என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
    • மூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?

    இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது என்பது, அரசியலில் மேடையேறி விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுபோல் உள்ளது. மணிப்பூரில் உள்ள பிரச்சனைகள் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது பாஜக மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது" என்று தெரிவித்தார்.

    • அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இருந்து, வரும் 15ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 பேருந்துகள் கட்டணமின்றி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா (26) பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேருந்தில் பயணிகள் காத்திருக்க டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க ஓட்டுனர் சிவா சென்றுள்ளார்.

    அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.

    முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுநர் சிவாவை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதைதொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டுனர் சிவாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
    • பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

    தீபத் திருவிழா திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு, நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தனியார், அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 156 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது ? மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் ஆள முடியும்.

    திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது ? மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் ஆள முடியும்.

    நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள்.

    திராவிடம் என்ற வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கூட்டம் கண்டபடி பேசுகிறது.

    தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் கட்சி ஆரம்பித்துள்ளார் ஒருவர். மக்களுக்காக அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதய குமார் மற்றும் உயிரிழந்தார்.
    • உயிரிழந்த பாகனின் மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேகர்பாபு வழங்கினார்.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.

    பின்னர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    இதனையடுத்து யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி இன்று வழங்கினார். 

    • மக்கள் விரோத ஆட்சியாளர்கள் இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுவதாக விஜய் விமர்சனம்
    • 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்று நானும் இறுமாப்போடு சொல்கிறேன் என்று எம்.பி. கனிமொழி பதிலடி

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், திமுகவை விமர்சித்து விஜய் பேசியதற்கு எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.பி. கனிமொழி, "ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து செயல்படக்கூடிய ஒரு ஆட்சி நம் ஆட்சி தான். வாய் சவடால் எல்லாம் நிறைய வரலாம். இந்த மாதிரி பேசியவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்து காட்டியதில்லை. அண்ணன் தளபதி சொல்வது போல 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்று நானும் இறுமாப்போடு சொல்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
    • திமுக வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான்.

    திமுகவை எதிர்க்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " திமுக வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் என்டிஏ கூட்டணிக்கு வரலாம்" என்றார்.

    • பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஒரகடம்-வாலாஜாபாத் சாலையில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை என்ற இடத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சில உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

    கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக வந்து பள்ளத்தை கண்டதும் திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனம் மோதி விபத்துகள் ஏற்படுகின்றது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் பல முறை நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
    • வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினரக பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய், நூலை வெளியிட்டார்.

    பிறகு, விஜய் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய விஜய், 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றார்.

    2026 தேர்தல் கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸாகும் என விஜய் பேசிய நிலையில் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸூம் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை.

    நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சி தான் நடத்துகிறோம்.

    வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கவில்லை.

    வேங்கைவயல் விவகாரம் குறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

    வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்எல்ஏவோ தலையிடவில்லை.

    சீமான் உடன் நேரடியாக மோத திமுகவுக்கு எந்த பயமுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளது.
    • தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 07.12.2024 வரை 448.0 (மி மீ) மழை பதிவாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 07.12.2024 வரை 448.0 (மி மீ) மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 384.5 (மி மீ) தான் பெய்யும்.

    மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளது.

    • உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே கடந்த 1-ந் தேதி இரவு தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமடைந்த மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதியில் குதித்தார். இவரை தொடர்ந்து அவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்தார். இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்தில் ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.

    ஆற்றில் குதித்த கர்ப்பிணிப் பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடர்ந்து 4 நாட்கள் தேடியும், ஆற்றில் வெள்ளம் குறையாததால் மோகனாம்பாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணியை தீயணைப்பு துறையினர் நிறுத்திக் கொண்டனர்.

    இன்று அதிகாலை வசிஷ்டநதியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் வசிஷ்ட நதியின் கரையில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட இப்பகுதி மக்கள், வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கரை ஒதுங்கிக் கிடந்த பெண் மோகனாம்பாள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து உறுதிப்படுத்திய போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், மோகனாம்பாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர். 7 நாட்களுக்கு முன் வசிஷ்ட நதியில் குதித்த கர்ப்பிணிப் பெண் இன்று அதிகாலை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×