என் மலர்
இந்தியா
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ஆவடி: சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீ ராம் நகர், மூர்த்தி நகர், டிஎன்எச்பி, ஆதிபராசக்தி நகர், தீயணைப்பு நிலைய சாலை, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், வசந்தம் நகர், ஜேபி எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், புட் வனகிரி, என்.எம். ஆனந்தன் நகர்.
வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தபதி அம்மான் தெரு, ஜெகந்நாதபுரம், த.ப. செல்வா நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.
கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு, நஜீமா அவென்யூ, திருவள்ளுவர் 3-வது தெரு, திருவள்ளுவர் நகர் 2 முதல் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட்ஸ் தென்றல் எச்43 முதல் எச்50, மற்றும் முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.
பூந்தமல்லி: கோல்டன் ஹோம்ஸ் FDR 1,2, மற்றும் காடுவெட்டி ஆவடி ரோடு.
- ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,823.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- மாணிக்ராவ் கோகட்டேவின் ராஜினாமா குறித்து பேச்சு எழுந்தது.
- விவசாயிகள் தங்கள் மானியங்களை தவறாகப் பயன்படுத்டுகிறார்கள் என்று பேசியிருந்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)-ஐ சேர்ந்த வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ சர்ச்சயை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு தண்டனையாக அவரிடம் இருந்து வேளாண் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகத்தை இப்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியின் தத்தா பர்னே கையாள்வார். முன்னதாக, அவர் விளையாட்டு அமைச்சகத்தை கையாண்டு வந்தார்.
மாணிக்ராவ் கோகட்டேவின் ராஜினாமா குறித்து பேச்சு எழுந்தது. இருப்பினும் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, கோகட்டேவின் துறையை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
வேளாண் அமைச்சராக இருந்த காலத்தில், விவசாயிகள் தங்கள் மானியங்களை தவறாகப் பயன்படுத்டுகிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்களை மாணிக்ராவ் கோகட்டே பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
- இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.
இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்து இறுதி செய்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
- இந்தியா இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்- டிரம்ப்
- இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷியாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷியாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.
பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் ராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அனுராக் தாகூர் கூறுகையில் "உலகில் யாராவது ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கருத்தை வெளியிடும்போதெல்லாம், ராகுல் காந்தி அதை பிடித்துக் கொள்கிறுார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குவது காந்தியின் மனநிலையாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா "'செத்துப்போன பொருளாதாரம்' என்ற பழிச்சொல்லை எதிரொலிப்பதன் மூலம் ராகுல் காந்தி புதிய கீழ்த்தரமான நிலையை சந்தித்துள்ளார்.. இது இந்திய மக்களின் விருப்பங்கள், சாதனைகள் மற்றும் நல்வாழ்வுக்கு அவமானகரமான அவமானம்.
ஆனால் நேர்மையாகச் சொல்லப் போனால், இங்கே உண்மையிலேயே 'இறந்து போன' ஒரே விஷயம் ராகுல் காந்தியின் சொந்த அரசியல், நம்பகத்தன்மை மற்றும் மரபு.
இவ்வாறு மாள்வியா தெரிவித்துள்ளார்.
- அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது.
- அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரோமன் கத்தோலிக தேவாலயம் அருகே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆகிறது. வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழி பிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள், ஆனால் வரிகளை எல்லாம் உயர்த்திவிட்டனர். மின்கட்டணம் குறித்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை, 67% உயர்த்திவிட்டனர். இப்படி மக்கள் மீது சுமை சுமத்துகின்ற அரசு தேவையா? அதிமுக ஆட்சி இருந்தபோது வறட்சி, புயல், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செயல்பட்டு விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். இன்று புயல் இல்லை, வெள்ளம் இல்லை, வறட்சி இல்லை, கொரோனா இல்லை ஆனால் விலை உயர்கிறது. காரணம் என்னவென்றால் பொம்மை முதல்வர்.
அரிசி, பருப்பு, எண்ணெய் விலையை ஒப்பிட்டுப்பாருங்கள். வருமானம் குறைந்து விலை உயர்ந்துவிட்டது. திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் சேர்மன், மற்றவர்கள் இயக்குனர்கள். ஸ்டாலினை அடுத்து உதயநிதியை கொண்டுவர முயல்கிறார்கள், அது நடக்காது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக நாடாகிவிட்டது. இங்கும் எல்லோருக்கும் ஆள்வதற்கு உரிமையுண்டு. இங்கே இங்கிருக்கிறவர்கள் கூட முதல்வராகலாம்.
அதிமுகவில் மட்டும் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம். திமுகவில் அந்த குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும். எங்கள் குடும்பத்தை தவிர்த்து எவரேனும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று ஒரு வார்த்தை அவர்களைச் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த குடும்ப ஆட்சிக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.
எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் அதிகளவு லஞ்சம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பு. டாஸ்மாக் ஊழல், யார் அதுக்கு மந்திரியாக இருந்தது என்றால், 10 ரூபாய் பாலாஜி. அவர்தான் புதிய டெக்னிக் கண்டுபிடித்தார். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம் மேலிடத்துக்குப் போகிறது. வருடத்துக்கு 5400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் கட்சி தேவையா?
அண்மையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ஊழல் என்றார்கள், அதில் மேலும் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் செயல்படுகிறது. அதில் அதிக வருமானம். எனவே அதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம். மருத்துவத் துறையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 400 கோடி ரூபாயில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். ஏழைகள் நிறைந்த பகுதியில் அற்புதமான சிகிச்சை கிடைப்பதற்கு கொண்டு வந்தோம். இது ஒரு வரலாற்று சாதனை. இப்படி மக்களுக்கு சேவை செய்த இயக்கம் அதிமுக.
இந்தப்பகுதி பின் தங்கிய பகுதி. அதிமுக ஆட்சியில் 75 கோடியில் சட்டக் கல்லூரி கொண்டு வந்தோம். தேவையான கல்வியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் ஒரு திட்டமாவது கொண்டு வந்தார்களா? இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தது அதிமுக அரசுதான். கல்வியில் புரட்சி செய்திருக்கிறோம். பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். 17 மருத்துவக்கல்லூரி, 67 கலைக்கல்லூரி, 7 சட்டக்கல்லூரி இப்படி ஏராளமான கல்லூரியைத் திறந்து ஏழை மாணவர்கள் குறைந்த செலவில் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.
இது வறட்சி மாவட்டம். இந்தப் பகுதியிலும் கண்மாய் நிரம்புவதற்காக காவிரி- குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். பசுமையாக செழிமையாக மாற்ற முயற்சித்தோம். 14,400 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தினோம். தமிழக வரலாற்றில் இவ்வளவு நிதி மாநில அரசால் ஒதுக்கப்பட்டது கிடையாது. இந்த திட்டத்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் விடியா திமுக அரசு இதனை கைவிட்டது. அடுத்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததும் மீண்டும் காவிரி- குண்டாறு திட்டம் தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கு இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க் காப்பீடு மூலம் அதிக இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 540 கோடி பெற்றுக்கொடுத்தோம். மீனவர்களுக்கும் நிறைய திட்டம் கொடுத்தோம். விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல், மீன்பிடி தடைக்காலம் மானியம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் டீசல் மானியம் உயர்த்தப்படும்.
நான்காண்டுகளில் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களுக்கு 321 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளை கட்ட 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வர்தா புயல், ஒக்கி புயல் நிவாரணம் 5000 ரூபாய், இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், படகுகள், வலைகள் சேதத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய், 167 மீனவர்கள் இலங்கையில் மீட்பு, 806 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்தும், 96 பேர் ஈரான், 11 பேர் அபுதாபி, 28 பேர் கத்தார் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தமிழகம் அழைத்துவந்தோம். 85 கோடியில் 5000 வீடுகள் கட்டிக்கொடுத்தோம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார்கள் திமுகவினர். அது காங்கிரஸ் ஆட்சியில்தான் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை கொடுத்ததே அவர்கள்தான், இப்போது மீட்பு பற்றி பேசுவதும் அவர்கள்தான். அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்க தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திமுக மத்திய அரசில் 16 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. அப்போதெல்லாம் மீனவர்கள் பற்றி கவலைப்படவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். மீனவர்களின் வாக்குகளைப் பெற ஏமாற்றுகிறார். மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 49 கோடி நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை தயாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டு 17 கோடியில் கட்டி, கடைகளை எல்லாம் திமுகவினரே எடுத்துக்கொண்டனர். நகராட்சியில் வீடு, கடை கட்டினால் 1000 சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 74 ஆயிரம் ரூபாயாக 100% உயர்த்திவிட்டனர்.
இது, இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத் தோற்றம் காட்டுகிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.
அதிமுக ஆட்சியில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுத்தோம். ஹஜ் மானியம் 12 கோடி கொடுத்தோம். ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி, ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், வக்ஃப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளி தர்காக்களுக்கு புனரமைப்பு நிதி எல்லாம் கொடுத்தோம். இந்த மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக எதிர்த்து ஓட்டுப்போட்டனர். இவர்களா உங்களை காப்பாற்றுவார்கள்? இதிலிருந்து யார் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
கொரோனா காலத்தில் மாணவர் நலனை காக்க ஆல் பாஸ் போட்டோம். இப்படி மாணவர், தொழிலாளி, விவசாயி, மீனவர், நெசவாளர், எல்லா தரப்பு மக்களுக்கு நன்மை செய்த ஒரே அரசு அதிமுக அரசு. ஆகவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம். பை பை ஸ்டாலின்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
- நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மூத்த பெண் மருத்துவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் மூன்று மாதங்களில் (102 நாட்களில்) ரூ.19 கோடிக்கும் மேல் இழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் மருத்துவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்கள் மற்றும் நோட்டரி அதிகாரிகள் கூறி பலர் பேசியுள்ளார்.
மருத்துவர் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக நம்பவைத்துள்ளனர். போலி அமலாக்கத்துறை நோட்டீஸ்களை அனுப்பி, கைது செய்வோம் என தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
மருத்துவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்ட அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த பின்னர், பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர்.
விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி மருத்துவரும் தனது நிலையான வைப்பு நிதிகளை உடைத்து, நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை திருப்பித் தராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரின் அடிப்படையில் , சந்தேகத்தின் பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- கொலை செய்துவிடுவதாக மிரட்டி கணவர் தனது தனது கையை உடைத்தார்
- அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதாக தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் கணவர் - மாமியார் சித்ரவதை காரணமாக கர்ப்பிணிப் பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஃபசீலா (23) என்ற அந்தப் பெண் தனது கணவர் நௌஃபல் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 29 அன்று கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
கடைசியாக தனது தாய்க்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தியில், அவர் இந்த துயர முடிவை எடுத்ததற்கான காரணங்களை விவரித்துள்ளார்.
தாய்க்கு அனுப்பிய செய்தியில், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், தனது கணவர் தனது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் ஃபசீலா கூறியுள்ளார்.
மேலும், கொலை செய்துவிடுவதாக மிரட்டி கணவர் தனது தனது கையை உடைத்தார் என்றும் மாமியாரும் அவரை தொடர்ந்து துன்புறுத்தியாக தெரிவித்துள்ளார். அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதாகவும், எனவே தானே உயிரிழப்பதாகவும் தாய்க்கு அனுப்பிய செய்தியில் ஃபசீலா தெரிவித்துள்ளார்
ஃபசீலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் நௌஃபல் மற்றும் அவரது தாய் ரம்லா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் பிற குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
- முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என ஓ.பி.எஸ். தெரிவித்திருந்தார்.
- உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவு.
முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்று முதல்வரை சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டைக்கு முதல்வர் வீட்டிற்குச் சென்ற ஓ.பி.எஸ்.-ஐ உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். ஓ.பி.எஸ். உடன் அவரது மூத்த மகன் ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை எனத் தெரிவித்தார். இந்த நிலையில்தான் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி" என ஓ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
- தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்டனாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ஷோபா தேவி.
ஜானிபூரில் தனது கணவன் லாலன் குமார் குப்தா, அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை ஷோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அந்நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அஞ்சலி, அன்ஷ் ஆகிய இருவரையும் தீவைத்து எரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-
* முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
* அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
* கல்வி நிதியை நிறுத்தி வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.
* பா.ஜ.க. வில் இருந்து தற்போது எந்த அழைப்பும் வரவில்லை.
* அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது. ஜெயலலிதாவின் மேற்பார்வையில் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்.
* நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த பாஜக- அதிமுக தற்போது இணைந்துள்ளன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்ததற்காக வாழ்த்துகள்.
இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
- லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் ரத்தானது.
- பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதற்கு முன் ரத்து செய்யப்பட்டது.
இன்று ஜூலை 31, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா Boeing 787-9 ரக விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது ரத்து செய்யப்பட்டது என ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.






