என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கஞ்சா வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீசார்- சிதம்பரம் அருகே பரபரப்பு
- 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
- போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வல்லம் படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் நவீன் (வயது24) மீது 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நவீன் தலைமறைவாகி விட்டார். அவரை அண்ணாமலை நகர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா வியாபாரி நவீன் அண்ணாமலை நகர் மாரியப்பா நகர் பகுதியில் உள்ள முட்புதருக்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணிக்கு அங்கு சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ்காரர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை நவீன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார்.
அதனையும் மீறி போலீஸ்காரர் அய்யப்பன், கஞ்சா வியாபாரி நவீனை பிடிக்க முயன்றார். அவரை நவீன் கத்தியால் வெட்டினார். இதில் அய்யப்பன் காயம் அடைந்தார். மேலும் நவீன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பல முறை எச்சரித்தார்.
ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி நவீன் தப்பி ஓட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனை சுட்டார். இதில் அவரது கால் மூட்டியில் குண்டு பாய்ந்தது.
உடனே நவீன் கீழே சரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலில் ஏற்பட்ட குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிக்க அவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரி கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அய்யப்பனும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா வியாபாரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம்(27), வல்லத்துறை பகுதியை சேர்ந்த அருள்(30) ஆகியோரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






