என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ள்ளிகளில் கல்வி சார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வழக்கப்பட்டு உள்ளது.
- போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
பள்ளி மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம், பணியறவு மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி அதிரடியாக சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாளாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ.சி. அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்வி சார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வழக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவியர்களிடம் ஒழுக்கக் கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம், பணி யறவு, மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு ஆணையிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள், மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. ஸ்கவுட் கைடும், ஜே.ஆர்.சி. போம் அமைப்புகள் பள்ளிகளின் செயல்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருத்தல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போக்சோ) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோ-ஏ.எஸ்.ஓ. பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்.சி.சி. ஜே.ஆர் சி மற்றும் சாரண-சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் செயல்படும் பள்ளிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வமைப்புகள் செயல்படும் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்களா என்பதை பள்ளி ஆய்வு மற்றும் ஆண்டு ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும். மேலும் போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் கல்வி சார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் இருந்து மாணவிகள் மீது ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் நடைபெறுவதாக புகார்கள் வரப்பெற்று உள்ளன.
எனவே அனைத்து பள்ளி முதல்வர் , தாளாளர், ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியார்களுக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நலத்துறை அலுவலர்கள் சுகாதாரத்துறை அலுவர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர்களைக் கொண்டு பயிற்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, அந்த மையங்களை அமைக்க வேண்டுமா? என்பது தான் எனது வினா.
ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்போது அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம் மீனவர்களை மட்டுமின்றி, பேரிடர்களுக்கும் வழி வகுக்கும். ஆன்மிக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன.
அவை சுனாமி அலைகளைக் கூட தடுக்கும் வல்லமை பெற்றவை. இந்தத் திட்டத்திற்காக அவை அகற்றப்படும் என்று கூறப்படும் நிலையில், சுனாமியிலிருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்தப் பகுதி தான் நிலத்தடி நீர்வளத்தை சேமிக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மிக , கலாச்சார மையம் அமைக்க வேண்டுமா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
ஆன்மிக, கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் அனுமதி ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும், அதுகுறித்த கூட்டத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்றும் மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; உள்ளூர் மக்களால் வரவேற்கப்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் பெறாத ஆன்மிக, கலாச்சார மையத்தை திருவிடந்தை பகுதியில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மறைமலை அடிகளார் பேத்தியும், பட்டதாரியுமான லலிதா தஞ்சாவூர், கீழவாசல், டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார்.
- ஏழை, எளிய மக்களுடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாபெரும் பேரியக்கமாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புகழ் பெற்ற தமிழறிஞரும், 'தமிழ் தந்தை' என போற்றப்படுபவருமான மறைமலை அடிகளார் பேத்தியும், பட்டதாரியுமான லலிதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூர், கீழவாசல், டபீர்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வீட்டு வாடகை கொடுப்பதற்குக் கூட போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாபெரும் பேரியக்கமாகும். அந்த வகையில், 'தமிழ் தந்தை' மறைமலை அடிகளார் பேத்தி லலிதா குடும்பத்திற்கு, அ.தி.மு.க. சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும்.
- 8 கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த 'Fengal' என்ற பெயர் சூட்டப்பட்ட உள்ளது.
இதனிடையே இந்த Fengal புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டி நோக்கி நகருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் 12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையை கருத்தில் கொண்டு சென்னையில் 24 மணிநேரமும் ஆவின் சேவை இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகபட்சமாக ஒருவர் 4 பால் பாக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் பால் விநியோகக்கப்படும்.
அண்ணாநகர் டவர், மாதவரம் பால்பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர் பால்பண்ணை, விருகம்பாக்கம், சி.பி.இராமசாமி சாலை ஆகிய 8 கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது.
- த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-
கட்சியை மறுசீரமைத்து அதை உயிரோட்டமாக உயிர்ப்போடு வைத்திருப்பதில் முனைப்போடு இருப்பவர் நமது வி.சி.க. தலைவர் திருமாவளவன். மறு சீரமைப்பு நடவடிக்கையால் தான் தலித் அல்லாதவர்கள் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேளச்சேரி தீர்மானம் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்களித்து இது பொது கட்சிதான் என அங்கீகரித்துள்ளனர்.
அதன் விளைவாக தான் இன்று 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், கடலூரில் துணை மேயர் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உறுப்பினர்கள் என மிகப்பெரிய கட்சியாக வி.சி.க. வடிவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் அரசியல் வட்டாரங்கள் பேசி கொண்டுள்ளனர்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது. திருமாவளவன் அரசியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாடு தான் இன்று அரசியலயே தீர்மானிக்க போகிறது என்ற நிலைக்கு வி.சி.க. வளர்ந்துள்ளது. புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்பார்க்கின்றனர்.
விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பால அறவாழி, பரசு முருகையன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, தங்க மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
- இதையடுத்து, தலைவனே இளம் தலைவனே என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தலைவனே இளம் தலைவனே என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய Deputy CM ஒருநாள் Definitely CM என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கழக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக, கழக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் ஜோயலின் வரிகளோடு உருவாகியுள்ள "தலைவனே... இளம் தலைவனே..." பாடலை அன்பகத்தில் வெளியிட்டோம்.
இசையமைத்த மாரிசக்திக்கும், பாடகர் மனோ சாருக்கும், இளைஞரணி தம்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
- 1 மற்றும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும், தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 மற்றும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தரைக்காற்று
நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மறுநாள் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-ந்தேதி வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
- அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில அரசியலமைப்பு தினமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.
அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் - அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட முகப்புரையை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களிலும் துறைகளின் தலைவர்கள் சட்ட முகப்புரையை வாசித்தனர்.
இதே போல் பள்ளி, கல்லூரிகளிலும் வாசித்தனர். வாசிக்க வேண்டிய முகப்புரையை அரசு அனைத்து துறைகளுக்கும் அனுப்பி இருந்தது. அதன் விவரம் வருமாறு:-
இந்திய மக்களாட்சிக்கு இது பெருமைமிகு தருணமாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் 75 ஆண்டுகாலம் பயணித்து. நாட்டின் ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் எல்லாத் தருணங்களிலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களின் பேரறிவுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் ஏற்பப் பயணிப்போம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மிக உயரிய விழுமியங்களைக் கடைப்பிடிக்க நாம் பாடுபடுவோம்.
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது.
- அதானி சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
அதானி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
- வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம்-வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம்-மங்கலம் பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி;
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம்-திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழு யான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்திடும் வகையில் 2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்;
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகள்;
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம்.
- வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது.
சென்னை:
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை. அதை பாதுகாக்க வேண்டும் என்று தான் இன்று உறுதிமொழி ஏற்கிறோம்.
இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம். மற்றொரு முறை ஆயுதம் ஏந்திய முறை இருக்கிறது. அதை நாம் கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில் பாராளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில் தான் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எந்த ஜனநாயக முறை?
வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது. இது பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே தான் இதை பாதுகாக்க வேண்டும்.
அதானி விவகாரத்தில் பா.ஜ.க. விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும்.
யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை.
பா.ஜ.க. குரலும் பா.ம.க. குரலும் ஒன்றாக இருக்கிறது. ஏன் ஒன்றாக இருக்கிறது என்றால் அதானியை காப்பாற்றுவதற்கு தான்.
தோழர் என்ற வார்த்தை மிக சிறப்பானது. அதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இதை தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசுவதால் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இளம்வயதில் இருந்து சிறப்பாக செயல்படும் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று திறன்பட செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக்கொகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
- ரூ.17,710 திருடியதும் தெரியவந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (வயது 42) என்பது போலீசாரை மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அவருடன் சிக்கியவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.17 ஆயிரத்து 710-ஐ திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மற்றும் 3 பெண்களை கைது செய்தனர்.






