என் மலர்
இந்தியா
- பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
தஞ்சாவூர்:
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. அதன் பின்னர் மாலையில் மழை பெய்தது. 1 மணி நேரம் கனமழை கொட்டியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தன.
இன்று அதிகாலையில் தஞ்சை, பாபநாசம், வல்லம், குருங்குளம், திருவையாறு, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.
தஞ்சையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழை இன்று காலையும் நீடித்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். மதுக்கூரில் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் ஓடின. காலையில் சாலை தெரியாத அளவுக்கு மழை பெய்ததால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்கை ஓளிர விட்டப்படி சென்றனர்.
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விடுமுறை அறிவிப்பு ஏதும் வராத நிலையில் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். அலுவலகம் செல்வோர் குடைப்பிடித்தபடியும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ரெயின்கோட் அணிந்தபடியும் சென்றனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மாவட்டத்தில் அதிகபட்டசமாக பாபநாசத்தில் 79 மி.மீ மழை அளவு பதிவானது.
மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் சேதம் அடையுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தார்பாயால் மூடி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் நனைந்து சேதமாகும் அபாயம் உள்ளது. உனவே உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-
பாபநாசம்-79, தஞ்சாவூர்-60, திருவையாறு-60, மஞ்சளாறு-49, கீழணை-56.40, கும்பகோணம்-50, கல்லணை-43.40, குருங்குளம்-42.40, திருக்காட்டுபள்ளி-37.20. மாவட்டத்தில் ஒரே நாளில் 809.10 மி.மீ. பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
இதைப்போல் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தெளித்த நிலையில் தண்ணீர் தேவையான நேரத்தில் இந்த மழை பெய்தது கடைமடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் 40.30 மில்லிமீட்டர், திருப்பபூண்டி 38, வேளாங்கண்ணி 70, திருக்குவளை 32, தலைஞாயிறு 75, வேதாரண்யம் 60, கோடியக்கரையில் 42.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
- முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றார் .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.
இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றடைந்தார். .
இந்நிலையில், உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திடலுக்கு வரும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று 8 ஆயிரம் கன அடியாக வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு தமிழக எல்லை பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசி மணல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 9,500 கன அடியாக தண்ணீர் வந்தது. 9 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான்.
- சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம்.
புதுடெல்லி:
தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு மட்டும்தான். அது கோர்ட்டு அல்ல என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த காலங்களில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சி வாக்குகளை திருடித்தான் ஆட்சியைப் பிடித்தது.
குறிப்பாக கர்நாடகாவின் மத்திய தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும், ஒருவரே 2 முறை வாக்களித்ததாகவும் ஆதாரங்களுடன் விளக்கினார்.
இந்த வாக்கு திருட்டில் பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக குற்றம் சுமத்தி பேசியிருந்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கட்சியினரிடம் இருந்தும், தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் எதிர்ப்பு குரல் வந்தன. பெங்களூருவில் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் என சில ஆவணங்களை காட்டினார். அதில் ஒரு வாக்காளர் 2 முறை வாக்களித்ததாக அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் போலி வாக்குப் பதிவு நடந்திருப்பது உண்மையென்றால், வாக்கு திருட்டு நடந்திருப்பது உண்மை என்றால் ராகுல் காந்தி அவரது குற்றச்சாட்டுகளுடன் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான். அதற்கு நியாமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக கேள்வி கேட்பதற்கு அது கோர்ட்டு அல்ல.
1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) கீழ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமைக் கோரலை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஒரு முழு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் பட்சத்தில் இது பொருந்தாது என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது. வெளிப்படையாக இருங்கள், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள், இதனால் மக்களும் கட்சிகளும் அவற்றைத் தணிக்கை செய்ய முடியும்" என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார்.
- கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். இதுவரை அவர் 4 தடவை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
2021-ம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப் பிறகு முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இதன் மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
பிறகு 2023-ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் செய்தார். இது சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இது 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5-வது முறையாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த தடவை அவர், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.
அநேகமாக இந்த மாத இறுதியில் அவர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இல்லையெனில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அவரது பயணம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரு நாடுகளிலும் பல்வேறு தொழில் அதிபர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முதலமைச்சரின் முழுமையான பயணத் திட்டம் தெரியவரும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி இரு நாடுகளிலும் சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் வார இறுதிநாளான சனிக்கிழமை மட்டும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75,560-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்கநாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,375-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560
09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560
08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760
07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200
06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-08-2025- ஒரு கிராம் ரூ.127
08-08-2025- ஒரு கிராம் ரூ.127
08-08-2025- ஒரு கிராம் ரூ.127
07-08-2025- ஒரு கிராம் ரூ.127
06-08-2025- ஒரு கிராம் ரூ.126
- மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து சில்லரை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.
ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
- இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை.
பெங்களூரு:
பெங்களூருவில் 3 ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிலையில் அவரை வழிநெடுகிலும் நின்று ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்ததுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை பார்க்க சாளுக்கியா சர்க்கிளில் சிவாஜிநகரை சேர்ந்த முதியவரான முகமது கவுஸ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி காத்து நின்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியை பார்க்க வந்துள்ளேன். இதற்கு முன்பு 3 முறை அவரை பார்த்துள்ளேன். ஒருமுறை விதானசவுதா முன்பாக கை கொடுக்கும் தூரத்தில் பிரதமர் மோடியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதனை மறக்கவே முடியாது. நான் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன். நான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்.
பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நாட்டுக்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை. அவா் சக்தி மான் போன்றவர். அல்லா கொடுத்த பரிசு பிரதமர் மோடி ஆவார். இதனை தைரியமாக சொல்வேன். பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றார்.
- 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
- 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 7 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மீனவர்கள் 7 பேரையும் வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 7 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். இதில் மீனவ சங்க பிரதிநிதிகள் எமரிட், சகாயம், கிளாட்வின் ஆல்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைதான அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டுவர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் பாரம்பரிய கடல் பகுதியில் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்களும் மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் 19-ந்தேதி தங்கச்சிமடத்தில் மதியம் 3 மணியளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் மீனவர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில், இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர்களின் குடும்பத்தினர், கலெக்டரிடம் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பும், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
- மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார்.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.
பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர் கான். கான் சார் என தனது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.
வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. கான் சார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர்.
மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- டிரஸ்ட் புரம், ஆற்காடு ரோடு, இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
கோடம்பாக்கம்: டிரஸ்ட் புரம், ஆற்காடு ரோடு, இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு, வரதராஜன்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர், அஜீஸ் நகர், ரங்கராஜபுரம் பகுதி, பரங்குசபுரம், காமராஜர் காலனி 1 முதல் 8-வது தெரு, சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு, ஹைரோடு, கில் நகர், விஓசி மெயின் ரோடு, விஓசி 1 முதல் 5-வது தெரு, அழகிரி நகர் மெயின் ரோடு, துரைசாமி சாலை, சுப்பராயன் தெரு 1முதல் 8-வது தெரு வரை, கங்கை அம்மன் கோவில் தெரு, பெரியார் பாதை, ஏழரைத் தெரு, பத்மநாபன் நகர், ஐயப்பா நகர், 100 அடி சாலை.
பெருங்குடி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை லிங்க் சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து ரோடு, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி பெரியாமுனியர் தெரு, வீரமாமுனிவர் தெரு, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூகி வளாகம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு கட்டடம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை1, 2 பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, SSOA வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.
- போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், உ.பி.யின் நொய்டாவில் மோசடி கும்பல் ஒன்று சர்வதேச போலீஸ் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தர்.
விசாரணையில், அரசு அதிகாரிகளைப் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்ததும், அரசு ஊழியர்களைப் போல நடித்து www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்று வந்ததும் தெரிய வந்தது.






