என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
- அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்களை த.வெ.க. நிறுத்தியது.
- QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க.வினர் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதில், நுழைவுச் சீட்டு வைத்துள்ள 2000 பேருக்கு மட்டுமே உள்ளே அனுமதி என கட்சித் தலைமை அறிவுறுத்தியது. அதன்படி, நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டு வைத்துள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதற்காக ஜேப்பியார் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்களை த.வெ.க. நிறுத்தியது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை தொண்டரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு கருதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் த.வெ.க.வினர் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
- கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.71 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,974 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் ஆற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக செல்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன் குறுக்குத்துறையில் உள்ள முருகன்கோவில் மண்டபம் முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.
நள்ளிரவு வரையிலும் பெய்த கனமழையால் சாலை பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக நெல்லையில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் அடவிநயினார், குண்டாறு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்றும் பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அந்த அணைகளும் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டாறு அணை பகுதியிலும், கடனா அணை பகுதிகளிலும் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 73 ½ அடியாகவும் இருக்கிறது. 71 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர் மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.
நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதேபோல் சங்கரன் கோவில் மற்றும் சிவகிரி சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குளங்கள் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் சுற்று வட்டாரத்தில் மிக கனமழை பெய்தது. குலசேகரன்பட்டினம், திருச்செந்தூரில் 13 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்தி குளம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரம் எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
- 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
- போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வல்லம் படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் நவீன் (வயது24) மீது 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நவீன் தலைமறைவாகி விட்டார். அவரை அண்ணாமலை நகர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா வியாபாரி நவீன் அண்ணாமலை நகர் மாரியப்பா நகர் பகுதியில் உள்ள முட்புதருக்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணிக்கு அங்கு சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ்காரர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை நவீன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார்.
அதனையும் மீறி போலீஸ்காரர் அய்யப்பன், கஞ்சா வியாபாரி நவீனை பிடிக்க முயன்றார். அவரை நவீன் கத்தியால் வெட்டினார். இதில் அய்யப்பன் காயம் அடைந்தார். மேலும் நவீன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பல முறை எச்சரித்தார்.
ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி நவீன் தப்பி ஓட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனை சுட்டார். இதில் அவரது கால் மூட்டியில் குண்டு பாய்ந்தது.
உடனே நவீன் கீழே சரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலில் ஏற்பட்ட குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிக்க அவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரி கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அய்யப்பனும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா வியாபாரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம்(27), வல்லத்துறை பகுதியை சேர்ந்த அருள்(30) ஆகியோரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலனாது ஒரிசா அருகே கரையை கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது.
இதனை தொடர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
- ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- இறுதிக்காலம் வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் தமிழன்பன்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ஈரோடு தமிழன்பன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இறுதிக்காலம் வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் தமிழன்பன். அவரின் தமிழ்த்தொண்டை கவுரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க கோவில் நிர்வாகம் புனரமைத்தது.
இந்நிலையில், சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
- 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை நீடிக்கும்.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் தாக்கத்தால், தெற்கு அந்தமான் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
மேலும், இது வரும் புதன்கிழமை மேலும் தீவிரம் அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிடிவி தினகரன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.
- அண்ணாமலையின் கூட்டணி கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.
இதனிடையே, டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அண்ணாமலையின் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.
இந்நிலையில், கரூரில் திருமண விழா ஒன்றில் டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தோம்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்தார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட், பாந்தியோன் சாலை, மாண்டியத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்புகள்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த முருகன் சிலை புனரமைக்கப்ட்டுள்ளது. சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
- சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
- இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
சென்னை:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.






