என் மலர்tooltip icon

    இந்தியா

    • 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
    • நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    மதுரை:

    மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

    15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

    முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை தமிழக பா.ஜ.க.வின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. ஆனால் இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

    இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால் கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட, அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது. அவருக்கு மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை. அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் D.K சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக.

    முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை.

    தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

    அரிசி பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தொடர்ந்து தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

    தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    • இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், உசிலம்பட்டி தொகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 230 கோவில்கள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில் 1, 700 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளன. எஞ்சிய கோவில் நிலங்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.
    • அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

    * அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.

    * வேறு ஒரு இடத்தில் இருந்து வேறு யாரோ ஒருவர் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கிறார். கவனமாக இருங்கள்.

    * வேறு யாரோ ஒருவரின் கணக்குகளை அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும்.

    * அ.தி.மு.க.வை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    * வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார், பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று பேசினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    • நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
    • அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை பீகார் சட்டமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவை தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலக வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

    அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததை அடுத்து சட்டசபை கூடிய எட்டு நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. எனினும், சபையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சியினர் முகப்பு பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.


    பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீகாரில் சட்டசபை நடவடிக்கைகள் முதல் பாதி வரை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இது குறித்து அம்மமாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவையில் கூறும் போது, நாங்கள் தனிப்பட்ட முறையில் முதலமைச்சரை மதிக்கிறோம், ஆனால் யாராவது தேசிய கீதத்தை அவமதித்தால், இந்துஸ்தான் எந்த விலையிலும் அதை பொறுத்துக்கொள்ளாது," என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவை சபாநாயகர், "பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்படும்," என்று கூறினார். தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேச நேரம் கோரினார். ஆனால் சபாநாயகர் நேரம் கொடுக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சலிடத் தொடங்கினர்.

    தொடர்ந்து அவையை நடத்த முற்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததை அடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

    • தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.
    • சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணை நடத்தினார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் ஆய்வின் போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.

    அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

    • ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
    • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா விசாரணை.
    • துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் புனியம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், பா.ஜ.க.வில் உள்ளூர் நிர்வாகியாக இருக்கிறார்.

    அவருடைய நண்பர் சந்தோஷ். கட்டிட ஒப்பந்த தாரரான அவர் பல புதிய கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். அவ்வாறு மாதமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டு கட்டிடத்திற்கு ராதா கிருஷ்ணனை நேற்று இரவு அழைத்துச் சென்றார்.

    அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை சுட்டார். இதில் அவரது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்தநிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சத்தம் வந்த கட்டிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். சந்தோஷ் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்.

    உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்தோசை கைது செய்தனர்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராதா கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின் றனர்.

    சந்தோஷ் எதற்காக ராதாகிருஷ்ணனை துப்பாக் கியால் சுட்டு கொன்றார்? என்பது உடனடியாக தெரிய வில்லை. அவர் பா.ஜ.க.வில் இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் முதற்கட்ட விசா ரணையில் அவரது கொலைக்கு அரசியல் காரணம் இல்லை என்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொலைக்காக காரணம் குறித்து சந்தோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சந்தோஷ் வைத்திருந்த துப்பாக்கி காட்டு பன்றிகளை சுடுவதற்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். அவர் காட்டுப்பன்றிகளை சுடும் குழுவில் இருப்பதால், துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார். அதனை பயன்படுத்தி நண்பரான ராதாகிருஷ்ணனை சந்தோஷ் கொலை செய்து விட்டார்.

    பா.ஜ.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டத்தை நடத்தினர்.

    விவசாயிகளின் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். இதையடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டி அளித்து கொண்டிருந்தபோது சண்முகத்தை தள்ளிக்கொண்டு மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது.
    • கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.

    சிதம்பரம்:

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்த பல்வேறு மாவட்ட போலீசார் கடலூர் வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகையை சேர்ந்தவர் கஜேந்திரன். சாப்ட்வேர் ஊழியர்.

    இவர் கடந்த 18-ந் தேதி தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கஜேந்திரன் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை நகர் மெயின் ரோட்டில் வாகன சோதனையின் போது ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    அவரது பெயர் ஸ்டீபன் (வயது30). கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை சிதம்பரம் அடுத்துள்ள சித்தலப்பாடி சாலையோராம் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    அதனை பறிமுதல் செய்வதற்காக அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட போலீசார் ஸ்டீபனை சித்தலப்பாடிக்கு அழைத்து சென்றனர்.

    சித்தலப்பாடி சாலையில் சென்ற போது ஸ்டீபன் அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ஞானப்பிரகாசத்தை கையில் வெட்டினார். மேலும் இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஸ்டீபன் காலில் சுட்டார்.

    இதில் அவரது கால் முட்டியில் குண்டு பாய்ந்து ஸ்டீபன் சுருண்டு விழுந்தார். அவர் அண்ணாமலைநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே மருத்துவமனையில் கொள்ளையன் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஞானப்பிரகாசமும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் அவர் கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளார்.

    கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரத்தில் மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். திருடும் நகைகளை உடனடியாக விற்பனை செய்து அந்த பணத்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெண்ணை மனைவியாக வைத்திருந்தததாகவும் போலீசார் தெரிவித்தனர். பிரபல கொள்ளையன் ஸ்டீபன் பிடிபட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க பல்வேறு மாவட்ட போலீசார் கடலூருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஸ்டீபனிடம் அதிரடி விசாரணை நடத்த உள்ளனர். 

    • தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
    • 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * அறமே ஆட்சியின் அடித்தளமாக கொண்ட திராவிட மாடல் அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் செயல்படுகிறது.

    * கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே ஆண்டில் உத்தரபிரதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

    * மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அதிகம் இடம்பெறும்.

    * தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கானதாக உள்ளது.

    * தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கும் உரிய கவனம் கொடுப்பதாக உள்ளது.

    * மத்திய அரசு நமது உயிரினும் மேலான தமிழ் மொரியை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நோக்குகிறது.

    * நாட்டிலேயே அதிகளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * 4 ஆண்டுகளில் 10, 649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

    * 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    * மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மாநில அரசே நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் மத்தி அரசு நிதி வழங்கியது.

    * கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது.

    * உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    * செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காக கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன் என்றார். 

    • உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்.
    • பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் காங்கயம் சாலையில் பேக்கரி கடை உள்ளது. இந்தக்கடையில் வாடிக்கையாளா் ஒருவா் கடந்த செவ்வாய் கிழமை குழந்தைக்கு பன் வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் மனித பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள தயாரிப்புக் கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலமாக புகாா் தெரிவித்தார்.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆறுச்சாமி கடையின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து கடையின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக சீல்வைத்து மூடினர். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    குறைபாடுகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு நடத்தப்பட்டு பேக்கரி தயாரிப்பு கூடத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா். 

    ×