என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?.
    • எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்?

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் லீக் ஆனது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    அந்த எப்.ஐ.ஆர். நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும் கிரைம் பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    அவர்களில் மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து செய்தியாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "செய்தியாளர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது. அவர்களிடம் பறிமுதல் செய்த மொபைல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும். செய்தியாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

    மேலும், "விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?. பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்?. எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. 

    • வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதை நிறுத்த வேண்டும்.
    • அவர்களை அழைத்து பேச்சு நடத்தி, ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணைப்படி, தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி ஒரு வாரமாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து அவர்களை அழைத்து பேச வேண்டிய அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 7,314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டின் இறுதியில்தான் ரூ.20,000 என்ற நிலையை எட்டியது.

    அதிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும்தான் ஊதியம் வழங்கப்படும். ஊதியம் தவிர விடுப்பு, வருங்கால வைப்புத்தொகை உள்ளிட்ட எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது.

    தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்; பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடியும் பயனில்லாததால்தான் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் வாயில் முழக்கப் போராட்டமும், பிப்ரவரி 3-ஆம் நாள் முதல் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமும் மேற்கொண்டு வருகின்றனர்.

    கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனும் நிலையில், அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்துவதுதான் முறையாகும். அதற்கு மாறாக, அவர்களுக்கு எதிராக பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    பல கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேரடியாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறைகள் மூலம் நியாயக்குரல்களை அடக்கி விடலாம் என்று தமிழக அரசு நினைத்தால், அதற்கு தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும் என்பது உறுதி.

    உண்மையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசுதான் ஐந்தாண்டுகளுக்கு மேலாக துரோகம் இழைத்து வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 28.01.2019-ம் நாள் ஆணையிட்டது.

    ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படாத நிலையில், அதை எதிர்த்து வழக்கில் கடந்த 21.03.2024-ஆம் நாள் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ''கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்'' என்று அரசுக்கு ஆணையிட்டது.

    ஆனால், அதை அரசு ஏற்காத நிலையில், மீண்டும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 18-ம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30-ம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. இதுதான் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு காரணம் ஆகும்.

    பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இந்தியாவில் பல மாநிலங்களில் வழங்கப்படுகின்றன. ஆனால், முற்போக்கு மாநிலம் என்று ஆட்சியாளர்களால் போற்றப்படும் தமிழ்நாட்டில்தான் நியாயமான ஊதியம் பெறும் உரிமை கூட மறுக்கப்படுகிறது.

    இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் அனைத்தும் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. அரசு கல்லூரிகளில் உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலானவை காலியாக உள்ள நிலையில் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டுதான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் இல்லாமல் கல்லூரிகளை நடத்த முடியாது எனும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பது நியாயமல்ல.

    எனவே, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதை அரசு நிறுத்த வேண்டும். மாறாக, அவர்களை அழைத்து பேச்சு நடத்தி, ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • 17 கலைஞரின் நாவல்கள், 36 சிறுகதைகள், 17 நாடகங்கள், 62 கவிதைகள், 18 கட்டுரைகள், 6 தன்வரலாறு, 7 இலக்கிய உரைகள்.
    • 82 கலைஞர் குறித்த நூல்கள் மற்றும் 2 கலைஞர் குறித்த கட்டுரைகள், என மொத்தம் 955 அரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை (https://www.tamildigitallibrary.in/kalaignar) தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார்.

    கலைஞர் நடத்திய "தமிழிணையம் 99" மாநாட்டின் விளைவாக, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்திட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் தமிழ் இணையக் கல்விக்கழகம் 17.02.2001 அன்று உருவாக்கப்பட்டது.

    இந்நிறுவனத்தால் 39 நாடுகளில் 181 தொடர்பு மையங்கள் மூலமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இணையவழியில் தமிழ் கற்பிக்கப்படுவதுடன், கணித்தமிழ் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கருவிகளை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

    மேலும், அறிவைப் பொதுமை செய்யும் நோக்கத்தில் தமிழ் மின்நூலகம் (https://www.tamildigitallibrary.in) உருவாக்கப்பட்டு, தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பருவ இதழ்கள் மற்றும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்களைப் பதிவேற்றம் செய்து, உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படும் வகையில் கட்டணமில்லாச் சேவையினை வழங்கிவருகின்றது. இந்த மின்நூலகம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் பத்தரை கோடி பார்வைகளை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் பன்னிரெண்டு கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து பயணிக்கிறது.

    கலைஞரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'கலைஞர் கருவூலம்' என்ற சிறப்பு இணையப் பக்கத்தை (https://tamildigitallibrary.in/kalaignar) முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

    இப்பக்கத்தில் இலக்கியம், இதழியல், உரைகள், திரைப்படங்கள், காலப்பேழை, கலைஞர் குறித்து எனும் தலைப்புகளின் கீழ், 17 கலைஞரின் நாவல்கள், 36 சிறுகதைகள், 17 நாடகங்கள், 62 கவிதைகள், 18 கட்டுரைகள், 6 தன்வரலாறு, 7 இலக்கிய உரைகள், 322 கலைஞர் நடத்திய இதழ்களின் பிரதிகள், 18 ஆண்டு மலர்கள், 73 கடிதங்கள், 3 கேலிச்சித்திரங்கள், 36 சட்டமன்ற உரைகள், 89 சொற்பொழிவுகள், ஓர் நேர்காணல், 11 திரைக்கதை வசனங்கள், 2 பாடல்களின் தொகுப்புகள், 126 புகைப்படங்கள், 19 ஒலிப்பேழைகள், 9 காணொலிகள், 82 கலைஞர் குறித்த நூல்கள் மற்றும் 2 கலைஞர் குறித்த கட்டுரைகள், என மொத்தம் 955 அரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

    பண்பாட்டையும், நாகரிகத்தையும் அள்ளித்தரும் அரிய களஞ்சியமான சங்க இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் உள்ள அறிவுச் செல்வங்களை இன்றைய தலைமுறை பெறுவது அவசியம்.

    நம் பண்பாட்டில் தலைசிறந்து விளங்கும் அக வாழ்க்கையை எடுத்துரைக்கும் 211 பாடல்களும், தமிழர்களின் வீரம், கொடை, புகழ், கடமைகள், கல்விச் சிறப்பு முதலானவற்றை எடுத்தியம்பும் 141 புறப்பாடல்களும், அகமும் புறமும் சார்ந்து 14 பாடல்களும், என 366 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள சங்கத்தமிழ் நாள்காட்டியினை முதலமைச்சர் வெளியிட்டார்.

    இப்பாடல்களுக்கான ஓவியங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களால் வரையப்பட்டன. இச்சங்கத்தமிழ் நாள்காட்டி எல்லா ஆண்டுகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் (Infinity Calendar), ஆங்கிலத் தேதிகளை மட்டும் குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற மரபினை நினைவூட்டும் இச்சங்கத்தமிழ் நாள்காட்டி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (SIPCOT) நிதி நல்கையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் சே.ரா. காந்தி, இணை இயக்குநர்

    ரெ. கோமகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடை 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
    • ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன

    சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

    சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை செய்தது. சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு .
    • போலீசார் அனுமதி மறுப்பு. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவு.

    திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.

    இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அறப்போராட்டம் நடத்த காவல்துறையினர் தடைவிதித்தனர். மதுரை மாவட்டத்தில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கியுள்ளது.

    பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

    • தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
    • தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

    அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் வரும் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

    தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது.

    இங்கு சாலை ஓரத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து ஏராளமானோர் திரண்டு பயத்துடன் பார்வையிட்டு வந்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மனித எலும்பா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட எலும்பு? என்பதனை பார்வையிட்டு சோதனை செய்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்த அனைத்து பொருட்களை சாக்கு முட்டையில் கட்டிக்கொண்டு விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகம் பகுதியில் மந்திரிக்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததால் யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    • மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
    • மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

    இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதில் மாதவரம் பால்பண்ணை- சோழிங்கநல்லூர் ரெயில் பாதை திட்டத்தில் ஒரு பகுதியான மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை காலி செய்து கொடுக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லட்சுமி உள்ளிட்ட 3 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும்.

    மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

    • இந்து அமைப்பினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

    காரைக்குடி:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு அருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையைப் பாதுகாப்போம் என இந்து அமைப்பினர் ஒன்றுகூடி இன்று போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீசார் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

    மலையைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
    • தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    எந்தவித விதிமுறை அறிவியல் முறையையும் பின்பற்றாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வந்ததால், குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.

    இனிவரும் காலங்களில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி காற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபடுதல் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு ரூ.648 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிர்வாக அனுமதியும் பெற்று இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் கூறியதாவது:-

    கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சில ஆரம்பகால நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவை இம்மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் மார்ச் 1-ந்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பைகளை கையாளும் திறனுடன் பணிகள் வேகமெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக உள்ளன.
    • எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையில் இருந்தே பார்க்க இயலும்.

    சென்னை:

    குளிர் மற்றும் மழை காலங்களில் டெங்கு, இன்புளூயன்சா, எச்.எம்.பி. வைரஸ் தொற்று உள்ளிட்டவை வேகமாக பரவும். வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது சின்னம்மை, பொன்னுக்கு விங்கி, அக்கி போன்ற பாதிப்புகள் பரவுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக இந்த கால பருவ நிலைமாறி அனைத்து கால சூழல்களி லும் அனைத்து விதமான தொற்றுகளும் பரவுகின்றன. குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதே போன்று மாசுபட்ட நீர் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடை காலங்களிலும் பதிவாகிறது.

    இதையடுத்து பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான எதிர்ப்பு மருந்துகள் உள்பட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல், சளி மருந்துகளில் இருந்து உயிர் காக்கும் உயர் மருந்துகள் வரை அனைத்துமே இருப்பில் உள்ளன. இதைத் தவிர 13 வகையான தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளன.

    ரேபிஸ் தடுப்பூசிகள் மட்டும் 1.08 லட்சம் குப்பிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போதுள்ளன. இதைத் தவிர பாம்பு கடிக்கான மருந்துகள் 21 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன.

    சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக உள்ளன. இவை அனைத்தின் இருப்பும் குறையும்போது அதுகுறித்த விவரங்களை டி.டி.எம்.எஸ். எனப்படும் மருந்து விநியோக மேலாண்மை தளத்தில் எங்களால் கண்காணிக்க முடியும். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையில் இருந்தே பார்க்க இயலும். இதன் வாயிலாக மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றின் இருப்பை உடனுக்குடன் உறுதி செய்து வருகிறோம். எந்த பருவத்தில் எத்தகைய நோய் பரவினாலும், அதனை எதிர்கொள்வதற்கான மருந்து கையிருப்பும், சிகிச்சை கட்டமைப்பும் நம்மிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×