என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.
- நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும்.
கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் மேலும் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் சென்னையில் நேற்று கடும் பனிமூட்டம் இருந்தது.
காலையில் 8 மணி வரை பனிமூட்டம் பல இடங்களில் தென்பட்டது. சென்னை மட்டுமல்லாது, வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று பனிமூட்டம் இருந்தது. இன்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.
இன்னும் 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதுபோல் பனிமூட்டம் விட்டு விட்டு காணப்படும் என்றும், அதிலும் நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
இவரைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். சூரம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று சந்திரகுமார் ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவரும் வணக்கம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக, உதய சூரியன் சின்னத்தின் வேட்பாளராக, தமிழக முதலமைச்சர், கழக தலைவரின் ஆசியோடும், துணை முதலமைச்சர் கழகத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளோடு, ஈரோடு மாவட்டத்தின் அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலை சந்தித்து உள்ளேன்.
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையிலும் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கப்போவது கடந்த 4 ஆண்டு திராவிட மாடல் அரசின் மக்களின் நல திட்டங்களே.
தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்துள்ளேன்.
இந்த தேர்தலில் கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
- விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
தாயில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் ஏராளமான மண்பாண்ட பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள், தங்க ஆபரணம், உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் தற்போது கூடுதலாக மெருகேற்றும் கற்கள் கிடைத்துள்ளன. மெருகேற்றும் கற்களை சங்கு வளையல்கள் உள்பட ஆபரணங்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தி உள்ளனர் என அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.
- மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
- மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மதுரை:
மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கிடையே, இந்த ரெயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதாவது, நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற மார்ச் மாதம் 21-ந்தேதி வரை இந்த ரெயிலில் தற்காலிகமாக 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 2 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். அதன்படி, இந்த ரெயிலில் நாளை முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.
- விவிஐபி பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச பாடகர் எட் ஷீரனின் 2025 இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, 05.02.2025 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 15.00 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்ச்சிக்கு தேனாம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோரிக்ஷா மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/ காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.
அண்ணாசாலையில் ஒய்.எம்.சி. பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார ரெயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.
- மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன.
கடந்த 21-ந் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
இந்த தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்குப்பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி தொகுதி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- தங்கத்தின் சிறு பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- புதிய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்கள் செழிப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததை உணர்த்துகிறது.
சென்னை:
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும்" என்றுரைக்கிறது சிலப்பதிகாரம்.
பழந்தமிழர்கள் ஆடையானது பட்டு, மயிர், பருத்தி ஆகிய இம்மூன்றினாலும் நெய்யப்பட்டதாக உணர்த்துகிறது இந்தப்பாடல்.

ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி', புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் 192-196 செ.மீ ஆழத்தில், 7.8 கிராம் எடையுடன், 7.4 செ.மீ நீளம் மற்றும் 1 செ.மீ விட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடைந்த தங்கத்தின் சிறு பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே இடத்தில் தங்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்கள் செழிப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததை உணர்த்துகிறது. பழந்தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெருமகிழ்வைத் தந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வனத்துறையில் வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 காலி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, தமிழக வனத்துறையில் 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்ற வனத்துறை தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 72 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
- பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், இன்னும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
அதிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் வனவிலங்குகளின் நலன்கருதி முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படி மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
- பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- பூங்காக்களில் மலர்கள் நடவு செய்யும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டது.
ஊட்டி:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவர்கள் இங்கு நிலவக்கூடிய சிதோஷ்ண நிலையை அனுபவித்து, சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்வார்கள்.
குறிப்பாக நீலகிரி மாவட்ட த்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான கோடை சீசனை அனுபவிக்க 9 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக மே மாதம் 1-ந் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இன்னும் சில மாதங்களில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையொட்டி ஊட்டியில் உள்ள பூங்காக்களில் மலர்கள் நடவு செய்யும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில், கோடைசீசனுக்காக பூக்களை கவாத்து செய்யும் பணி தொடங்கி உள்ளது.
கோடைசீசனையொட்டி நடக்க உள்ள ரோஜா கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள 32 ஆயிரம் ரோஜா செடிகளில், 4,201 ரோஜா ரகங்களை கொண்ட ரோஜா பூங்காவில் கவாத்து பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாதண்ணீரு தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் பூங்கா ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது கவாத்துபணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வரை ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும். அவ்வாறு பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பழவை P. பன்னீர்செல்வம்
- வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் C.M. முனிபாபு
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பழவை P. பன்னீர்செல்வம், வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் C.M. முனிபாபு, 2-வது வட்டச் செயலாளர் காதர் அலி, இணைச் செயலாளர் சாந்தி பெரியசாமி,
மேலமைப்புப் பிரதிநிதி I. காதர் பாஷா, துணைச் செயலாளர் D. ரகு, 1-வது வட்ட துணைச் செயலாளர் P. பாபு, L. பொற்கேஷ்வரன், N. தயாளன், D. குமார், R. தேசப்பன், R. சரவணன், M. தேசப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் V. மூர்த்தி, திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் K. குப்பன், Ex. MLA., உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.






