என் மலர்
இந்தியா
- ரஷிய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்
- இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்போம்.
ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷிய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் போலவே, இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டனர்.
- தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கடுமையாக சாடினார் அமித்ஷா.
புதுடெல்லி:
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென மக்கள் நினைத்தனர். அதேபோல், பயங்கரவாதிகள் 3 பேரும் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது.
காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பா.ஜ.க. அரசு மீட்கும் என தெரிவித்தார்.
- இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
- மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு காலக்கெடு நிர்ணயித்தார். காலக்கெடுவுக்குள் இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று 25 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடிக்கு இடையிலான நட்பை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளார். பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் இடையிலான நட்புக்கு அர்த்தம் இல்லை.
அமெரிக்க அதிபர் அவமானம் செய்தபோது, அமைதியாக இருந்தால் சலுகைகள் கிடைக்கும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடவக்கவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடி இந்திரா காந்தியிடமிருந்து உத்வேகம் பெற்று அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்க வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு காளி தேவிக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.
கொல்கத்தா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடியா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்றார். அங்கு காளி சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தார். அதன்பின், சாமியை தரையில் விழுந்து கும்பிட்டார்.
அவருடன் மாநில கவர்னர் ஆனந்த போஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
- ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.
"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..
- சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், 2026-27 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி சோலார் பேனல்கள் அமைக்க திட்டமிட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
2026-27-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்தியை நிறுவுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
ஜூன் 30 அன்று, மத்தியப் பிரதேசத்தில் சூரிய சக்தி (5,570 மெகாவாட்), காற்றாலை (3,195.15 மெகாவாட்), உயிரி மின்சாரம் (155.46 மெகாவாட்) மற்றும் நீர் மின்சாரம் (2358.71 மெகாவாட்) போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மொத்தம் 11,279.39 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.
சூரிய பூங்காக்கள் மற்றும் அல்ட்ரா-மெகா சூரிய மின் திட்டங்களின் மேம்பாடு திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4248 மெகாவாட் திறன் கொண்ட 8 சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.
- தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம்.
- தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரியாதைக்குரிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களால், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைச் சிறப்புடன் கையாண்டு, கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று அமித் ஷா பதில் அளித்து வருகிறார்.
- அமித் ஷா பதிலை புறக்கணிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணிப்பு
பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இந்தியா பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பதில் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அமித் ஷாவின் பதிலை புறக்கணிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
- தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.
வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.
நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.
இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.
- பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணையில் பெறுகிறார்கள்.
- இதுவரை 19 தவணையாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகள் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், 20வது கட்ட தவணை ஆகஸ்ட் இரண்டாம் தேதி விடுவிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை, திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் தனது தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்தத் தவணை விநியோகத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.
நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.
- துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
- பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.






