என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
- கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக கட்சி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகிறார்கள். எனவே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை (ஜனவரி 10) தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை ஏற்க முடியாது எனக்கூறி வெளிநடப்பு செய்தோம்.
- ஆளுநர் பதவியே கூடாது என்பது தான் எங்கள் கொள்கை என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை:
யுஜிசி புதிய விதிகள் அறிவிப்பை எதிர்த்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை ஏற்க முடியாது எனக்கூறி வெளிநடப்பு செய்தோம்.
* ஆளுநருக்கு அதிக அதிகாரம் வேண்டும் என கலைஞர் இதே அவையில் தீர்மானம் கொண்டு வந்தார் என்று கூறினார்.
முன்னதாக, ஆளுநருக்கு அதிக அதிகாரம் வேண்டும் என கலைஞர் இதே அவையில் தீர்மானம் கொண்டு வந்ததாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,
எந்த காலத்திலும் ஆளுநருக்கு கூடுதல் பதவி என நாங்கள் கூறியிருக்க மாட்டோம், அப்படி இருந்தால் காட்டுங்கள்.
ஆளுநர் பதவியே கூடாது என்பது தான் எங்கள் கொள்கை என சட்டசபையில் காட்டமாக பதில் அளித்தார்.
- காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- பக்தர்கள் குவியாமல் தடுக்கிற பொறுப்பு தேவஸ்தான நிர்வாகத்திற்கு இருக்கிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொள்ள திருப்பதி சீனுவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகி இருக்கிற செய்தி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.
மேலும் 30 பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் டோக்கன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கவுண்டரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிவதை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
லட்சக்கணக்கில் இலவச டோக்கன்கள் வழங்கும் போது நிறைய கவுண்டர்களை திறந்து ஒரே இடத்தில் பக்தர்கள் குவியாமல் தடுக்கிற பொறுப்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு இருக்கிறது.
அந்த பொறுப்பை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு சரிவர நிர்வகிக்காத காரணத்தினால் 6 பேர் பலியான கோர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
பொதுவாக இலவசங்களை வழங்கும் போது மக்கள் நெரிசலில் சிக்கி இத்தகைய கோர சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்திருக்கின்றன. அதிலிருந்து படிப்பினையை பெற்று கோர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
இதுகுறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தி 6 பேர் பலியான சம்பவத்திற்கு உரிய காரணத்தை அறிய முற்பட வேண்டும்.
விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் ஆந்திர மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர் குழுவினர் பார்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் கேட்டறிந்தனர்.
- ஆய்வின் போது தாசில்தார் சிவகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காட்டுமன்னார் கோவில்:
தமிழக அரசு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களை தேடி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பல தலைமுறைகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கட்டிட கலையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் கோவில்கள், அகழ்வாராய்ச்சி மையங்கள், புகழ்பெற்ற நீர் நிலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் பெருமைகளை உலகுக்கு தெரிவிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் படி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பராந்தக சோழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கண்காணிப்பாளர் கனிமொழி தலைமையில் இலங்கை, கனடா, உகாண்டா, தென் அமெரிக்கா, மோரிஷீயஸ், ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர் குழுவினர் பார்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் கேட்டறிந்தனர்.
முன்னதாக இந்த குழுவினர் கீழடி, தஞ்சை பெரிய கோவில், ராமேசுவரம், தாராசுரம் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்ததாக கூறினார்கள்.
ஆய்வின் போது தாசில்தார் சிவகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
- மனுவுக்கு 27-ந்தேதிக்குள் பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.
இதுகுறித்து 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன். என் மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு நான்கு வாரங்களில் சூரியமூர்த்தி மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் எம்.பி. ரவீந்திர நாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரிமா சுந்தரம், கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறார்கள். இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில் அதே விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் மனுவுக்கு 27-ந்தேதிக்குள் பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை.
- இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முதலாக பணம் பிடிபட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சங்ககிரி பெருமாள்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் என தெரியவந்தது.
அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முதலாக பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.
- சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் கடுமையான பனி நிலவி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சென்றதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு 62-வது மலர் கண்காட்சிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதற்கட்ட மலர் செடிகள் நடவு நடைபெற்றது.
தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சால்வியா, பிங்க் ஆஸ்டர், ஒயிட் ஆஸ்டர், டெல்பினியம், லில்லியம் உள்ளிட்ட 10 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களாக மனிதர்களை மட்டுமின்றி மலர் செடிகளையும் பனி கடுமையாக பாதித்து வருகிறது. மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10 மணிவரை நீடிக்கிறது.
இதனால் மலர் நாற்றுகள் கருகுவதை தவிர்க்க பூங்கா நிர்வாகம் சார்பில் செடிகளுக்கு நிழல்வலை அமைப்பு கொண்ட பனிப்போர்வை போர்த்தப்பட்டுள்ளது. பனிக்காலம் முடியும் வரை இந்த போர்வை இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் கொடைக்கானலில் வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.
- சீமான் கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் நேருக்கு நேர் அமர்ந்து பேசுங்கள்.
- கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து புகார் பதியப்படவில்லை என்றால் நாதகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவர்.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முற்றுகையிட வந்தவர்கள் சீமான் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை த.பெ.தி.க.வினர் உடைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நா.த.க. நிர்வாகி கூறுகையில்,
* சீமான் வீட்டை முற்றுகையிட வந்தவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இல்லை பொறுக்கிகள்.
* தலைவர் சீமான் கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் நேருக்கு நேர் அமர்ந்து பேசுங்கள்.
* நேரில் பேசுவதற்கு திராணி இல்லாமல் பொறுக்கிகள் போல் செயல்படுகின்றனர்.
* கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து புகார் பதியப்படவில்லை என்றால் நாதகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று கூறினார்.
- முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம்:
நாமக்கல்லில் இருந்து கோவைக்கு 90 ஆயிரம் முட்டைகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அதனை நாமக்கல்லை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டினார். அவருடன் கந்தசாமி என்பவரும் உடன் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடம் அருகே சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த நந்தகுமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
- சீமான் தற்போது புதுச்சேரிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்நிலையில் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
* பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமானை எங்கும் நுழைய விட மாட்டோம்.
* சீமான் தற்போது புதுச்சேரிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு சென்று த.பெ.தி.க.வினர் ஆதாரம் கேட்க உள்ளனர்.
* பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என்று அவர் கூறினார்.
மங்கலம்:
திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த 31-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு அலங்கார பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி கும்பம், சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் நடுவேலம்பாளையம், லட்சுமிநகர் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். சுமங்கலிப்பெண்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற வெள்ளை நிற சேலை அணிந்து வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், சுமங்கலி பெண்கள் அம்மனை நினை த்து வெள்ளை சேலை அணிந்து வீடு தோறும் மடிப்பிச்சை எடுத்து கோவிலில் செலுத்தினால் அவர்கள் நினைத்த காரியம் ஒரு வருடத்தில் நிறைவேறும். இதனால் சுமங்கலி பெண்கள் பலர் வெள்ளை சேலை அணிந்து வழிபாடு நடத்துகின்றனர் என்றனர்.
- யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?
- மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?
சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை.
எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?
"#யார்_அந்த_SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?
மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது
ஜனநாயகப் படுகொலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல! என்று தெரிவித்துள்ளார்.






