என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் மாலை 5 மணி முதல் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு 5,900 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், 5000 கன அடி நீர் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
- தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஆட்சியை பார்த்ததே இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டு 43 மாதங்கள் கடந்த நிலையில், தமிழ்நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், பொதுத்துறை நிறுவனங்களும் தொடர்ந்து பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்து இருக்கிறார். இது தான் தி.மு.க. அரசின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனை.
சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், வாகன வரி, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் என மாநில அரசின் வரம்புக்குள் வரும் அத்தனை வரிகளையும் உயர்த்தி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்கள் மீது நிதிச் சுமையை சுமத்தியும், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவை அதலபாதாளத்தில் சென்றிருக்கின்றன என்றால், இதற்குக் காரணம் திறமையற்ற ஆட்சி, செயல்படாத ஆட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றுதான் பொருள். தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஆட்சியை பார்த்ததே இல்லை என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு, அம்மா வகுத்துக் கொடுத்த ஆட்சி மீண்டும் மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது.
- ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
சென்னை:
தென்சென்னை பகுதியில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான மடிப்பாக்கம் ஏரி 62 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 2017-ம் ஆண்டு ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தது.
மேலும் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து மடிப்பாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தொடங்கியது. ரூ.2 கோடி மதிப்பில் நடைபாதைகள், பெண்கள் உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.42 லட்சத்தில் வேலியுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பில் 2 கி.மீ நீளத்துக்கு ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஏரி மடிப்பாக்கம் அய்யப்பன் நகர், கார்த்தி கேயபுரம், ராம் நகர், சதாசிவம் நகர், ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஏரியின் கரையோரங்களில் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை வீசி எறிவதாலும், களை செடிகள் அதிக அளவில் வளர்ந்திருப்பதாலும் மடிப்பாக்கம் ஏரி மீண்டும் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மடிப்பாக்கம் பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மடிப்பாக்கம் ஏரி மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல வசதிகளை செய்து கொடுத்தாலும், ஏரியை பராமரிக்க பாதுகாவலர்களும், தோட்டக்காரர்களும் இல்லை. எனவே சென்னை மாநகராட்சி மடிப்பாக்கம் ஏரியை பாதுகாத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து வெள்ள தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மடிப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் ஏரியை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
- கட்சி சார்பில் அவருக்கு உதவும்படி விஜய் உத்தரவிட்டார்.
- ரிஸ்வான், புஷ்பராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய ‘தேநீர் விடுதி’ அமைத்து கொடுத்தனர்.
சென்னை:
சென்னை முடிச்சூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பனையூரில் அலுவலக உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு நேரில் வந்து தனது வாழ்வாதாரத்திற்கு உதவும் படி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்திடம் கோரிக்கை அளித்தார். லட்சுமி கோரிக்கையை கட்சி தலைவர் விஜய் கவனத்துக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் கொண்டு சென்றார். இதையடுத்து கட்சி சார்பில் அவருக்கு உதவும்படி விஜய் உத்தரவிட்டார்.
விஜய் உத்தரவுக்கிணங்க ஏழைப் பெண்ணான லட்சுமிக்கு முடிச்சூர் பகுதி நிர்வாகிகள் தயா, ரிஸ்வான், புஷ்பராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய 'தேநீர் விடுதி' அமைத்து கொடுத்தனர். புதிய கடையை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இ.சி.ஆர். சரவணன் உள்பட செங்கல்பட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தின மங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு 52 பிளாஸ்டிக் சேர்கள், 10 பாய், 3 குக்கர், 50 சில்வர் தட்டு, 30 லஞ்ச் பேக், 2 குப்பை கூடை, 2 வாளி, 2 தண்ணீர் கேன், குழந்தைகளுக்கு பிஸ்கட், இனிப்பு போன்ற பொருட்களை கட்சி சார்பில் பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கினார்.
திருப்போரூர் ஒன்றிய த.வெ.க. சார்பில் நிர்வாகிகள் வி.கே.ஆர்.எஸ். தியாகு, தீனா ஆகியோர் ஏற்பாட்டில் மேலைக் கோட்டூரில் அமைந்துள்ள மேகநாதன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 150 பெண்களுக்கு புடவை, சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புருஷோத்தமன் நகரில் ஃபெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், ராஜ்குமார் ஏற்பாட்டில் அரிசி, காய்கறிகள், போர்வை ஆகிய பொருட்களை வீடு வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயக்கரையில் 18 செ.மீ மழை பெய்துள்ளது.
- காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால், மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்புள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயக்கரையில் 18 செ.மீ மழை பெய்துள்ளது.
காற்றயழுத்த தாழ்வு பகுதி என்பதால் வெப்பநிலை பகல் நேரத்தில் மாறுபாடாக உள்ளது. பரவலான மிதமான மழையும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால், மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.
கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின் காலமானது ஜனவரி 15 வரை கூட நீண்டுள்ளது. வானிலை கணிப்புகள் 100 சதவீதம் சரியாக இருப்பது கிடையாது, இது அறிவியல் பூர்வமானது.
வானிலை பலவித காரணிகளை கொண்டிருப்பதால், துல்லியமாக கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி அந்தமான் கடலோர பகுதியை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இன்றைய சூழலில் புயல், மழையை கணிக்கும் அறிவியல் முழுமையாக இல்லை.
வெளிநாடுகளில் புயலுக்குள் விமானங்களை செலுத்தி ஆய்வு செய்தபோதும், சரியாக கணிக்க முடியவில்லை.
150 கி.மீ., வேகம் என்ற கணிப்பு கூட பொய்யாகி 250 கி.மீ வேகத்தில் புயல் வீசியுள்ளது.
தொழில்நுட்பம் மட்டும் போதாது, அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
- வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.
விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா மு.க.ஸ்டாலின் ?
சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- நீண்ட ஆயுளுடன், குன்றாகப் புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்.
இன்று 74வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட ஆயுளுடன், குன்றாகப் புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-ந்தேதி மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை:
இன்று தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23°-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள் இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
திருத்தணி:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பி உள்ளது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு பலத்த மழை கொட்டியபோது உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் அம்மப்பள்ளி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் அம்மப்பள்ளி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் நகரி, திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி ஏரிக்கு வருகிறது.
அம்மப்பள்ளி அணை திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருத்தணி அருகே உள்ள நெடியம், சமந்தவாடா, சுரக்காப்பேட்டை பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன.
இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. தரைப்பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகின்றன. திருத்தணி, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்த்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு பாய்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் இன்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.
தஞ்சாவூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதற்கு முன்னர் கனமழை கொட்டியது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து கனமழையாக மாறி கொட்டியது. நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழையாக வெளுத்து வாங்கியது.
தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 795.80 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்திருந்தன.
அதன் பின்னர் மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை 24 மணி நேரத்தை கடந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர், கமலாபுரம், வடபாதிமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக விக்கிரபாண்டியம். புழுதிகுடி. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.
நேற்று இரவு விடிய,விடிய பரவலாக மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கடலோர பகுதி பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பழையாறு துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை மீன் பிடித்துறை முகம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10,000 க்கு மேற்பட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால் பண்ணை சேரி வாட்டர் டேங்க் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மின்வளத்துறையினர் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர்படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மனோரா, வேளாங்கண்ணி கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று வழக்கத்தை விட குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதால் அவைகள் வெறிச்சோடின.
- அனைத்து ரெயில்களுக்கும் இவை எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.
ரெயில் பயணம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் பயணிப் போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் ரெயில்களில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.
ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை, கம்பளி, துண்டு ஆகியவை வழங்கப்படுகிறது. அனைத்து ரெயில்களுக்கும் இவை எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன.
அதனை தூய்மை படுத்தும் பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ரெயிலுக்கும் குறித்த நேரத்துக்கு முன்பாக கொண்டு செல்லுதல், அதே போல பயன்படுத்தப்பட்ட அழுக்கு போர்வை, படுக்கை விரிப்புகளை எடுத்து பாதுகாப்பாக கொண்டு சென்று மீண்டும் சலவை செய்து வழங்குவதற்கான வேலைகள் ஒரு பெரிய தொழில்நுட்ப வளையத்திற்குள் நடைபெறுவது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
பல்வேறு இடங்களில் சென்னைக்கு வரும் ரெயில்களும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் பயணிகள் பெட்டிக்கு வருவதற்கே முன்பே படுக்கை விரிப்புகள் கவர் போடப்பட்டு வைக்கப்படும்.

போர்வை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தூய்மை செய்வதற்காக சென்னை பேசின் பாலம் அருகில் நவீன தொழில்நுட்பத்திலான மிகப்பெரிய சலவை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதில் தினமும் 21 டன் துணிகள் சலவை செய்யப்படுகின்றன. ஒரு ஷிப்டுக்கு 7 டன் வீதம் 3 ஷிப்டு என 24 மணி நேரமும் இந்த சலவை தொழிற்சாலை இயங்கி கொண்டு இருக்கிறது. தினமும் 42 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு இங்கிருந்து போர்வை, கம்பளி உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்பட்டு ரெயில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டு குறித்த நேரத்திற்குள் நீராவி மூலம் சுத்தம் செய்து தானியங்கி கருவி சலவை செய்வதுடன் தானாகவே மடித்தும் வெளியே வந்து விடும். அதனை ஊழியர்கள் கவரில் அடைத்து ஒவ்வொரு ரெயில் பெட்டிக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நவீன சலவையகம் 20 ஆயிரம் சதுர அடியில் செயல்படுகிறது. 40 ஆயிரம் போர்வைகள் 20 ஆயிரம் துண்டு, 20 ஆயிரம் தலையணை கவர், 700 கம்பளி ஆகியவை தினமும் தூய்மைப்படுத்தப்படுகிறது.
நாகர்கோவில், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் குறைந்த கொள்ளளவு சலவையகம் செயல்பட்டு வருகிறது. விரைவில் மதுரை, கோவை மற்றும் மங்களூரில் 7800 செட் போர்வை தூய்மைப்படுத்தும் மையம் நிறுவப்பட உள்ளது.
தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் சுத்தமான சுகாதாரமான போர்வை, கம்பளி, படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்கோ பயணத்தை தொடங்கும் இடத்தில் இருந்து அது முடியும் இடம் வரை பயணிகளுகூகு வழங்கப்படும் போர்வை கம்பளியின் தூய்மை பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு-பகலாக நடைபெற்று வரும் இந்த பணியின் மூலம் ஒவ்வொரு ரெயில் பயணிகளுக்கும் சொகுசான மற்றும் சுகாதாரமான பயணத்தை கொடுக்கும் வகையில் இந்த பணி அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. முதல் வகுப்பு, இரண்டாம் மற்றும் 3-ம் வகுப்பு பயணிகள் வெண்மையான போர்வை, துண்டு ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது. இந்த பணியை தனியார் நிறுவன "பூட் அடிப்படையில் செய்ய தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.
ரெயில்வே வழங்கும் இந்த சேவைக்கு ஏ.சி. டிக்கெட்டுடன் அதற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. எனவே பயணிகளுக்கு தரப்படும் போர்வை, துண்டு, படுக்கை விரிப்பு தூய்மையாக இல்லையென்றால் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கையும் ரெயில்வே எடுத்து வருகிறது. தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ரெயில்வே இந்த பணியை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.
- கிருஷ்ணகிரி நகரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.
- சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
தருமபுரி:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக இன்று (12-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, அ.பள்ளிப்பட்டி மெனசி சிந்தல்பாடி, வெங்கடச முத்திரம், மோளையானூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, செலம்பை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இந்தமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
ஊத்தங்கரையில் கடந்த 2-ந் தேதி பெய்த கனமழையால் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும், டூரிஸ்ட் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதும், மழை நீரால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மக்கள் தவித்து வரும் சூழ்நிலையில் பலரது வீடுகள் இல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதோடு, வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2-ந் தேதி மழையால் ஏற்பட்ட தாக்கத்தை போல் இன்றும் நடந்து விடுமோ என்று இப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்பொழுது வரையிலும் விடுமுறை அளிக்காததால் பள்ளி மாணவர்களும் பாதிப்பு உள்ளாகி மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.






