என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
* காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.
* காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
* இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தற்போது வரை தமிழ்நாட்டில் இரு முறை காலநிலை உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.
* தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.
* காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.
* வயநாடு மற்றும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை மறந்திருக்க முடியாது.
* வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளோம். வெப்ப அலை தாக்கத்தின் போது மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்த நடவடிக்கை.
* நீர்நிலைகள் மறுசீரமைப்பு, பல்லுயிர் பெருக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
- போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
- மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது.
இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பலரும் சமூக வளைதளங்ககளில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரத்தில் இந்து முன்னணியினர் தலையிட்டு இன்று இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலை தளங்ககளில் தகவல் பரவியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி பா.ஜ.க. மாவட்ட முன்னாள் பொது செயலாளர் கோவிந்த ராஜூவை போச்சம்பள்ளியை அடுத்த செல்லம்பட்டி அருகே மொரசிபட்டியில் அவரது வீட்டில் சிறை வைத்து நேற்று காலை 6 மணி முதல் நாகரசம்பட்டி போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அவருடன் 25-க்கும் மேற்ப்பட்ட பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரையும் கைது செய்யப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இதன்காரணமாக பர்கூர் டி.எஸ்.பி. முத்து கிருஷ்ணன் தலைமையில் போலீசார் மாவட்ட எல்லையான மஞ்சமேடு தென்பெண்ணை யாற்றின் போலீஸ் நிலையத்தில் வாகனங்கள் தீவீர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.

திண்டுக்கல்
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று அறப்போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததுடன் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அங்கு செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்திலும் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவசேனா, வி.எச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் திண்டுக்கல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடைபெறுவதை தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் பழனி கோவில் உள்பட முக்கிய கோவில் முன்பும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

நாகர்கோவில்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், மலை முழுவதும் முருகனுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை போராட்டம் நடத்தபோவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து மதுரை மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து இந்து அமைப்பினர் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் பஸ் நிலையங்களிலும் ரெயில் நிலையங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இரவு 10 மணி முதல் 2 மணி வரையிலும், இரவு 2 மணி முதல் 6 மணி வரையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சந்தேகப்படும்படியாக யாராவது வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர். நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
குழித்துறை, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல் போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை வழியாக செல்லும் ரெயில்களில் யாராவது இந்த அமைப்பு நிர்வாகிகள் பயணம் செய்கிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அமைப்பு நிர்வாகிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜாவை வடசேரி போலீசார் கைது செய்தனர். துவரங்காட்டை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் கார்த்திக்கை ஆரல்வாய் மொழி போலீசார் கைது செய்தனர்.
இந்து முன்னணி கோட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஜெயராம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி ஆலோசகர் மிஷாசோமனை பிரம்ம புரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சிறை வைத்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
- மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
பரபரப்பான சென்னையில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதனால் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரில் மிகுந்த ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை சிவராஜ் என்பவர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு பணிக்குச் செல்லும் வழியில் ஆவடி CRPF காவலர் துப்பாக்கியை தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு CRPF-யிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் அனைத்து சதுப்புநிலங்களும் 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கை (notification) செய்யப்படும்.
- அறிவிப்புகளை TN Climate Summit 3.0 மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று 3-ஆவது காலநிலை மாநாட்டை (TN Climate Summit 3.0) முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார். தமிழ்நாடு சதுப்புநிலங்கள் இயக்கமும் (TN Wetlands Mission) இதில் ஒரு அங்கமாக உள்ளது.
தமிழ்நாடு மாநில சதுப்புநிலங்கள் ஆணையம் (TNSWA) அமைக்கப்பட்டு 6 ஆண்டுகள் 2 மாதங்கள் 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாட்டின் ஒரே ஒரு சதுப்புநிலத்தைக் கூட இன்னமும் அறிவிக்கை (notification) செய்யவில்லை. இந்நிலையில் பின்வரும் வாக்குறுதிகளை முதலமைச்சர் அளிக்க வேண்டும்.
1. 'இஸ்ரோ Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் (Complete ground truthing as well as demarcation of wetland boundaries)' எனும் உச்சநீதிமன்றத்தின் 11.12.2024 உத்தரவின் படி அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் உடனடியாக வரையறை செய்யப்படும்.
2. தமிழகத்தின் அனைத்து சதுப்புநிலங்களும் 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கை (notification) செய்யப்படும்.
3. சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் (Wetland City Accreditation of the Ramsar Convention) இணைப்பதற்காக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும்.
என்கிற அறிவிப்புகளை TN Climate Summit 3.0 மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பரங்குன்றம் மலையை காக்க கோரி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் போலீசார் தடையை மீறி திருப்பரங்குன்றத்திற்கு செல்வோம் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரை சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமையில் இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் செல்வார்கள் என்பதால் திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு சோதனை சாவடியில் 6 போலீசார் வீதம் வாகனங்களை சோதனை செய்தனர். வாகனங்களில் மொத்தமாக செல்பவர்களை விசாரித்து அதன்பிறகே அனுப்பி வைத்தனர். நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இன்று காலையும் சோதனை தொடர்ந்தது.
திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார், வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். போராட்டத்திற்கு பங்கேற்க செல்வதாக கருதப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வீடு-அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வீட்டில் சிறைவைக்கப்பட்டார்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் செல்ல முயலும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட்ட பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 576 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்கும் வகையில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்ட 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் என மொத்தம் 256 வாக்காளர்கள் தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.
இதில் 246 பேர் தபால் வாக்குகள் செலுத்தியுள்ளனர். 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கட்டுப்பாடு கருவிகள், ஒரு வி.வி.பேட் என 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
நேற்று மாலையுடன் இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வெளியூரைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேறினர்.
நேற்று இரவில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபம், சமுதாயக்கூடத்தில் யாராவது வெளிநபர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு 237 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை, குடிநீர் வசதி, சாமியான பந்தல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 முதல் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் மொத்தம் 24 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு சி.என்.சி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இன்று காலை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் அந்தந்த மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு கீழ் பணி செய்யும் அலுவலர்கள், அவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஒவ்வொரு லாரியிலும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீசார், டிரைவர், சாதாரண போலீசார், ஒரு அலுவலர் ஆகியோர் வாகனங்களிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாகனங்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை ஈரோடு தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 97 வகையான பொருட்களுக்கும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. மண்டல அலுவலர்கள் தாங்கள் கொண்டு செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து வேனில் வந்த போலீசார் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட போலீசார் துணை ராணுவத்தினர் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களில் தங்களது பாதுகாப்பு பணியை தொடங்கினர்.
இதேப்போல் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இன்று இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறித்த ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்கள் வாக்குச்சாவடி மையங்களிலேயே தங்கி இருந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர். நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன் பின்னர் காலை 7 மணி முதல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி உடன் தேர்தல் நிறைவடைந்ததும் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொரியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
- நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டார். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன்முதலாக பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. கடவுள் இல்லை என்ற கொள்கையை கைவிட்டு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னவர். காங்கிரசார் வாக்கிற்கு பணம் கொடுத்த போது, தங்கத்தை யாராவது தவிட்டிற்கு விற்பார்களா என்று கேட்டவர் அண்ணா.
அவருடைய பேரைச் சொல்லி கட்சி நடத்துபவர்கள், வாக்கினை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவதூறு, அசிங்கம், பழிவாங்கல், அடக்குமுறை இல்லாத நல்லாட்சி கொடுத்தவர் அண்ணா.
அவர் அரசியல் தளத்திற்கு வந்த பிறகுதான், தமிழர்களின் இலக்கியம், வரலாறு அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. பணத்தை முன் நிறுத்தி அவர்கள் நிற்கும் போது நாங்கள் இனத்தை முன் நிறுத்தி நிற்கிறோம்.
நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள். மக்களை வைத்து பிழைக்க நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு உழைக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து தோல்வி வந்தாலும், உங்களை நம்பி நிற்கிறோம்.
ஆதிக்குடி மக்களுக்கு சாதிச்சான்று கிடைக்க வில்லை. சமூகநீதி பேசிய திராவிடர்கள் எங்கே போனார்கள்? சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து இடப்பகிர்வை கொடுக்க இவர்கள் மறுக்கின்றனர்.
சாதி வாரிக்கணக்கெடுப்பு எடுத்தால் நரிகளின் வேஷம் கலைந்து விடும். இதை யெல்லாம் தெரிந்தும் வாக்கினை விலைக்கு விற்கலாமா? இங்கு அரசு வழங்கும் கல்வி, மருத்துவம் எதுவும் தரமில்லை.
இந்த அரசாங்கம் மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து விட்டு தண்ணீரை விலைக்கு விற்கிறது. சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நாட்டிற்கு எதற்கு 5000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க வேண்டும். இத்தனை நாட்களாக நீங்கள் தலைவர்களை தேர்வு செய்யவில்லை. தரகர்களைத் தேர்வு செய்து வந்துள்ளீர்கள்.
சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சி, பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்காளர்களை மயக்குகின்றனர். முதல்வர், துணை முதல்வர் உங்களை வந்து பார்க்கவில்லை. அவ்வளவுதான் உங்கள் மதிப்பு. உங்களுக்காக பேச எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இதற்கு முன்பு நடந்த இரு தேர்தல்களிலும், எந்த கூட்டணியும் இல்லாது, மக்களை நம்பி போட்டியிட்டோம்.
மதுக்கடைகளுக்கு விடுமுறை என்றால் முன் கூட்டியே மதுவை வாங்கி வைக்க சிந்தனை செய்யும் நீங்கள், எதிர்கால சந்ததிக்கு குடிநீர், காற்று, கல்வி, உணவு போன்றவை இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து பலமுறை இந்த கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி விட்டீர்கள். வாக்கிற்கு பணம் கொடுத்தால் போதும் என்பதுதான் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் மதிப்பு.
ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை யில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இதை சொல்வதற்கு 40 எம்பிக்கள் எதற்காக? அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
எனது வருவாயைப் பெற்று, எனக்கு நிதியைத்தர மறுக்கிறாய் என இந்த ஆட்சியாளர்கள் வரிகொடா இயக்கத்தை நடத்த முடியாதா? இவர்கள் அந்த முடிவை எடுக்க மாட்டார்கள்.
ஆளுநர் நியமனம் செய்யும் துணைவேந்தர்க ளுக்கு ஆளுநர் ஊதியம் வழங்கட்டும். தமிழக அரசு நியமனம் செய்யும் துணை வேந்தர்களுக்கு மட்டும் தான் நாங்கள் சம்பளம் கொடுப்போம் என்று தமிழக அரசு சொல்ல முடியாதா? இவர்கள் கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதால் இவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அதிமுக, பாஜகவினரிடம் சென்று, 'நீங்கள் வாக்கு செலுத்தி சீமானை வளரவிட்டீர்கள் என்றால், அடுத்து உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்' என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
பெரியாரை விமர்சித்த சீமானுக்கு அதிக வாக்கு விழக்கூடாது என்பதால் நோட்டாவிற்கு போடுங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர்.
பெரியார் என்ன செய்தார் என்று பேச ஒருவருக்கும் தைரியம் இல்லை. காசு கொடுத்து வாக்கினை வாங்குவதுதான் திராவிட மாடல். இப்போது நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லும் திமுக, 234 தொகுதிகளில் நான் போட்டியிடும் போதும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு சொல்வார்களா?
2026 பொதுத்தேர்தலில் நான் தனித்து போட்டியிடுவேன். ஆண்கள், பெண்களுக்கு நான் சம வாய்ப்பு கொடுப்பேன். உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதி வீட்டில் வெளிச்சம் வரும். உன் வீட்டுக்கு வெளிச்சம் வராது. பழைய சின்னங்களை தூக்கி வீசி நாம் தமிழரை ஆதரியுங்கள். நாட்டை நாசமாக்கியவர்கள் மீது, உங்கள் கோபத்தை வெளிப்படுத்த, எங்களுக்கு வாக்கு செலுத்தி வெளிப்படுத்துங்கள்.
வாக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல், லஞ்சத்திற்கு விதை ஊன்றப்படுகிறது. ஒரு முதலாளி 100 கோடி ரூபாய் முதலீடு செய்வது மக்கள் சேவை செய்ய வருவார்களா?
நாங்கள் தெரு தெருவாக வந்து மக்களை சந்திக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் ஏன் வந்து மக்களைச் சந்திக்கவில்லை. ஆட்சியின் சாதனையை சொல்ல ஒன்றுமில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் இருக்கிறது.
வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர். பிரச்சாரத்திற்கு வராமல் வெற்றி பெறுவோம் என்று திமிருடன் இருக்கும் தி.மு.க. வை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்.
குடும்பத்தலைவிக்கு ஆயிரம் உதவித்தொகை கொடுத்து, அதனை டாஸ்மாக் மூலம் திரும்ப வாங்கிக் கொள்கின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்கு கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்து இதற்கு பணம் கொடுக்கின்றனரா?
மகளிரை, மாணவியரை கையேந்த வைக்கத்தான் இவர்கள் திட்டம் போடுகி ன்றனர். பிச்சை எடுக்கும் திட்டத்திற்கு மட்டும் தமிழ் மகள் என்று ஏன் பெயர் வைக்கின்றீர்கள். திராவிட மகள் என்று வைக்க வேண்டியது தானே. ஒருநாள் திராவிட மாடலை, ஈயம், பித்தளை, பேரிச்சம் பழத்திற்கு போடும் நிலை யை வர வைப்பேன்.
இந்த தேர்தல் கட்சி களுக்கான போட்டி யிட்டிலை. கருத்தியலுக்கான போட்டி. திராவிடக் கோட்பாட்டிற்கும், தமிழ் தேசிய கருத்துகள் மோதுகின்றன.
உன் இனத்தை, வளத்தை பாதுகாக்க, தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வெற்றி மாற்றத்திற்கான, நல்ல அரசியலுக்கான மகத்தான தொடக்கமாக இருக்கட்டும். ஒற்றை விரலால் ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
- சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே இயக்கி வந்தது. இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் வரும் மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.
இந்த விமானம் ஆனது மாலை 6:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும். மீண்டும் இந்த விமானம் இரவு 8 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் திருச்சி சென்னைக்கு 5 சேவைகளை வழங்கி வரும் நிலையில் ஆறாவது சேவையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை தொடங்குவது அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது
- நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த மாதம் 22-ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தங்கம் விலை, உயர்ந்து கொண்டே சென்று ரூ.61 ஆயிரத்தையும் கடந்தது. இந்த சூழலில், கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. பிப்ரவரி 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து, ரூ.7 ஆயிரத்து 705-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,810-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,480-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640
02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840
30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-02-2025- ஒரு கிராம் ரூ.107
02-02-2025- ஒரு கிராம் ரூ. 107
01-02-2025- ஒரு கிராம் ரூ. 107
31-01-2025- ஒரு கிராம் ரூ. 107
30-01-2025- ஒரு கிராம் ரூ. 106
- சிறுவனின் கால்கள் திடீரென உணர்விழந்து போனது.
- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் மகன் வைத்திஸ்வரன் (9). இவர் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவனின் கால்கள் திடீரென உணர்விழந்து போனது. இதையடுத்து அவன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பரிசோதனையில் சிறுவன் ஜிபிஎஸ் என்னும் அரிய வகை நோயால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாக்டீரியாக்களால் பரவக்கூடிய இந்த நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
- புற்றுநோயை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- ரம்பரை பரம்பரையாக ஏற்படும் மரபணு மாற்றத்தால் 10-15 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த ஆண்டில் மட்டும் (2024) மார்பக புற்றுநோயால் 13 ஆயிரத்து 600 பேரும், கர்ப்பப்பை புற்றுநோயால் 7 ஆயிரத்து 900 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஆண்களில் நாக்கு மற்றும் வாய்ப்புற புற்றுநோயால் 5 ஆயிரத்து 500 பேரும், நுரையீரல் புற்றுநோயால் 3 ஆயிரத்து 300 பேரும் என மொத்தம் 96 ஆயிரத்து 500 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்பு கடந்த 2023-ம் ஆண்டைவிட 4 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பை குறைப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புற்றுநோயை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரி புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சுரேஷ் கூறியதாவது:-
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வரை கர்ப்பப்பை புற்றுநோயால் அதிக பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது மார்பக புற்றுநோயால் தான் அதிக பேர் பாதிக்கப்படுகின்றனர். பரம்பரை பரம்பரையாக ஏற்படும் மரபணு மாற்றத்தால் 10-15 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஒரே குடும்பத்தில் 2-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போது அவர்களின் உடம்பில் 'பிராக்கா' என்ற ஜீன் பாசிட்டிவாக இருந்தால் அவர்களின் வாழ்நாளில் 60 முதல் 80 சதவீதம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே, 'பிராக்கா' ஜீன் பாசிட்டிவாக இருந்தால் அதற்காக முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை பெற்றால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். மேலும், குட்கா, புகையிலை பயன்படுத்துபவர்கள், கொழுப்பு அதிகரிப்பு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
- நாளையும் இதுபோன்ற பனிமூட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனிடையே, சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இதனிடையே, நாளையும் இதுபோன்ற பனிமூட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் நிலவும் பனி மூட்டத்தை சமூக வலைத்தளங்களில் இணையதள வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.






