என் மலர்tooltip icon

    இந்தியா

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார்.

    கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

    இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் சரவணனை வரும் எட்டாம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
    • சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

    மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இன்று (ஜூலை 31) சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

    2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

    குறிப்பாக முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ATS) விசாரித்து வந்த இந்த வழக்கு 2011-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இஸ்லாமியப் பகுதிகளை குறிவைத்து சதித்திட்டம் தீட்டியதாக ATS குற்றம் சாட்டியது.

    அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

    323 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கின் இடையில் அண்மையில் தீர்ப்புக்கு முன், நீதிபதி மாற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பானது வழங்கப்பட உள்ளது.

    இன்று வெளியாகும் தீர்ப்பு அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
    • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.

    இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    • 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை விதிகளைப் பின்பற்றத் தவறியதே இதற்கு காரணம்
    • தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய Domain-களில் மீண்டும் செயல்படத்தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் விதிகளை மீறிய 43 OTT தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தளங்கள் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை விதிகளைப் பின்பற்றத் தவறியதே இதற்கு காரணம் என்று அவர் மக்களவையில் கூறினார்.

    நிர்வாணம், பாலியல், வன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பதைத் தடுப்பதற்கான பாதுகாப்புகளை செயல்படுத்துதல் போன்ற விதிகளை இந்த தளங்கள் மீறியுள்ளன.

    அதன்படி, 2024 மார்ச்சில் 18 OTT தளங்களும், 2025 ஜூலை 23 அன்று 25 OTT தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மார்ச் 2024 இல் தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய Domain-களில் மீண்டும் செயல்படத்தொடங்கி , ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுவதை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • குறிப்பாக சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும்

    பருவமழையால் பல்வேறு வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    அங்குள்ள வீடுகளினுள் வெள்ளநீர் புகுந்துள்ள நிலையில் ராணும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    திண்டோரி, விடிஷா, ஜபாப்பூர், நர்மதாபுரம், அலிராஜ்பூர், ராஜ்கார் மற்றும் பேடல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், மொரேனா, ரைசன், குணா, அசோக்நகர், சிவ்புரி, சாகர் மற்றும் விடிஷா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,900-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு காங்கிரஸின் கொள்கைகளே காரணம்.
    • பயங்கரவாதம் பற்றிய விவகாரங்களில் பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு காங்கிரஸின் கொள்கைகளே காரணம்.

    1971 போரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் பெற்றிருந்தால், இன்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

    'காவி பயங்கரவாதம்' என்ற சொல்லைக் உருவாக்கியதன் மூலம் காங்கிரஸ் பெரும்பான்மை சமூகமான இந்துக்களை இழிவுபடுத்தியுள்ளது.

    இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள். இதனை இந்த உலகுக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அழிவின் விளிம்பில் பயங்கரவாதம் இருக்கிறது. அதற்கு முடிவு கட்டப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருந்தால், அவர்கள் பாகிஸ்தானை அப்பாவி என்று தீர்மானித்திருப்பார்கள்.

    பயங்கரவாதம் பற்றிய விவகாரங்களில் பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

    இன்று, நம் நாட்டுக்கு கிடைத்துள்ள பிரதமர் எதிரிகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளால் எதிர்வினையாற்றும் வல்லமை படைத்தவர்" என்று தெரிவித்தாா். 

    • ரஷிய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்
    • இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்போம்.

    ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷிய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் போலவே, இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டனர்.
    • தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கடுமையாக சாடினார் அமித்ஷா.

    புதுடெல்லி:

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென மக்கள் நினைத்தனர். அதேபோல், பயங்கரவாதிகள் 3 பேரும் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது.

    காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பா.ஜ.க. அரசு மீட்கும் என தெரிவித்தார்.

    • இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
    • மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு காலக்கெடு நிர்ணயித்தார். காலக்கெடுவுக்குள் இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று 25 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடிக்கு இடையிலான நட்பை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளார். பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் இடையிலான நட்புக்கு அர்த்தம் இல்லை.

    அமெரிக்க அதிபர் அவமானம் செய்தபோது, அமைதியாக இருந்தால் சலுகைகள் கிடைக்கும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடவக்கவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடி இந்திரா காந்தியிடமிருந்து உத்வேகம் பெற்று அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்க வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு காளி தேவிக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.

    கொல்கத்தா:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடியா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்றார். அங்கு காளி சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தார். அதன்பின், சாமியை தரையில் விழுந்து கும்பிட்டார்.

    அவருடன் மாநில கவர்னர் ஆனந்த போஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
    • ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!

    ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    "அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..

    ×