என் மலர்tooltip icon

    டெல்லி

    • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
    • இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் குற்றச்சாட்டை பிரியங்கா காந்தி மறுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது,"சபாநாயகர் அறைக்குள் சென்ற நாங்கள் யாரையும் திட்டவில்லை. 2 எம்.பி.க்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தனர்.

    அவர்கள் அதை வெளிப்படுத்தினர். நான் அவர்களை ஊக்குவித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இது ஒரு பொய். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். இறுதியில், நான் சில விஷயங்களை அமைதியாகச் சொன்னேன்.

    அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். ராகுல்காந்திக்கு எதிராக வழக்குகள் உள்ளிட்ட வேறு எதையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் எதுவும் ராகுல்காந்தியை பாதிக்க போவதில்லை" என்றார்.

    • நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட மத்திய அரசு.
    • செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் விளக்கம்.

    நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ரூ.462.58 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, இந்தப் பயணச் செலவுகளில் விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கும்.

    அமெரிக்கப் பயணங்களுக்கு மட்டும் மொத்தத் தொகையில் சுமார் 16% செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணங்களுக்குத் தலா 9% நிதி செலவிடப்பட்டுள்ளது.

    2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டுப் பயணம் மிகவும் அதிக செலவான ஒன்றாகக் கருதப்படுகிறது (சுமார் ரூ.25.5 கோடி).

    இதற்கு அடுத்ததாக 2023 ஜூன் அமெரிக்கப் பயணம் (ரூ.22.8 கோடி) இடம் பெற்றுள்ளது.  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், முந்தைய காலக்கட்டங்களின் செலவுகளும் ஒப்பிடப்பட்டன.

    2014 - 2019 ரூ.446.52 கோடி முதலாம் ஆட்சிக்காலம்

    2021 - 2025 ரூ.462.58 கோடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிக்காலப் பகுதிகள்.

    2020 மற்றும் 2021-ன் முற்பகுதியில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தச் செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

    அதில்,"இந்தப் பயணங்கள் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ஜி20 (G20), பிரிக்ஸ் (BRICS) போன்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்ய இப்பயணங்கள் அவசியம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு.
    • தொழிலாளர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் - ராகுல் காந்தி

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறது.

    29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

    அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   

    இந்நிலையில் போராட்டத்திற்க்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

    புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

    வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.

    அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.

    மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான பிடி இன்னும் அதிகமாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.   

    • 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாக நம்பவைத்துளார்.
    • இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

    விசாரணையில் அவர்கள் அனைவரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட ரண்தீர் (76), சிவ நரேஷ் (42) மற்றும் லட்சுமி (40) ஆகிய மூவரை தன்வர்ஷா - அதாவது பண மழை பொழிய வைக்கும் சடங்கு செய்வதாக கம்ருதீன் பாபா என்ற சாமியார் நம்பவைத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத்தைச் சேர்ந்த 72 வயதான கம்ருதீன் பாபா தாந்த்ரீக மையம்நடத்தி வந்துள்ளார்.

    2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாகக் கூறி மூவரையும் கம்ருதீன் நம்ப வைத்துள்ளார்.

    அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பணத்தைத் திருடுவதற்காக விஷம் கலந்த லட்டுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு மது மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

    சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று காருக்குள் நான்காவதாக ஒரு நபர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அது கம்ருதீன் என்பது உறுதி செய்யப்பட்டது.

    முதலில் போலீசாரை திசைதிருப்ப முயன்ற அவர், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கம்ருதீன் இதற்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

    • சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.
    • முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார்.

    அங்கிருந்த சிகையலங்கார நிபுணரிடம் முடியை 4 அங்குலம் குறைக்கும்படி கூறி உள்ளார். ஆனால் சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.

    முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவர், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த ஆணையம், ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓட்டல் நிர்வாகம் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கினால் போதும்' என உத்தரவிட்டது.

    • கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்கலாம்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை இன்று (12-ம் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் புதிய சாதனை படைக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.

    காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.

    டி 20 போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன் 2021 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
    • சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

    அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.

    சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.

    ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.

    அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.

    அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்." என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

    ராகுல் காந்தி பேசுவது கோமாளித்தனம் என்றும் 2014-2015 காலகட்டத்தில் தான் 'சர்வதேச அமைதி கழக' (International Peace Institute - IPI ) ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றியபோதுதான் எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும் பூரி கூறினார்.

    எப்ஸ்டீனை தான் ஒரு குழுவாகவே சந்தித்ததாகவும், அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், "2014-ஆம் ஆண்டு 'லிங்க்ட்இன்' நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் இந்தியா வருவது குறித்து எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்தது. அந்த மின்னஞ்சலில், இந்தியாவின் இணையப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மட்டுமே பேசினேன்.

    எப்ஸ்டீன் மற்றும் IPI தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் ஆகியோர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருப்பதை ராகுல் காந்தி படிக்க வேண்டும்.

    அவர்களது சட்டவிரோதச் செயல்களுக்கு நான் ஒத்துழைக்காததால் தான் அவர்கள் என்னைப் பிடிக்காமல் அவ்வாறு கூறினார்கள்" என்று பூரி தெரிவித்தார்.

    அண்மையில் அமெரிக்க நீதித்துறை சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    பிரதமர் மோடி, அனில் அம்பானி, மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதன் பின்ணனியிலேயே ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசியுள்ளார்.  

    • அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
    • அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.  

    அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.

    சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம். 

    ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.

    அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.

    அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும். 

    மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் டிஜிட்டல் வர்த்தக விதிகள் இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு எதிர்காலத்தை அடகு வைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்துவிட்டது.

    இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் தடையின்றி அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மக்களின் தரவுகள் தான். அமெரிக்காவின் டாலரை பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.

    ஒரு வேலை இந்தியா கூட்டணி அமெரிக்காவுடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்:

    டிரம்ப் அவர்களே, உங்கள் டாலரைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் டாலரைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் உள்ள தரவுகள்.

    எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது வேலையாட்களைப் போல நடத்தாதீர்கள்.

    எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    உங்களுக்கு உங்கள் நாட்டு விவசயிகளின் வாக்குகள் வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, எங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு.

    இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் எங்களை ஒருபோதும் பாகிஸ்தானுடன் சமமாக வைத்துப் பார்க்காதீர்கள். நாங்கள் ஒரு தன்னாட்சி கொண்ட வல்லரசு என்பதை அங்கீகரித்து சமமாகப் பேசுங்கள் என்று கூறியிருப்போம். 

    ஆனால் மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது. 

    சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் நமது மக்களின் தரவுகள் தான். அதை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார். 

    • நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்து கிடந்தபோதும் தாமதமாகவே மீட்புப் பணிகள் தொடங்கின.
    • கடந்த பிப்ரவரி 6 அன்று மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் தோண்டியிருந்த பள்ளத்தில் விழுந்து மற்றொரு இளைஞர் உயிரிழந்தார்.

    டெல்லி ரோகிணி செக்டர் 32 பகுதியில் உள்ள மகாசக்தி காளி கோயில் அருகே, திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

    உயிரிழந்தவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த பிரிஜு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சம்பவ இடத்தில் இருந்த தேஜ்பால் யாதவ் என்பவர் கூறுகையில், "இந்த நபர் நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார். அவரது நண்பர்கள் மாலை 4 மணிக்கே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் நான் 112 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்த பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கின" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 6 அன்று மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் தோண்டியிருந்த பள்ளத்தில் விழுந்து, தனியார் வங்கியில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் பலியானார்.

    டெல்லி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • ‘வந்தே மாதரம்’ பாடலின் 6 சரணங்களும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்படும்.
    • வந்தே மாதரம் பாடலுக்கான புதிய வழிகாட்டுதல்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    புதுடெல்லி:

    தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' இரண்டும் ஒரே நிகழ்வில் பாடப்பட்டால், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும். 1937-ம் ஆண்டு காங்கிரசால் நீக்கப்பட்ட 4 சரணங்கள் உட்பட 'வந்தே மாதரம்' பாடலின் 6 சரணங்களும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்படும். பாடலைப் பாடுவதற்கான மொத்த கால அளவு 190 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேசிய கொடியை ஏற்றும் போதும், முறையான நிகழ்வுகளில் ஜனாதிபதி வருகை மற்றும் புறப்படும் போதும், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் கவர்னர்கள் முறையான மாநில விழாக்களுக்கு வரும்போது அல்லது புறப்படும்போது, பொதுமக்கள் விருது வழங்கும் விழாக்களின் போது மற்றும் தேசியக் கொடி அணி வகுப்பின்போது இந்தப் பாடல் இசைக்கப்பட வேண்டும். எனினும், சினிமா தியேட்டர்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

    ஏற்கனவே தேசத்தின் மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971 தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ) தேசிய கீதத்திற்கு மரியாதை காட்ட மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறுகிறது.

    வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875 நவம்பர் 7-ம் தேதி 'வந்தே மாதரம்' பாடலை எழுதினார். இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் மிகுந்த உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ம் தேதி இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனை பாட வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    வந்தே மாதரம் பாடலுக்கான புதிய வழிகாட்டுதல்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசு 'வந்தே மாதரத்தை' ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதி போட்டிகள் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளன.
    • இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் முடிந்தன.

    இதையடுத்து, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.

    ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா

    பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்

    சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்

    டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்

    முதல் காலிறுதியில் உத்தரகாண்டும், 2வது காலிறுதியில் ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்காலும், 4வது காலிறுதியில் கர்நாடகாவும் வென்றன.

    இந்நிலையில், காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டி பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.

    முதல் அரையிறுதியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன. 2வது அரையிறுதியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.

    பிப்ரவரி 24-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
    • சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .

    இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கினர்.

    ×