என் மலர்
கேரளா
- காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார்.
- பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பட்டியலில் கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் வேட்பாளர்.
51 சதவீதம் பெண்கள் கொண்ட கேரள மக்கள் தொகையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அகில இநதிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் கேரளாவில் உள்ள கட்சித் தலைவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகும், மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே கட்சி நிறுத்தியுள்ளது. அதுவும் ஆலத்தூர் தனித் தொகுதி என்பதால் மட் டுமே ரம்யா ஹரிதாசுக்கு சீட் கிடைத்துள்ளது. இல்லை யென்றால் அவரும் கைவிடப்பட்டு இருப்பார்.
வேட்பாளர்களை இறுதி செய்யும்போது தலைவர்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் பெண்களை நிறுத்தியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த முறை ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேரளாவில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆரம்ப பட்டியலில் 3 பெண் வேட்பாளர்களும், எல்.டி.எப். அறிவித்த 20 வேட்பாளர்களின் பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால், தான் புறக்கணிக்கப்படுவதாக கூறி காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்த நிலையில், ஷாமாவின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி ஓருவர் கூறுகையில், ஷாமா புகார் அளிக்கவில்லை. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குச் செல்கிறது என்றும், அவர்களை திரும்ப பெற கட்சிக்கு அதிக பெண் வேட்பாளர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.
- கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல்.
- கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு.
கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.
இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக மிதக்கும் பாலத்தில் நடந்து அந்த அனுபவத்தை பெறுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், மிதக்கும் பாலம் உடைந்ததில் 15 பேர் கடலில் விழுந்தனர்.
கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கடல் நீரைக் குடித்ததால் 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது.
- பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் வசூல்.
- பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.
உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் காணப்படாத சடலங்கள் (பிணங்கள்) கேரள அரசுக்கு வருவாய் ஈட்டி தந்துள்ளது.
2008ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் இருந்து உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்று முதல் உரிமை கோரப்படாத 1,122 உடல்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒப்படைத்ததன் மூலம் மாநில அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சாதகமாக உள்ளது. கற்பித்தல் நோக்கங்களுக்காக உடல்களைப் பெறுவது கடினமாக இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இது பயனளிக்கிறது.
அதன்படி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிக எண்ணிக்கையிலான இறந்த உடல்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் 599 உடல்களை மருத்துவமனை ஒப்படைத்துள்ளது. பட்டியலில் முதலிடத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகள் பரியாரம் மருத்துவக் கல்லூரி (166), திருச்சூர் மருத்துவக் கல்லூரி (157) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (99) ஆகும்..
2000-களின் தொடக்கத்தில்தான் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆய்வு நோக்கத்திற்காக அதிகமான சடலங்கள் தேவைப்படுகின்றன.
60 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்காக 5 சடலங்கள் தேவை என்று விதி புத்தகம் கூறுகிறது. அதாவது மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒவ்வொரு 12 மாணவர்களுக்கும் ஒரு சடலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிப்பு அனுபவம் பற்றி மூதாட்டியிடம் கேட்டால், நான் சொன்னபடி செய்தேன் என்று பணிவுடன் தெரிவித்தார்.
- மூதாட்டியின் நடிப்பை திரையில் காண அவரது குடும்பத்தினர் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியை சேர்ந்த மூதாட்டி நாராயணியம்மா. இவர் தற்போது தனது 99-வயது வயதில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பாப்பன் நரிப்பட்டா என்ற இயக்குனர் எடுத்துள்ள வயசேத்ரயாயி என்ற மலையாள படத்தில் நாராயணியம்மா முதன் முறையாக நடித்திருக்கிறார். நகைச்சுவை திரைப்படமான இந்த படம், திருமணத்திற்காக இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் கூறுகிறது.
பிரசாந்த் முரளி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், மூதாட்டி நாராயணியம்மா பால் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் 28-ந்தேதி தியேட்டர்களில் வெளிவருகிறது.
மூதாட்டிய நாராயணியம்மா தனது 99-வது வயதில் திரையுலகிற்கு வந்திருப்பது முற்றிலும் தற்செயலாக நடந்துள்ளது. அவரது பேரன் யூசி விஜூ மூதாட்டி நடித்திருக்கும் படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.
முதலில் திரைப்படத்தில் நடித்த அனுபவம் இல்லாததால் நடிக்க மூதாட்டி நாராயணியம்மா தயங்கினார். இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும், எளிதாக நடித்துவிடலாம் என்று கூறி, அவரது பேரன் தொடர்ந்து வற்புறுத்தியதால் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
மூதாட்டிய நாராயணியம்மா கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபடும் குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு 12 வயதில் திருமணம் நடந்துள்ளது. 20-வது வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த அவருக்கு மொத்தம் 4 குழந்தைகள். தற்போது தனது இளைய மகன் மற்றும் குடும்பத்தினருடன் வடகராவில் வசித்து வருகிறார்.
இளம் வயதிலேயே திருமணமாகி விட்டதால், அவரால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. பள்ளிக்கு செல்ல அவர் விரும்பியபோதிலும் அது நடக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு தனது குடும்ப தொழிலான நெசவு தொழிலில் மூதாட்டி நாராயணியம்மா ஈடுபட்டார்.
நடிப்பு அனுபவம் பற்றி மூதாட்டியிடம் கேட்டால், நான் சொன்னபடி செய்தேன் என்று பணிவுடன் தெரிவித்தார். மூதாட்டி நடிப்பு பற்றி இயக்குனர் கூறும்போது, மூதாட்டி நாராயணியம்மா முதன்முறையாக நடிக்கும் நடிகையாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரே படப்பிடிப்பில் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் என்றார்.
99 வயதில் தனது பேரனால் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மூதாட்டி நாராயணியம்மா பிரம்மிப்பில் ஆழ்ந்துள்ளார். மூதாட்டியின் நடிப்பை திரையில் காண அவரது குடும்பத்தினர் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.
மூதாட்டி நாராயணியம்மா சினிமாவில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
- இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த நபர் பலியானார்.
திருவனந்தபுரம்:
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. ஏவுகணை தாக்கியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விரைவில் மேக்ஸ்வெல் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த மேக்ஸ்வெல் உடல் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி முரளீதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்களை மந்திரி முரளீதரன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஐரிஸ் மூன்று மொழிகளை கையாளும் திறன் கொண்டது.
- உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது. அக்கறை எடுத்துக் கொள்ளாது.
உலக அளவில் "ஏஐ" எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் 100 சதவீதம் முழுமைப் பெற்றால் உலகளவில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
"ஏஐ" தொழில்நுட்பம் மூலம் எந்த கேள்விக்கும் பதில்பெற முடியும். மென்பொருள் நிறுவனத்தில் கூட கோடுகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செய்திகள் வாசிப்பது உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம்பலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் "ஏஐ" தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் எனப் பெயரிட்டுள்ளது. இந்த ஐரிஸ் பெண் போன்று சேலை அணிந்து, அணிகலங்கள் அணிந்துள்ளது.
ஐரிஸ் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு உடனுக்கு உடன் பதில் அளித்து அசத்தியது. ஐரிஸ் தனது ஆசிரியை பணியை தொடங்கியதும் நெட்வொர்க் குறைபாடு மற்றும் மாணவர்களின் கூச்சல் காரணமாக பதில் அளிக்க சற்றும் நேரம் எடுத்துக் கொண்டது.
அதன்பின் பள்ளி நிர்வாகம் அமைதியை கடைபிடித்து ஒவ்வொருவராக கேள்வி கேட்க வேண்டும் என தெரிவிக்க, மாணவர்கள் தங்களை கேள்வி கணைகளை தொடுத்தனர். பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளையும் கேட்டனர். அதற்கெல்லாம் சளைகை்காமல் பதில் அளித்தது.
பள்ளி குழந்தைகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். குறிப்பாக எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. குழந்தைகள். அவர்கள் இந்த டீச்சரை விரும்புகிறார்கள். ஏனென்றால் ஐரிஸ் ஒருபோதும் கோபப்படுத்தாது. குழந்தைகளை எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்ளாது. எப்போதும் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும். ஐரிஸ் கேள்விகள் கேட்காது. வீட்டுப்பாடமும் கொடுக்காது என அந்த பள்ளியின் முதல்வர் மீரா சுரேஷ் தெரிவித்தார்.

ஐரிஸ் மூன்று மொழிகளை கையாளும் திறன் கொண்டது. மாணவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்கு கைக்கொடுக்கும். குழந்தைகளுக்கு கதைகளும் சொல்லும். ஆசிரியர்கள் அவர்களை துறையைச் சார்ந்த பாடத்தில் வல்லுநனர்களாக இருப்பார்கள். ஆனால் ஏஐ டீச்சர் அனைத்து துறைகளை சார்ந்த பாடத்திலும் வல்லுநனராக இருக்கும்.
ஐரிஸ் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். இது டீச்சர்களுக்கு மாற்றாக ஒருபோதும் இருக்காது. ஏனென்றால் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது. அக்கறை எடுத்துக் கொள்ளாது. பாடல் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சப்போர்ட் சிஸ்டமாக இருக்கும்." என்றார்.
ஐரிஸ் நான்கு சக்கரம் கொண்டு வடிவமைக்கப்பட்டள்ளது. இரண்டு வழிகளிலும் அதனால் தலையை திருப்ப முடியும். கைகளையும் அசைக்க முடியும். ஐரிஸ் கழுத்தில் உள்ள நெக்லஸில் மைக்ரோமோன் பொருத்தப்பட்டுள்ளது.
- பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
- ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
திருவனந்தபுரம்:
மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். கேரள மாநிலத்திலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், நேற்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
களமச்சேரி காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்க தலைவராக இருந்து வந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தன்னை காங்கிரசார் அவமதித்துவிட்டனர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினரே காரணம், சுயமரியாதையுடன் செயல்பட முடியாத நிலை காங்கிரசில் இருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பத்மஜாவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சாலக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பத்மஜா போட்டியிடலாம் என்று கூறப்பட்டாலும், வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. இதனால் வயநாடு தொகுதியிலேயே அவர் போட்டியிடலாம் என தெரிகிறது.
திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கேரள மாநில தலைவர் கே. முரளீதரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
- பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.
மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.
- திருச்சூர் மக்கள் என் தலையில் கிரீடத்தை வைப்பார்கள்.
- நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை.
திருவனந்தபுரம்:
மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்ற நிலை நிலவிவருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.
கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
திருச்சூர் தொகுதி வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அவர், தனது தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். நேற்று முன்தினம் திருச்சூர் சென்ற அவருக்கு, பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நடிகர் சுரேஷ் கோபி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் தாக்கமும், செல்வாக்கும் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இங்கு இருக்கிறேன். சினிமா நடிகனாக அல்ல. அரசியல் சேவகனாக. நான் தற்போது மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவனாக இருக்கிறேன்.
தேர்தலில் முதலில் 2019-ம் ஆண்டு போட்டியிட்டேன். அதன்பிறகு 2021-ல் போட்டியிட்டேன். ஆனால் இந்த முறை வெற்றிபெற வந்திருக்கிறேன். திருச்சூர் மக்கள் என் தலையில் கிரீடத்தை வைப்பார்கள். இந்த முறை எனக்கு திருச்சூரை தருவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை. அது எனது வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு சுரேஷ்கோபி கூறினார்.
- பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
- திருச்சூர் சென்ற சுரேஷ்கோபிக்கு பாரதிய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
கேரளாவில் இந்த முறை வெற்றியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அங்கு தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். அந்த மாநிலத்தில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகரும், பாரதிய ஜனதா பிரமுகருமான சுரேஷ்கோபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு அவர், தேர்தல் பிரசாரத்திற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளார். நேற்று திருச்சூர் சென்ற சுரேஷ்கோபிக்கு பாரதிய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் அணிவகுக்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியினரின் வரவேற்பு உற்சாகம் அளிப்பதாகவும் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். மேலும் திருச்சூரில் நடப்பது போர் அல்ல... போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
- மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.
- நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஒவ்வொரு மாதமும் முதல் 2 தினங்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி மாத சம்பளம் மாத தொடக்கத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி வரலாற்றில் முதல் முறையாக தவணை முறையில் சம்பளம் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் உள்ளவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கூடுதல் சம்பளம் பெறுபவர்களுக்கு முதல் கட்டமாக அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீதமுள்ள தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை சம்பளம் வழங்கப்பட்டது. 3 அல்லது 4 நாட்களில் சம்பளப் பகிர்வு முடிக்கப்படும் என்று தெரிவித்த மாநில நிதி மந்திரி பாலகோபால், ஓய்வூதியம் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்றார்.
இதற்கிடையில் கரூவூலத்தில் உள்ள வைப்புத் தொகையை திரும்ப பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
- வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது.
திருவனந்தபுரம்:
ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதிஅரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஒரு தனி முறையாகும். உடல் நலமும், பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொரு வரும் தனது ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித செய்ய வேண்டும்.
ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது நாட்டில் அரசே மானியமும் வணங்குகிறது. அதனை பயன்படுத்தி ஆண்டுதோறும் பலர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 11,556பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,250 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3,584 பேர் பெண்கள்.
ஹஜ் பயணம் செய்வதற்கு கேரளாவிலிருந்து முதல் விமானம் வருகிற மே மாதம் 26-ந்தேதி புறப்படுகிறது. ஆனால் முதல் ஹஜ் விமானம் புறப்படும் இடம் மற்றும் நேரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னரே அனைத்து விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஹஜ் பயண முகாம் கேரளாவில் 20 முதல் 22 நாட்கள் வரை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 15 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது. இந்த நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
கரிப்பூர், கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கான போர்டிங் மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகமாக விமானங்கள் இயக்கப்படும் என தெரிகிறது.
பெரிய விமானங்களுக்கு அனுமதி இல்லாததால் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள் 145 பயணிகளுடன் செல்லும் என தெரிகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மெக்காவிற்கு விமானத்தில் பறக்க உள்ளனர்.
ஆரம்ப கட்டத்தில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி பெற்ற 16,776 பயணிகளின் 9,750 பேர் கரிப்பூர் விமான நிலையத்தை புறப்படும் இடமாக தேர்வு செய்துள்ளனர். மேலும் 1,500 பேர் இங்கிருந்து பறக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.
இதனால் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து ஹஜ்ஜிற்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






