என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது
    X

    ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது

    • அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார்.

    கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

    இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் சரவணனை வரும் எட்டாம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×