search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    18,337பேரின் விண்ணப்பம் ஏற்பு: ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே 26-ந்தேதி புறப்படுகிறது
    X

    18,337பேரின் விண்ணப்பம் ஏற்பு: ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே 26-ந்தேதி புறப்படுகிறது

    • ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
    • வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதிஅரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஒரு தனி முறையாகும். உடல் நலமும், பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொரு வரும் தனது ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித செய்ய வேண்டும்.

    ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது நாட்டில் அரசே மானியமும் வணங்குகிறது. அதனை பயன்படுத்தி ஆண்டுதோறும் பலர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 11,556பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,250 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3,584 பேர் பெண்கள்.

    ஹஜ் பயணம் செய்வதற்கு கேரளாவிலிருந்து முதல் விமானம் வருகிற மே மாதம் 26-ந்தேதி புறப்படுகிறது. ஆனால் முதல் ஹஜ் விமானம் புறப்படும் இடம் மற்றும் நேரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னரே அனைத்து விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஹஜ் பயண முகாம் கேரளாவில் 20 முதல் 22 நாட்கள் வரை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 15 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது. இந்த நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

    கரிப்பூர், கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கான போர்டிங் மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகமாக விமானங்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

    பெரிய விமானங்களுக்கு அனுமதி இல்லாததால் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள் 145 பயணிகளுடன் செல்லும் என தெரிகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மெக்காவிற்கு விமானத்தில் பறக்க உள்ளனர்.

    ஆரம்ப கட்டத்தில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி பெற்ற 16,776 பயணிகளின் 9,750 பேர் கரிப்பூர் விமான நிலையத்தை புறப்படும் இடமாக தேர்வு செய்துள்ளனர். மேலும் 1,500 பேர் இங்கிருந்து பறக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    இதனால் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து ஹஜ்ஜிற்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×