என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
    • இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

    அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்.

    இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயல் என்பது கடலின் வெப்ப நிலைமை பொறுத்து உருவாகும்.

    டெல்டா மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும். இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

    சென்னையில் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடற்பகுதிகளில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட்டம்.
    • உங்கள் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் வருகிற 27-ந்தேதி (புதன்) கொண்டாடப்படுகிறது.

    பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஃபிளெக்ஸ் பேனர் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிப்பதாவது:-

    என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .

    உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய இந்தப் பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • நீதிபதிகள் டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 'அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏராளமான புகார்களை அளித்துள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தேர்தல் ஆணையம் எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வக்கீல்களிடம் நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் வக்கீல் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • குழந்தை பருவத்திலிருந்து முதியவர்கள் ஆகும் வரை, பெரும்பாலான பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் அளிக்கிறது.
    • எந்தப் பிரச்சனைகளையும் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று பேரளவில் பேசப்படுகிறதே தவிர, இதுவரை குறைந்ததற்கான எந்தத் தரவுகளும் இல்லை. குழந்தை பருவத்திலிருந்து முதியவர்கள் ஆகும் வரை, பெரும்பாலான பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் அளிக்கிறது. இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களும் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள, தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். எந்தப் பிரச்சனைகளையும் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும், பெண்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்த நாளில், பெண்கள் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து பெண்களுக்கும் இந்நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக விண்ணப்பித்துள்ளனர்.
    • மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.

    சென்னை:

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடைபெற்றன.

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 89,256 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் மட்டும் 58,374 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6ஐ பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இவர்கள் 18 வயது நிரம்பியதற்கான வயது சான்றுடன் விண்ணப்பித்தனர்.

    பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 6,097 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் 5,227 பேரும், திரு.வி.க. நகர் தொகுதியில் 5,306 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

    வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு 29,501 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 1,371 பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்தமாக அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது. அங்கு 9,013 படிவங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக கொளத்தூரில் 8,422 படிவங்களும் மூன்றாவதாக ஆர்.கே.நகர் தொகுதியில் 7,737 படிவங்களும் பெறப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் முடிந்தாலும் கூட இன்று முதல் 28-ந்தேதி வரை மேலும் 4 நாட்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.

    • இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
    • பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.

    சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்மசாட்டி உள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.

    திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.

    பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    கடலோர தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, சிவகங்கை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுதினம் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 28-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் வரும் 30-ந்தேதி வரை தெற்கு கேரளா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்றே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
    • இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.

    திருவண்ணாமலை:

    மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.

    விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

    இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.

    விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது.

    பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.

    வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.

    இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் ஏராளமானோருக்கு காய்ச்சல் பரவி வருகிறது.

    இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் 3 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.


    இந்த காய்ச்சல் எதனால் வருகிறது என்று மருத்துவர்கள் ஆராய்ந்த போது 75 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    பலருக்கு இன்புளூயன்சா ஏ வைரஸ் காரணமாகவும், சிலருக்கு இன்புளூயன்சா பி வைரஸ் காரணமாகவும் காய்ச்சல் பரவி உள்ளது. இன்னும் சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    மேலும் சிலருக்கு அடினோவைரஸ் மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் பிற வைரஸ் தொற்றுகளும் பரவி இருப்பதை மாநில பொது சுகாதார ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.


    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    பருவமழை தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையிலும் அதிகம்பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படுகிறது.

    தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

    குழந்தைகள் பள்ளி அல்லது பயிற்சி மையங்களுக்கு செல்லும் போது தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவுகிறது. நாங்கள் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கிறோம். குழந்தைகளுக்கு இருமல் சிரப் சிறிய அளவில் நிவாரணம் தருகிறது.


    பெரும்பாலானவர்கள் தொற்று நோய் அறிகுறிகளுக்கு மருந்து சாப்பிடாததால் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    அதனால் அவர்களுக்கு தடுப்பு ஊசிகளை எடுக்க நாங்கள் அறிவுறுத்துகிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    எனவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முககவசம் அணிய வேண்டும்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் அல்லது பேசும்போது இந்த வைரஸ், சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. முககவசம் அணிவதால் தொற்று பரவுவது குறையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இலங்கையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    சென்னையில் இருந்து சுமார் 1050 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. நாகையில் இருந்து சுமார் 880 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அருகில் சென்று விசாரித்தார்.
    • ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சோழிங்க நல்லூர், கண்ணகி நகர், எழில் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    கண்ணகி நகரில் அவர் சென்ற வழி நெடுக ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்ததும் முதலமைச்சர் காரை விட்டு இறங்கி நடந்து சென்று அவர்களிடம் நலம் விசாரித்தும், கை குலுக்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது சிலர் புத்தகங்களை அவருக்கு பரிசளித்தனர். பலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். அவற்றை பொறுமையுடன் பெற்றுக் கொண்டார். நடக்க முடியாமல் அமர்ந்து இருந்த மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அருகில் சென்று விசாரித்தார். அவர்கள் கொடுத்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    அதை தொடர்ந்து கண்ணகி நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறு வாழ்வு சேவைகள் வழங்குவதற்காக ரூ.3.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.

    மாற்று திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்டத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான கண்ணகி நகரில் இச்சேவைகளை முதலில் வழங்க அரசு மிக கவனமாக இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது.

    இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன் முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இம்மையமானது பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாண்டிசோரி மழலையர் வகுப்புகளையும் பார்வையிட்டார்.அப்போது சின்ன குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.

    அதை தொடர்ந்து அவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுகள், பென்சில், கிரேயான்ஸ், ஸ்கேல் அடங்கிய பரிசு பை ஒன்றை பரிசாக வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, க.கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் எழில் நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது கனமழை எச்சரிக்கை பற்றியும் அது தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கனவே அனைத்து மாவட்ட கலெக் டர்கள் கூட்டம் நடத்தி பருவமழை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

    பெருமழையை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ எதையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார்.

    அதைதொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான நிதிகள் பெறுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் என்னென்ன பேசப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு எம்.பி.க்கள் கூட்டம் நடத்தி, என்னென்ன தேவைகள் என்னென்ன செய்வார்கள் பற்றி பேச வேண்டும் என்று குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசுவார்கள் என்றார்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
    • அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வுக்கூட்டம் இன்று காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் கள ஆய்வுக்குழு நிர்வாகிகளாக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் பேசிய நத்தம் விசுவநாதன், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் வளர்ச்சி பணிகள் குறித்து தொண்டர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

    தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை பார்த்துக்கொள்ளும். எனவே ஆக்கப்பூர்வமான கருத்துகளை நிர்வாகிகள், தொண்டர்கள் கூறலாம் என்றார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மதுரை பைக்காரா செழியன், ராமச்சந்திரன், முனிச்சாலை சரவணன் உள்ளிட்டோர் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து மேடையை நோக்கி முன்னேறி சென்றனர்.

    அவர்கள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுபற்றி நாங்கள் பேசவேண்டும். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் தொய்விலும், அதிருப்தியிலும் உள்ளனர் என்று தொடர்ந்து பேசினர்.

    அத்துடன் அவர்கள் மேடையில் ஏறினர். உடனே மேடையில் இருந்தவர்கள் அவர்களை கீழே தள்ளி விட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

    இதில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது. அவர்கள் சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டனர்.

    உடனே மைக்கில் குறுக்கிட்டு பேசிய நத்தம் விசுவநாதன், அமைதியாக இருங்கள், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் மலர பணியாற்றுங்கள் என்றார்.

    இருந்தபோதிலும் கூட்ட அரங்கில் பரபரப்பு சற்றும் குறையவில்லை. தொடர்ந்து கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தங்களிடம் முறையாக கருத்துகள் கேட்கவில்லை என கூச்சலிட்டனர். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ×