என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாதவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • சோழிங்கநல்லூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

    இதில் பேசுபவர்கள் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி ஆவடியில் நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாதவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    பொதுச்செயலாளர் துரைமுருகன் அணைக்கட்டிலும், பாளையங்கோட்டையில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும் பேசுகிறார்கள். திருவண்ணாமலையில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உசிலம்பட்டியில் டி.கே.எஸ்.இளங்கோவன், லால்குடியில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டிவனத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்.

    செங்கல்பட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைச்சர் கோ.வி.செழியன், கொளத்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சோழிங்கநல்லூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகின்றனர்.

    மொத்தம் 72 ஊர்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அந்தந்த பகுதி அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    6-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான - மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • மனு நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் (ரெலா) மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, ரவுடி நாகேந்திரன் மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதனையடுத்து, ஒரே கோரிக்கையுடன் 2 நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
    • சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம் அல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலுங்கானா மாநில அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க இருக்கிறது.

    ஆனால், தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம் அல்ல. ஐகோர்ட் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தங்கள் உறக்கத்தைக் கலைத்து விட்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • என்.ஜ.ஏ. அதிகாரிகள் அப்துல் பாசித்தை கைது செய்தனர்.
    • அப்துல் பாசித் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று அங்கு தங்கி இருந்து அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களை மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

    சென்னை:

    சென்னை, மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தது தெரிய வந்தது. ஐஎஸ் இயக்கத்திற்கு ஏற்கனவே ஆள்களை திரட்டிய இவர், வயதான நிலையில் மீண்டும் அதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து என்.ஜ.ஏ. அதிகாரிகள் அப்துல் பாசித்தை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அப்துல் பாசித் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று அங்கு தங்கி இருந்து அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களை மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக வாலிபர்களை மாற்றுவதற்காக இவர் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மாநில உளவு பிரிவு போலீசாரும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகளும் அப்துல் பாசித்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார்.
    • வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் (52). இவருக்கு திருமணம் ஆகி மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதேசன் வடமாநிலத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரிம்பட்டி கிராமத்திக்கு மாதேசன் வந்துள்ளார். இன்று காலை சமையல் செய்வதற்காக சிலிண்டரின் அருகில் சென்றபோது திடீரென வெடித்து சிதறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மாதேசன் தீக்காயங்களுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார். வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சில பகுதிகளும் சேதம் அடைந்தன.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது மாதேசன் வீடு இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாதேசன் பலத்த காயம் அடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டு இருந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், துணிமணிகள், மளிகை பொருட்கள், கட்டில், பீரோ என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.

    இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறை நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது.
    • ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கும், பொதுமக்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பினை வழங்கி நாட்டை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல் துறைக்கு உண்டு. ஆனால், கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது.

    காவல் துறை சார் ஆய்வாளர், காவலர், சிறை காப்பாளர், தீயணைப்புத் துறை வீரர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றதாகவும், அந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுட்டிக்காட்டியதாகவும், இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய அறையில் தீப்பிடித்த

    தாகவும், இந்தத் தீவிபத்து தன்னை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அவர் காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். காவல் துறையில் உயர் நிலையில் உள்ள பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அவரே காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்க வேண்டிய அலங்கோல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால், தமிழ்நாடு வன்முறைக் காடாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன். இதனைத் தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
    • தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்ற என்சிசி மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு,

    * சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.

    இது பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண் தான் என்று சீமான் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், "சீமானுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார்.

    • பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர்.
    • பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் புதுப்பேட்டை பகுதியில் இன்று காலை வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டு பனிப்பொழிவு ஏற்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பண்ருட்டி கும்பகோணம் சாலை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் சாலை, புதுப்பேட்டை அரசூர் சாலை, அண்ணாகிராமம்-பண்ருட்டி சாலை, கண்டரக்கோட்டை சென்னை சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை 8 மணி வரை தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    மேலும், பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சீதோஷ்ண மாற்றம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு முதல் பனி மூட்டம் மிகக்கடுமையாக இருந்தது. அதுவும் குறிப்பாக காலை 8.30 மணி வரை பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.

    இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் எறும்புகள் ஊர்ந்து செல்வதுபோல் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன.

    மேலும் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் பனிப்பொழிவு டெல்லியை மிஞ்சும் வண்ணம் இருந்தது. இதன் காரணமாக காலை 8.30 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைந்தே காணப்பட்டது.

    • சுமார் 85 முதல் 90 கி.மீ. வேகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • போடி வருவதற்கு 1 மணி நேரம் 36 நிமிடம் ஆனது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு ரூ.436 கோடி செலவில் அகல ரெயில் இருப்புப் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர் மதுரையில் இருந்து போடிக்கும், போடியில் இருந்து மதுரைக்கும் தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடிக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் ரெயில் மதுரை வழியாக போடி வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரெயிலாக வரக்கூடிய அதி விரைவு ரெயில், மதுரையில் இருந்து போடி வரை டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு வருகிறது.

    இதனால் சுமார் 40 நிமிடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சீர் செய்யும் வகையில் போடியில் இருந்து மதுரை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்தது.

    இந்நிலையில் விரைவில் மதுரையில் இருந்து போடிக்கு மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தது.

    இதன் முக்கிய கட்டமாக கடந்த வியாழக்கிழமை போடியில் இருந்து மதுரை வரை உள்ள மின்சார வழி தடக் கம்பிகளில் மின்சார ரெயில் போக்குவரத்திற்கு மின் தொடர்பு ஏற்படுத்தித் தரும் பேன்டோகிராப் எனப்படும் மின்தட இணைப்பு உபகரணம் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    அதன் பின் முதன்முறையாக மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே இன்று முதல் சென்னையில் இருந்து காட்பாடி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியே வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் சென்னை அதிவிரைவு ரெயில் மற்றும் மதுரையில் இருந்து தினசரி போடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரெயிலாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது.

    110 கி.மீ. வேகத்தில் சோதனை செய்யப்பட்ட மின்சார ரெயில் முதல் நாள் என்பதால் மதுரையில் இருந்து சுமார் 85 முதல் 90 கி.மீ. வேகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டிபட்டி கணவாய் மற்றும் போடி, பூதிபுரம் அருகே உள்ள பாலங்களில் வேகம் குறைக்கப்பட்டதன் காரணமாக போடி வருவதற்கு 1 மணி நேரம் 36 நிமிடம் ஆனது.

    இன்று முதன்முறையாக மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கியதை முன்னிட்டு இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார தடங்களில் 25,000 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின்சார தடங்கள் உள்ள இருப்புப் பாதைகளில் அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதைகளை கடப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் மற்றும் ரெயில்வே போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
    • இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்துக்கு இன்று [பிப்ரவரி 4] அதிகாலை 237 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தாக கூறப்படுகிறது.

    இதையடுத்து விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், தீவிர சோதனை நடத்தப்பட்டதில், விமானத்தில் வெடிபொருள்கள் எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது.

    விமானம் குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று உறுதி செய்த அதிகாரிகள் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    • காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.

    * காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    * இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தற்போது வரை தமிழ்நாட்டில் இரு முறை காலநிலை உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.

    * தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.

    * காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.

    * வயநாடு மற்றும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை மறந்திருக்க முடியாது.

    * வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளோம். வெப்ப அலை தாக்கத்தின் போது மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்த நடவடிக்கை.

    * நீர்நிலைகள் மறுசீரமைப்பு, பல்லுயிர் பெருக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

    ×