என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
    X

    டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை

    • பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

    தஞ்சாவூர்:

    தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. அதன் பின்னர் மாலையில் மழை பெய்தது. 1 மணி நேரம் கனமழை கொட்டியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தன.

    இன்று அதிகாலையில் தஞ்சை, பாபநாசம், வல்லம், குருங்குளம், திருவையாறு, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.

    தஞ்சையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழை இன்று காலையும் நீடித்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். மதுக்கூரில் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் ஓடின. காலையில் சாலை தெரியாத அளவுக்கு மழை பெய்ததால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்கை ஓளிர விட்டப்படி சென்றனர்.

    தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விடுமுறை அறிவிப்பு ஏதும் வராத நிலையில் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். அலுவலகம் செல்வோர் குடைப்பிடித்தபடியும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ரெயின்கோட் அணிந்தபடியும் சென்றனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மாவட்டத்தில் அதிகபட்டசமாக பாபநாசத்தில் 79 மி.மீ மழை அளவு பதிவானது.

    மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் சேதம் அடையுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தார்பாயால் மூடி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் நனைந்து சேதமாகும் அபாயம் உள்ளது. உனவே உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    பாபநாசம்-79, தஞ்சாவூர்-60, திருவையாறு-60, மஞ்சளாறு-49, கீழணை-56.40, கும்பகோணம்-50, கல்லணை-43.40, குருங்குளம்-42.40, திருக்காட்டுபள்ளி-37.20. மாவட்டத்தில் ஒரே நாளில் 809.10 மி.மீ. பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதைப்போல் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

    குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தெளித்த நிலையில் தண்ணீர் தேவையான நேரத்தில் இந்த மழை பெய்தது கடைமடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம் 40.30 மில்லிமீட்டர், திருப்பபூண்டி 38, வேளாங்கண்ணி 70, திருக்குவளை 32, தலைஞாயிறு 75, வேதாரண்யம் 60, கோடியக்கரையில் 42.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

    இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×