என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
- 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
1. ககன்தீப்சிங் பேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை.
2. டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics
3. பிரத்திக் தாயன். இ.ஆ.ப. துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர்.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
- ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது.
ஒகேனக்கல்:
காவிரி கரையோரங்களில் மழையின் அளவு குறைந்ததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரானது முழுமையாக நிறுத்தப்பட்டதாலும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் சில தினங்களாக வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 700 கன அடியாக சரிந்தது.
இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது.
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மிக சாதாரணமாகிவிட்டன.
- போதைப்பொருள் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். உதவிக்கான சிறுமியின் கூக்குரலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மனிதநேயமிக்க ஒருவரின் தலையீட்டால் கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மிக சாதாரணமாகிவிட்டன. போதைப்பொருள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024 க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS (போதை பொருள் சார்ந்த) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே. 2021 ஆம் ஆண்டில் (ஒரு வருடத்தில்), NDPS வழக்குகளில் மொத்த கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9632 ஆகும். தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் கைது செய்யப்படுவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. எப்படி?
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கு தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாக இயங்கி வருகிறதா?
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற மேலும் எத்தனை சகோதரிகள் பாதிக்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
- தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது.
வடவள்ளி:
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
கொடியேற்றத்தை யொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை யொட்டி கோவிலுக்கு பக்தர்களும் வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
10-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
- ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழா.
- ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.
சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இந்த ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு, சமூக பணி, சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருநாளான நேற்று இரவு ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள், மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாக்கோலம் பூண்டது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் 1,00,008 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
தொடர்ந்து, பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வாணவேடிக்கை முழங்க 30 நாதஸ்வரம், தவில் வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை வந்தடைந்தார். அங்கு அவர் அதிகாலை சிவஞான கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
- இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தனது வாக்கினை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் ஜனநாயக கடமையாற்றினார்.
இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.
- திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
- பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகபெருமானை தரிசனம் செய்து செல்வதுதான்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரப்பட்டது. அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டு கிடா, காமதேனு, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 6-ம் நாளான வருகிற 10ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத்தே ரோட்டம் வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகர் நதிக்கு எழுந்தருளலும், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும்.
ரத வீதிகளில் வெள்ளி தெய்வானை சதேம முத்துக்குமார சாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் பாதையில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பழனி கோவிலில் நடைபெறும் தைப்பூசத்திரு விழாவை முன்னிட்டு பழனி-திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவில் எதிர்புறம் உள்ள காவடி மண்டபத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கும், தாராபுரம் சாலையில் உள்ள கொங்கூர் காவடி மண்டபத்தில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் ரூ.70 லட்சம் செலவில் அன்னதானம் வழங்கப்படும்.
மேலும் தைப்பூசம், பங்குனிஉத்திரம் திருவிழாக்களின் போது 10 நாட்களும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தைப்பூசதிரு விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 810-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 810-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது.
2நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480
03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640
02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-02-2025- ஒரு கிராம் ரூ.106
03-02-2025- ஒரு கிராம் ரூ.107
02-02-2025- ஒரு கிராம் ரூ. 107
01-02-2025- ஒரு கிராம் ரூ. 107
31-01-2025- ஒரு கிராம் ரூ. 107
- கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும்.
- தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும்.
போதாக்குறைக்கு, "தி.மு.க. கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. தி.மு.க. என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?
தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் தி.மு.க.வினர் செய்வதற்கு தானா மு.க.ஸ்டாலின் அவர்களே?
உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- வணிக வளாகங்களில் இருப்பது போல நேர அடிப்படையில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மெரினா நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை:
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தளமாக மெரினா கடற்கரை உள்ளது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்படும். நம்ம சென்னை செல்பி பாயிண்ட், கலங்கரை விளக்கம் வளைவு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு அருகில் மட்டுமே கடற்கரைக்குள் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதை ஒழுங்குபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, தனியார் நிறுவனம் மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதை சரியாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதனால், கட்டணம் வசூலிக்கும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், மெரினா சர்வீஸ் சாலையில் ஸ்மார்ட் பார்க்கிங் முறையை நடைமுறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. தனியார் நிறுவனம் மூலம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கட்டண அடிப்படையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை கொண்டுவர முடியும் என்று தெரியவந்தது. எனவே, வணிக வளாகங்களில் இருப்பது போல நேர அடிப்படையில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா சர்வீஸ் சாலையில் வாகனம் எத்தனை மணி நேரம் பார்க்கிங்கில் இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் இந்த புதிய நடைமுறை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:-
மெரினா சர்வீஸ் சாலையில் ஸ்மார்ட் பார்க்கிங் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் உள்ளே வரும் போது டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட் அட்டையை பெற்றுக்கொண்டு காலி இடத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். அதுபோல மெரினா சர்வீஸ் சாலைக்கு உள்ளே வரும்போது வாகன ஓட்டிகள் டிக்கெட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வெளியே செல்லும் பாதையில் கட்டணத்தை செலுத்திவிட்ட பின்னரே வெளியே செல்ல முடியும். சர்வீஸ் சாலையின் உள்ளே நுழையும் போது வழங்கப்படும் சென்சார் கார்டை வெளியேறும் பாதையில் காண்பிக்கும்போது எவ்வளவு நேரம் நாம் வாகனத்தை நிறுத்தி இருக்கிறமோ அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இதன்மூலம், வாகனங்கள் நிறுத்துவது ஒழுங்குபடுத்தப்படும். மெரினா நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஸ்மார்ட் மீட்டர் 5 நுழைவு பாதைகளில் அமைக்கப்படும். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கு என்று தனித்தனி இடம் ஒதுக்கப்பட உள்ளது. அடுத்த 4 மாதங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மெரினாவில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து பெசன்ட் நகர், நீலாங்கரை போன்ற கடற்கரைகளில் அமல்படுத்த முடிவு செய்யப்படும். போலீசார் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவிலேயே உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
- முதலமைச்சர் உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஆஸ்பத்திரிகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
சென்னை:
நெருங்கிய ஒருவரின் மரணம் என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால், அந்தத் தருணத்தில் ஒருவர் உறுப்புகளை தானமாகத் தர முன்வந்து, முகமறியா சிலரைக் காப்பாற்ற முன்வருவதற்கு மிகப்பெரும் கருணையும், மனமும் வேண்டும். இயலாத சிலருக்கு உறுப்புகளை தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம்.
ஒருவர் வாழ்வதற்கு தேவையான முக்கிய உறுப்பு செயலிழந்து அதனால் வாழ முடியாத சூழ்நிலையில், வேறொருவரின் உறுப்பை பொருத்தி ஒரு புதிய வாழ்வை அளிக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் போற்றப்பட வேண்டிய சாதனை.
முந்தைய காலகட்டங்களில் இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இதுகுறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற அமைப்பை கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன்மூலம் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நாளடைவில் விழிப்புணர்வு இல்லாமல் மீண்டும் குறைய தொடங்கியது.
இதற்கிடையே உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே உள்ள தவறான புரிதலை போக்கும் வகையிலும், கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை அறிவித்தார். அதில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அரசு எடுத்த இந்த புதிய முயற்சி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் உடல் உறுப்பு தானம் செய்ய தூண்டியது. அந்தவகையில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு (2024) 268 பேர் உறுப்பு தானம் செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1,500 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. அதில் விபத்தில் மூளைச்சாவு அடைத்த 186 பேரும், விபத்து இல்லாமல் மூளைச்சாவு அடைந்த 82 பேரும் அடங்குவர். அரசு ஆஸ்பத்திரியில் 146 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 122 பேரும் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
இதேபோல, முதலமைச்சர் உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஆஸ்பத்திரிகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் தேவைப்படுவோர், அரசிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தானமாக கிடைக்கும் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. தற்போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் தற்போதுள்ள முன்பதிவு பட்டியலின்படி உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 7 ஆயிரத்து 840 பேர் காத்திருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால், உறுப்பு தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதால், மறுவாழ்வு பெற்றவர்கள் இவ்வுலகில் ஏராளம். எனவே, அச்சமின்றி உடல் உறுப்பு தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுசுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
- தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.
- நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும்.
கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் மேலும் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் சென்னையில் நேற்று கடும் பனிமூட்டம் இருந்தது.
காலையில் 8 மணி வரை பனிமூட்டம் பல இடங்களில் தென்பட்டது. சென்னை மட்டுமல்லாது, வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று பனிமூட்டம் இருந்தது. இன்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.
இன்னும் 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதுபோல் பனிமூட்டம் விட்டு விட்டு காணப்படும் என்றும், அதிலும் நள்ளிரவு 2 மணிக்கு பிறகு குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.






