என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
    • சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.

    3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.

    ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னையில் இருந்து காரைக்கால் வரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    மேலும், நாளை மதியம் அல்லது இரவு வரை தொடர்ச்சியான அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 2,100 க்கும் மேற்பட்ட சிறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.
    • 500 பேர் மட்டும் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர்.

    வண்டலூர்:

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் ராணி கூறியிருப்பதாவது:-

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் முறையாக கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காதவர்கள் மற்றும் புதிய தொழில் உரிமங்களை பெறாதவர்கள் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நாகராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோரிடம் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை வழங்கி, அதற்குரிய கட்டணம் செலுத்தி உரிமங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு இரண்டு முறை நினைவூட்டல் கடிதம் நேரில் வழங்கப்படும் அதிலும் அவர்கள் தொழில் உரிமங்களை பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் வணிகம் செய்து வந்தால், கடையை பூட்டி சீல் வைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,100 க்கும் மேற்பட்ட சிறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. அதில் தற்போது வரை 500 பேர் மட்டும் தான் தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
    • டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

    'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி," கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் விடியா திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன.

    அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்"

    மு.க. ஸ்டாலின், அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்?

    நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது.

    திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து, மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க திரைமறைவில் முயற்சி எடுத்து விட்டு,

    தற்போது செய்யும் இந்த கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு,

    மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது.
    • 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த புதுவாயல்-பழவேற்காடு இணைப்பு சாலை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ.45 கோடி மதிப்பில் 4. 2 கிலோமீட்டர் தூரம் இந்த பணி நடக்கிறது. சாலை விரிவாக்கப்பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சாலை விரிவாக்கத்தால் 52 வீடுகள், ஒரு கோவில் பாதிக்கப்படுவதாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய காவனம், சின்ன காவனம் பகுதி பொதுமக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப்பணிக்கு எடுக்கப்படும் வீடுகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் மற்றும் இழப்பீடு வழங்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து சின்னக்காவனம் பகுதியில் உள்ள 28 வீடுகள் பொன்னேரி உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் முன்னிலையில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார்.
    • வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    திருச்சியை சேர்ந்த முருகேசன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஈரோட்டை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டப்பட்டு வரும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். மேலும் கட்டுமான பொருட்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து உள்ளனர். இங்கு கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி உள்ளனர்.

    இவ்வாறு அரசுக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டுவதற்கும், பணியாளர்கள் அங்கே தங்குவதற்கும் எந்த அனுமதியும் அரசு வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். மேலும் தனியார் ஒப்பந்ததாரருடன் இணைந்து செயல்படுகிறார்.

    அரசுக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித வகை மாற்றமும் செய்யாமல் சட்டவிரோதமாக தனியார் ஒப்பந்ததாரருடன் மாவட்ட வருவாய் அதிகாரி இணைந்து இதுபோன்ற கட்டுமானங்களை கட்டி வருகிறார். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயே அரசு நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்படுவதற்கான புகைப்படங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து உள்துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • வேட்புமனு மீதான பரிசீலனை 9-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
    • 10-ந்தேதி வேட்புமனுவை திரும்பப்பெறலாம்.

    52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக பாரதிதாசன் அறிவித்துள்ளார்.

    சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களித்து போட்டியிட தகுதியுடையவர்கள். பதவிகளுக்கான வேட்புமனுக்களை நாளை முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை ( ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை 9-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    10-ந்தேதி வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் 10-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். 15-ந்தேதி வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
    • தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

    கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார்.

    மாநில அரசின் முழுமுதற் பணியான சட்டம்- ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தாமல், அவர்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
    • 4 பேரையும் போலீசார் பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று 2 பெண்கள் உட்பட 4 பேர் மனு அளிப்பதற்காக வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்து மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதை அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து சென்று தீக்குளிக்க முயன்றவர்களிடம் இருந்து மண்எண்ணை பாட்டில் மற்றும் தீப்பெட்டியை பறித்து விட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தனர். அதன் விபரம் வருமாறு:-

    நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் நயினார் முகமது. இவர் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பழைய தியேட்டரை வாங்குவதற்காக ரூ. 45 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், அந்த தியேட்டர் அருகே இருந்த இடத்தை வாங்கிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், நயினார் முகமது ஒப்பந்தம் செய்திருந்த தியேட்டர் இடத்தையும் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நயினார் முகமது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் தற்காலிகமாக அந்த இடத்திற்கு இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், மேற்கொண்டு அந்த இடத்தில் பணிகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஒரு கும்பல் அந்த தியேட்டர் வளாகத்துக்கு சென்று பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நயினார் முகமது, தனது மகள் ஜன்னத், மருமகள் அலிமா பேகம் மற்றும் ஒரு உறவினருடன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர் முறையிட வந்த நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    • நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
    • சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.

    இது அடுத்த 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • ஜனாதிபதிக்கு தமிழக அரசு சார்பிலும், மத்திய பல்கலைக்கழகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • திருவாரூரில் நாளை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    விழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) அவர் ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதிக்கு தமிழக அரசு சார்பிலும், மத்திய பல்கலைக்கழகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு மதியம் 1 மணிக்கு வரும் ஜனாதிபதி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார்.

    பின்னர், மாலை 3 மணிக்கு அங்குள்ள அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா முடிந்ததும் ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழக ஏ.டி.ஜி.பி. சஞ்சய் குமார் தலைமையில் சுமார் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. மற்றும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட 10 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி, 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 65 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 400 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், திருவாரூரில் நாளை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 600 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்து 400 நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி:

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தினால் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 600 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்து 400 நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • போலீசார் திருவெண்ணைநல்லூர் தாலுகாவை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.
    • கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வந்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி கடந்த 23-ம் தேதி தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

    இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபரின் மார்பில் கஸ்தூரி என்று பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்தும், கொலையாளிகள் குறித்து விசாரித்து வந்தனர். தலை வெட்டப்பட்டதால் 3 நாட்கள் கொலை செய்யப்பட்டவரின் விவரத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மகனை காணவில்லை என விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறி இருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அதில், கிளியனூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கொந்தமூரில் பெண்ணை கற்பழித்த வழக்கில், சிறையில் இருந்து வெளியே வந்த, திருவணெ்ணைநல்லூர் சரவணப்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் ராஜதுரை( 32) நீதிமன்ற பிடிவாரண்டு பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளியனூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டதும், அதன் பிறகு அவர் காணாமல் போனதும் தெரிய வந்தது.

    இதையடுத்து, சென்னையில் இருந்த ராஜதுரையின் மனைவி முனியம்மாளை வரவழைத்து விசாரித்தனர். அதில் தனது கணவர், மார்பில் கஸ்தூரி என்ற பெயரை பச்சை குத்தியிருந்திருந்தார் என்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு ராஜதுரையின் மொபைல் போனிற்கு வந்த எண்களை வைத்து, போலீசார் திருவெண்ணைநல்லூர் தாலுகாவை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.

    அதில், திருவணெ்ணைநல்லூர் அடுத்த கொத்தனூர் பகுதியை சேர்ந்த சிவா(22) சரவணப்பாக்கத்தை சேர்ந்த உதயா( 25) கொத்தனூரை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் தலைமைறைவாக உள்ள சிலர் சேர்ந்து ராஜதுரையை அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. நீண்ட நாட்களாக சிவா, உதயா, மோகன்ராஜ், கொலை செய்யப்பட்ட ராஜதுரை உள்ளிட்டோர் நண்பராக சுற்றி வந்துள்ளனர்.

    கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ராஜதுரை, கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி, உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, சிவா, உதயா, மோகன்ராஜ் உள்ளிட்டோருக்கும், ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ராஜதுரை, அனைவரின் முன்னிலையில் அவர்களை தாக்கியுள்ளார். அதில் இருந்து அவர்கள், ராஜதுரை மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

    கடந்த 12-ந் தேதி சிவா, உதயா உள்ளிட்ட சிலர், தடுத்தாட்கொண்டோர் கிராம ஏரிக்கரைக்கு, ராஜதுரையை சமரசம் பேசுவதற்கு வரவழைத்துள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்திக்கொண்டிருக்கும் போது, அவரை தடியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியதும், மறுநாள் வந்து பார்த்த போது அவர் இறந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடலை அதே பகுதியில் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்து, விட்டு, புதுச்சேரிக்கு சென்றுள்ளனர்.

    அங்கு அவர்களின் நண்பரான புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக்( 22) உதவியோடு, அழுகிய நிலையில், உடலை தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டி, இரு பாலித்தீன் பையில் கட்டி வாகனத்தில் சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவக்கரை கல்குவாரியில் வீசி விட்டு சென்றாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் பேரில் சிவா, உதயா, மோகன்ராஜ், புதுச்சேரியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு உதவியாக இருந்த திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த கறிக்கடைக்காரர் ரெமோ என்கின்ற அபியை போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரணை செய்த போது ராஜதுரை உடலை கார் மூலமாக புதுவைக்கு எடுத்து வர வந்து உதவி செய்ததும் மேலும் அவர்களுக்கு புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கொலையாளிகளை தங்க வைக்க உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அபி புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கு குடி பெயர்ந்து உள்ளார். இதனால் புதுவையில் உள்ள நண்பர்கள் மூலமாக மற்றவர்களுக்கு அறிமுகம் ஆகி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அபி திண்டிவனத்தில் 12-வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், அதேபோல நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் வேட்பாளரை தாக்கிய வழக்கும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொத்தனார் ராஜதுரை வழக்கில் முக்கிய குற்றவாளியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூகநத்தத்தை சேர்ந்த மாரி செயல்பட்டது தெரிய வந்தது. அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். இவர் இக்கொலையில் கூலிப்படையாக செயல்பட்டது தெரிய வந்தது. கைதான மாரி மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்கு உள்ளது போலீஸ் விசாரணயைில் தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி இக்கொலை தொடர்பாக சரவணம் பாக்கத்தை சேர்ந்த ஜபாலூதீன், ராஜகுமரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளது.

    கொலை செய்யப்பட்ட ராஜதுரையின் தலை, கை, கால்களை கல்குவாரியில் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் கல்குவாரி சுமார் 150 அடி ஆழத்தில் உள்ளதால் உடல் பாகங்களை கண்டுபிடிப்பதில் சிரமமம் ஏற்பட்டுள்ளது.

    ×