என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் கவர்னர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!
- கவர்னர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
சென்னை:
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பா.ஜ.க. ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை கவர்னர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் கவர்னர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!
கவர்னரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர் கவர்னருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் கவர்னர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் கவர்னர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் கவர்னர் ரவி அவர்களே?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- பா.ஜ.க. கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்?
- தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் கலவரத்தைத் தூண்டி, பாராளுமன்ற தேர்தலில் அங்கு படுதோல்வி அடைந்தார்கள். தற்போது, திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு, வெளியூரில் இருந்து ஒரு கும்பலை வரவழைத்து மத கலவரத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
தீய சக்திகளுக்கு (பா.ஜ.க.) தமிழக அரசு மென்மையான போக்கை காட்டுகிறது. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் சார்பில் நாளை மாலை திருப்பரங்குன்றம் சென்று முருகன் கோவிலிலும் மற்றும் சிக்கந்தர் தர்காவிலும் சிறப்பு வழிபாடு செய்ய இருக்கிறோம்.
தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அரசியல் என்பது வேறு, ஆன்மிகம் என்பது வேறு. தமிழக அரசு இதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். முருகன் மிகவும் சக்திவாய்ந்த இறைவன். அவரிடம் பா.ஜ.க. வின் அரசியல் எடுபடாது.
பா.ஜ.க. கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்?
அந்த காலத்தில் இருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
இதை ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
எச். ராஜா, அண்ணாமலைக்கு ஆன்மிக வரலாறு தெரியாது. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள துலுக்க நாச்சியார் சிலையை எடுக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, கீழனூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.
- காலை முதலே வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மாநகராட்சி பகுதியை உள்ளடக்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பல தரப்பினர் வசித்து வந்தாலும் இங்கு வட மாநிலத்தவர்களுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எலெக்ட்ரிக் கடை, செல்போன் கடை ஆகியவற்றில் வேலை செய்து வருகின்றனர். சிலர் சொந்தமாக கார்மெண்ட்ஸ், ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், கோட்டை வீதி, புது மஜீத் வீதி போன்ற பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்று காலை முதலே வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
- மொத்தம் 1,216 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலியிட தடை விதிக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
மேலும் தைப்பூச விழா தொடங்க இருக்கும் நிலையில் அசாதாரண சூழல் ஏற்படும் என்றும் காரணம் கூறியிருந்தனர்.
இருந்தபோதிலும் இந்து முன்னணியின் அறப் போராட்ட காரணமாக மதுரை மாவட்டம் முழுவதி லும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.
போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும், மீறி வந்தால் அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர்.
போராட்ட நாளான நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சியினரோ, இந்து அமைப்பினரோ செல்ல 2-வது நாளாக தடை விதித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
- மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.
உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.
இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான். 3 பேரும் சேர்ந்து தான் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.
அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தற்போது இந்த பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் வக்காரமாரி நீர் தேக்கத்தில் விடுகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் ராட்சத முதலை இரவு நேரத்தில் சாலை நடுவே ஒய்யாரமாக நடைபோட்டு இரை தேடி சிதம்பரம்-காட்டுமன்னார் கோவில் செல்லும் சாலையில் சென்றது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
முதலையின் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்றனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுற்று வட்டார பகுதிகளான பழைய கொள்ளிடம், வல்லம் படுகை, வேளக்குடி, அகர நல்லூர், பெராம்பட்டு, திட்டு காட்டூர், அத்திப்பட்டு, அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் பெரிய அளவில் இருந்து சிறிய அளவிலான முதலைகள் காணப்படுகிறது.
தற்போது இந்த பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் வக்காரமாரி நீர் தேக்கத்தில் விடுகின்றனர் அவ்வாறு விடப்படும் முதலைகள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைவதும் தொடர் கதையாக உள்ளது.
இவ்வாறு பிடிபடும் முதலைகளை சென்னையில் உள்ள முதலை பண்ணையில் விட வேண்டும் அல்லது இதற்கென நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் முதலைப் பண்ணை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ஐயாபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி(வயது 45). அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார். இவர் காலையில் வீடுகள் முன்பு கோலம் போடுவது வழக்கம். அதே பகுதியில் தனலட்சுமியின் அக்காள் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கும் தனலட்சுமி கோலம்போட்டு வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தனலட்சுமி வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்து விட்டு அக்காள் வீட்டு முன்பு கோலம்போட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியின் கணவர் காளிமுத்து வந்தார். ஏற்கனவே செல்விக்கும், காளிமுத்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததால் தனலட்சுமி அவரை கண்டித்தார். இதனால் தனலட்சுமிக்கும், காளிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி சரிந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த போது தனலட்சுமி உயிருக்கு போராடிய படி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதில் குடும்ப தகராறில் காளிமுத்து தனது மனைவி செல்வியை தீர்த்து கட்ட வந்து இருந்த நிலையில் தனலட்சுமியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருப்பூரை சேர்ந்த காளிமுத்துவும், கொலையுண்ட தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியும் பேஸ்புக் மூலம் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காளிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
திருப்பூரில் இருந்தபோது செல்வி மீது காளி முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து திருவொற்றியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
எனினும் காளிமுத்து தொடர்ந்து இங்கு வந்து மனைவியுடன் மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மனைவி செல்வியை தீர்த்து கட்ட கத்தியுடன் அவரது வீட்டின் அருகே நோட்டமிட்டு சுற்றி வந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை செல்வியுடன் மோதலில் ஈடுபட காளிமுத்து வந்த போது அங்கு வீட்டு வாசலில் கோலமிட்ட தனலட்சுமி அவரை தடுத்து "இங்கே நீ ஏன் வருகிறாய்" என்று கூறி கண்டித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
தலைமறைவான கொலையாளி காளி முத்துவை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வீட்டு வாசலில் கோலமிட்ட பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- நெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப் பயணம்.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக நாளை பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து நெல்லைக்கு காரில் புறப்படுகிறார்.
அவருக்கு பாளை கே.டி.சி. நகரில் வைத்து நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலர் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகை வரும் முதலமைச்சர், மாலை 5 மணியளவில் புறப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பாளை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அங்கு வைத்து காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளையும் காணொலி காட்சி வாயிலாகவே திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து பாளை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைகின்றனர். பின்னர் இரவில் அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாளை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் காணொலி காட்சி வாயிலாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் நெல்லை நகருக்கான மேற்கு புறவழிச்சாலை பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 75 ஆயிரத்து 84 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இந்த 2 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக 7-ந்தேதி காலை முதலமைச்சர் மருத்துவ கல்லூரி மைதானத்திற்கு புறப்படும்போது வழிநெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு- ஷோ' நிகழ்த்துகிறார். அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடைகளில் முதலமைச்சர் ஏறி பொதுமக்களிடையே கையசைக்க உள்ளார்.
அவரது வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு பதாகைகள், வழிநெடுகிலும் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு, முக்கிய மேம்பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது.
பாளை மார்க்கெட்டை சுற்றிலும் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. நேருஜி கலையரங்கம் அருகே சாலை விரிவுப்ப டுத்தப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்த சாலையோர தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
- பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார்.
திருமண வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகவும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பலரது வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், பலரது வாழ்க்கையை சோகமானதாகவும் மாற்றுகிறது. திருமண வாழ்வு இனிதாக இல்லாமல் போவதற்கு கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் இல்லாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது.
அதேபோல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தவறான தொடர்பும் பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. கணவனோ மனைவியோ, தனது இணை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அவர் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால், அதனை உண்மையாக நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அது அந்த நபருக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தை தரும் பட்சத்தில் அவர் ஒரு கொலையாளியாகவோ அல்லது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் பரிதாபமான நபராகவோ மாறிவிடுகிறார். இதில் இரண்டாவதாக கூறியதைப் போன்று ஒரு நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து தாங்க முடியாத துக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சோகம் குமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின்(வயது47). இவருக்கும், சுனிதா (45) என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் சவுதி அரேபியாவில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதா கொன்னக் குழிவிளையில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து வந்தார்.
மனைவி சுனிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பெஞ்சமின் அவருக்கு பிடித்த எல்லாம் செய்து கொடுத்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தனது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். பெஞ்சமின் வெளிநாட்டுக்கு சென்று விடும் நிலையில், அந்த வீட்டில் சுனிதா மட்டும் குடியிருந்தார்.
இந்தநிலையில் சமீப காலமாக சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றும் ஏற்பட்டது. அதனை கண்டுபிடித்த பெஞ்சமின், அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து தகவல் இருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான சுனிதாவை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுனிதா எங்கு சென்றார்? என்று பெஞ்சமின் விசாரித்தார். அப்போதுதான் தனது மனைவிக்கும், திருவந்திக்கரை பகுதியைச் சேர்ந்த சைஜு என்பவருக்கும் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.
மேலும் தான் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் ஆசையாக கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி சென்றுவிட்டதை அறிந்தார். மிகவும் பாசம் வைத்திருந்த தனது மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மிகவும் பாதித்தது.
இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதே நேரத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெஞ்சமின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது செல்போனில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார். தனது மனைவியின் இந்த செயலை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஆகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதில் பேசினார்.
மேலும் தனது தற்கொலைக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, தனது மனைவி சுனிதா, அவரது சகோதரி ஷீலா ஆகியோரே காரணம் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆவேசமாக அதில் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்ட சிறிய நேரத்தில் தனது வீட்டில் வைத்து பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெஞ்சமின் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் பரிதாபமாக இருந்தது. அவரது பேச்சில் அவர் தனது மனைவி மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் தெளிவாக தெரிந்தது. அதனை தாங்க முடியாமல் அவர் தளுதளுத்த குரலில் நடுங்கியபடியும், கதறிய படியும் பேசியது அனைவரையும் பரிதாபப்பட செய்து விட்டது.
அதே நேரத்தில் பெஞ்சமின் தான் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக கேட்டுக்கொண்டார். இதனால் பெஞ்சமின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பெஞ்சமின் தற்கொலை செய்வதற்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். பெஞ்சமின் மனைவி சுனிதா, மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி ஷீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பெஞ்சமின் மனைவி சுனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னதாகவே சைஜூவுடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் சைஜுவுடனான தொடர்பை சுனிதா விடவில்லை. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நேரத்தில் கணவர் பெஞ்சமினுக்கு சந்தேகம் எதுவும் வராதபடி நடந்து கொண்டுள்ளார். அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு சைஜுவுடன் சேர்ந்து சுற்றி திரிந்தபடி இருந்திருக்கிறார்.
தனது மனைவியின் விவகாரம் அரசல்புரசலாக பெஞ்சமினுக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் சுனிதா தனது போக்கை விடவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் சுனிதா நிரந்தரமாக குடும்பம் நடத்த சென்று விட்டார்.
இதனை அறிந்த பெஞ்சமின் உடனடியாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். தனது 19 ஆண்டுகால உழைப்பில் கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்துடன் மனைவி மாயமானது அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று சுனிதா கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பெஞ்சமினின் மனைவி சுனிதா போலீசாரிடம் சிக்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுனிதாவின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி சீலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெஞ்சமின் எதுவும் கூறாமல் தற்கொலை செய்து இருந்தால் அவரது சாவு சாதாரண தற்கொலை வழக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அதற்கு காரணமான தனது மனைவி உள்ளிட்டோரை பற்றி மிகவும் தெளிவாக பேசி வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
இதன் காரணமாகவே பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு முக்கியமான காரணமாக இருந்த அவருடைய மனைவி சுனிதாவும் சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்து முன்னணி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை, பிப்.5-
திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடக்க இருந்தது.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் பங்கேற்க சென்றனர். அவர்களை அந்தந்த மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு இந்து முன்னணியினர் புறப்பட்டனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதாக உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தடையை மீறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினரான ராம்நகரை சேர்ந்த சதீஷ், நிர்வாகிகள் குனியமுத்தூர் பிரபாகரன், புதிய சித்தாபுதூரை சேர்ந்த தசரதன், பாபா கிருஷ்ணன், தனபால் உள்ளிட்ட 90 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.***
இவர்களது மகள் தேவி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் தனது மகன்களான ரித்திக், ரோகித் ஆகியோருடன் வசித்து வருகிறார். ரித்திக், ரோகித் ஆகியோர் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
கிட்டம்மாள் பாட்டி தனது மகள் தேவியை பார்க்க மாதத்தில் 2 முறை பல்லடம் செல்வார்.
அப்படி செல்லும் போது, அங்கு கிட்டம்மாள் பாட்டியின் பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் பளுதூக்கும் பயிற்சி செய்துள்ளனர்.
இதனை பார்த்த கிட்டம்மாள் பாட்டிக்கு, தானும் பளுதூக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவரிடமும், மகள் மற்றும் பேரன்களிடம் தெரிவித்தார்.
பேரன்கள் உடனே தங்களது பாட்டிக்கு பளுதூக்குவது குறித்து பயிற்சி அளித்துள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிட்டம்மாள் பாட்டி தனது மகள் வீட்டிற்கு சென்று விடுவார்.
அங்கு பேரன்கள் அவருக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வந்தனர்.
மேலும் தாங்கள் பயிற்சி பெற்று வரும் உடற்பயிற்சி நிலையத்திற்கும் அழைத்து சென்றனர்.
அந்த உடற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர் சதீஷ், கிட்டம்மாள் பாட்டி பயிற்சி செய்வதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். மேலும் பாட்டிக்கு, பளுதூக்குவதில் இருக்கும் ஆர்வத்தை அறிந்து கொண்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிக்கு அழைத்து சென்றார்.
அங்கு நடந்த போட்டியில், கிட்டம்மாள் பாட்டி தனது முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை தூக்கி 5-வது இடம் பிடித்து அசத்தினார். இதுதவிர கவுந்தப்பாடியில் நடந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஸ்ட்ராங் மேன் ஆப் சவுத் இந்தியா 2024 என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கிட்டம்மாள் பாட்டிக்கு தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பது விருப்பம். இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
- ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது.
- டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விருதுநகர்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காக்கன்சேரியில் இருந்து 6 டன் எடையுள்ள தீக்குச்்சிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைக்கு புறப்பட்டது. லாரியை அமீது (வயது 58) என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் அருகில் உள்ள மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஒன்று குறுக்கே சென்றதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது.
உடனே அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு லாரியில் சிக்கியிருந்த டிரைவர் அமீது, கிளீனரை மீட்டனர். 2 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஊரக காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து படையினர் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வானகங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
- 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
1. ககன்தீப்சிங் பேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை.
2. டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics
3. பிரத்திக் தாயன். இ.ஆ.ப. துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர்.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.






