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

    அதேபோல, கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

    மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

    இப்படி, மாற்றுத் திறனாளிகள் உள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் ஏக்க உணர்வுகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

    பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 50 மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்துள்ள இந்த ஆணைகளின் பயனாக தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் வாழ்வில் ஊக்கம் பெருகும், ஆக்கம் சேரும், உற்சாகம் பொங்கும், அறிவொளி பரவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதியாகும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.
    • சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட், ஆப் பாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் சார்பில் விநியோகம் செய்யப்படும் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் ஒஒட்டல் உரிமையாளரான தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி (58) என்பவரிடமிருந்து பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளரான வசந்த குமாரியையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதை தொடர்ந்து வசந்தகுமாரி திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினம் துறையூர் கிளை சிறையிலும் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டலை ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் ஒட்டலை பராமரித்தது தெரியவந்தது.

    இதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் வட்டாட்சியர் உதவியுடன் ஓட்டலை மூடி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே அரசின் இலவச முட்டைகள் ஓட்டளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இதனால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • கேரளாவில் இருந்து வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    களியக்காவிளை:

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பரவியுள்ளது. இதனால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து, மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தவரை கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் பரிசோதனை பணி உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

    அது தொடர்பாக குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீனாட்சியிடம் கேட்டறிந்தனர். பின்பு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    களியக்காவிளை சோதனைச்சாவடியில் குரங்கம்மை மற்றும் நிபா வைரஸ் பாதிப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நிபா வைரசை பொருத்தமட்டில் பழம் தின்னி வவ்வால்கள் மூலமாக பரவ வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

    குரங்கம்மையை பொருத்தமட்டில் ஆப்பிரிக்கன் நாடுகளில் உள்ளது. பெரியவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கம்மை நோய்பாதிப்பை ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் ஆய்வகம் உள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டு மின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? எங்கிருந்து சிகிச்சைக்கு வந்துள்ளார்கள்? என்பது குறித்த விவரங்களை கண்காணித்து வருகிறோம்.

    பொதுமக்களுக்கு தங்களது பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும். நமக்கு மருந்து மாத்திரைகள் அனைத்தும் போதுமான அளவு உள்ளது. குரங்கம்மையை பொருத்த மட்டில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிபா வைரசுக்கு சிகிச்சையளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. பொதுமக்களே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறார்கள். சோதனை சாவடியில் கடந்த மூன்று நாட்களில் பார்க்கும் போது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    காய்ச்சல் இருந்தால் யாரும் பயணம் செய்யக் கூடாது என்று விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் 3 ஷிப்டுகளாக போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
    • சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 21 பேர் கைது செய்யப் பட்டனர்.

    இவர்களில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அஸ்வத்தாமனும் ஒருவர். இந்த நிலையில் இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை தொடர்புபடுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக நட வடிக்கை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    இதுபற்றி செல்வ பெருந்தகையிடம் கேட்டபோது, சட்டம் தன் கடமையை செய்யும். யாரையோ திருப்திபடுத்துவதற்காக, எதையோ திசை திருப்புவதற்காக அவதூறு பரப்பி உள்ளார்கள். சட்டப் படி அவதூறு வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    • பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன.

    மருத்துவக் கழிவுசென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகளும் போராடி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது குறித்தும், மருத்துவக் கழிவுகள் முறையாக அழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும் படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன.

    எனவே, தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது.
    • காங்கிரசாரை மதிப்பது கூட இல்லை என்று அதிருப்தி.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் மேல் மட்டத்தில் தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இருந்தாலும் கீழ் மட்டத்தில் அந்த அளவு ஒருங்கிணைப்பு இல்லை என்பது தேர்தல் கால கட்டங்களில் வெளிப்படும்.

    அந்த வகையில் இப்போது அடுத்து வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக காங்கிரஸ் செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது.

    காலையில் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. மாலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.

    காங்கிரஸ் நிலை மற்றும் மக்கள் மனநிலை பற்றி பேசும்படி மாவட்ட தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அப்போது பல மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே உறவு சரியில்லை. காங்கிரசாரை மதிப்பது கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார்கள்.

    கட்சி கீழ் மட்டத்தில் இருந்து வளர உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம். உள்ளாட்சி தேர்தலில் கூடுதலான இடங்களை தலைவர்கள் கேட்டுப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தகுதி, செல்வாக்குக்கு ஏற்ப போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றார்கள்.

    நெல்லை மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் பேசும் போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் 4½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி தொகுதியை விட்டுக்கொடுத்தது தவறு. இதனால் தி.மு.க.வுக்கு அனுசரணையாக போவது போல் கட்சியினர் பேசுகிறார்கள்.

    இதே போல் தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் தொகுதியை நமக்கு விட்டு தருவார்களா?

    ராகுல் நெல்லைக்கு பிரசாரத்துக்கு வந்தபோது மேடையில் காமராஜர் படம், காங்கிரஸ் கொடி கூட இடம் பெறாத நிலை இருந்தது. காங்கிரஸ்காரர்களை மேடை பக்கம் கூட அனுமதிக்கவில்லை.

    அதன்பிறகு மாநில தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொடிகள் கட்டப்பட்டன.

    கடந்த தேர்தலில் தி.மு.க. வென்றது வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான். அதற்கு காரணம் ராகுலின் நடைபயணத்தால் உருவான எழுச்சிதான் என்றார்.

    சில மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் திமு.க.வினரின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. காங்கிரசார் முன்னெடுக்கும் பணிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் எப்படி வளரும் என்று ஆவேசமாக பேசினார்கள்.

    கவுரவ பதவிகளை கூட காங்கிரசுக்கு தர மறுக்கிறார்கள். சம்பாதிப்பதற்கு பதவி கேட்கவில்லை. எங்கள் பகுதியில் நீண்ட காலம் கட்சியில் இருக்கிறோம். கோவில்களில் நியமிக்கப்படும் கவுரவ பதவியான அறங்காவலர்கள் பதவியை கூட வழங்குவதில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

    கூட்டணி மேல் மட்டத்தில் திருப்தியாக இருந்தாலும் கீழ் மட்டத்தில் திருப்தியாக இல்லை என்பதை தங்கள் பேச்சில் வெளிப்படுத்தினார்கள்.

    மாவட்ட தலைவர்களின் பேச்சுக்களை மாநில தலைவர்களும், மேலிட பொறுப்பாளர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். கீழ் மட்டத்தில் தொடரும் அதிருப்தியை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    பின்னர் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது, "உங்கள் பிரச்சினை களை நான் அறிவேன். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கட்சி தலைமை காரணம் அல்ல. மாவட்ட அளவில் செய்யும் தவறுகள்தான்.

    எனது தொகுதியான ஸ்ரீ பெரும்புதூரில் கூட உள் ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்கடிக் கப்பட்ட சம்பவம் நடந்தது.

    இந்த மாதிரி நடக்கும் பிரச்சினைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என்றார்.

    மாவட்ட அளவில் பேசும் போது, தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேரம் பேசி சீட் வாங்க முடிவதில்லை. குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுத் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள்.

    • பேராசிரியரின் சகோதரி ராஜம் ராமதாஸ் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
    • குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் இனமானப் பேராசிரியரின் சகோதரி ராஜம் ராமதாஸ் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது மகன் மருத்துவர் குணாளன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ‘வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என கேள்விகள் கேட்கப்பட்டன.
    • அனைத்தும் நன்றாக வந்துள்ளது என்று கூறினார்.

    சென்னை:

    விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவும் செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு "என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று உங்களிடம் சொல்லி இருக்கிறேன்" என பதில் கூறினார்.

    அடுத்து 'வேட்டையன்' பட இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு தெரியாது என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து 'வேட்டையன்', 'கூலி' படம் எவ்வாறு வந்துள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டன. அதற்கு அனைத்தும் நன்றாக வந்துள்ளது என்று கூறினார்.

    • ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடை பெற தொடங்கிவிட்டன.
    • போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு ஆன்லைன் மோசடிகளும் அதிக அளவில் நடை பெற தொடங்கிவிட்டன.

    உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. "நாங்கள் சொல்வது போன்று கேட்காவிட்டால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும்" என்று எச்சரிக்கும் மோசடி பேர் வழிகள் தங்களை சைபர் கிரைம் போலீசார் என்று மிரட்டி அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டுவது ஒரு பக்கம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

    இதில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீசார் பல்வேறு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இருப்பினும் ஆன்லைன் மோசடி நபர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை நாடு முழுவதுமே வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடிக் கும்பல் போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.


    அந்த வகையில் தமிழக வாலிபர்களை குறிவைத்து புதுவிதமான மோசடி ஒன்றை வெளிநாட்டு கும்பல் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிதாக இந்த மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    திருவொற்றியூர், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும், சென்னை மாநகரிலும் இந்த மோசடி அரங்கேறி இருக்கிறது.

    இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை மூளைச் சலவை செய்து போலியாக வங்கிக் கணக்கை தொடங்க செய்யும் மோசடிக் கும்பலின் ஏஜெண்டுகள் இதற்காக ரூ.20 ஆயிரம் வரையில் பணம் கொடுத்து ஆசை காட்டுகிறார்கள்.

    இப்படி தொடங்கப்படும் போலி கணக்குகளுக்காக போலியான கம்பெனி முகவரியுடன் கூடிய அலுவலகங்களையும் தயார் செய்து மோசடி பேர் வழிகள் ஆட்களை பிடித்து வருகிறார்கள்.

    இந்த வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட பின்னர் அதில் லட்சக்கணக்கில் மோசடி பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் மோசடிக் கும்பல் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறது.

    இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டது உள்ளூர் வாலிபர்களுக்கு தெரிய வருகிறது. அவர்களும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் மட்டும் 250 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. எனவே புதிய கணக்கு தொடங்குங்கள் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று யாராவது நாடினால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யென்றால் நீங்கள் சிக்கலில் மாட்டி சிறை செல்ல நேரிடும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×