search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி
    X
    சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி

    சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி

    கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

    விரல் நுனியில் உலகம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு என்பது கணிசமாக குறைந்துவிட்டது. சோம்பல் காரணமாக அன்றாட உணவுகளை கூட இணையதளம் மூலமாக ‘ஆர்டர்’ செய்து, சாப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த வாழ்க்கை முறை சூழலால் நோய்களுக்கும் பஞ்சம் இல்லை. எண்ணில் அடங்காத நோய்கள் மனிதனை ஆட்டிப்படைத்து வருகின்றன.

    பெண்களிடையே உடல் இயக்கம் குறைந்து வருவதால் சுகப்பிரசவமும் குறைந்து வருகிறது. எந்திரமயமான இந்த காலக்கட்டத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது. இதுபோன்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுகப்பிரசவத்துக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறையை தமிழக அரசின் சுகாதாரத்துறை தொடங்கி இருக்கிறது. இந்த சிகிச்சை முறைக்கு கர்ப்பிணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

    சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனைக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 தாய்மார்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துறையின் டாக்டர் திவ்யா யோகா பயிற்சி அளித்து வருகிறார். தாடாசனம், உட்கட்டாசனம், மர்ஜரி ஆசனம், சேது பந்தாசனம், அஸ்வினி முத்திரை, தியானம் உள்பட 12 வகையான கர்ப்பகால யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    கர்ப்பம் தரித்த 3 மாதங்களில் இருந்து குழந்தை பிரசவிக்கும் வரை பெண்களுக்கு இந்த கர்ப்பகால யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும், எந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்? என்பது பற்றி மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஷோபா நேரிலும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மன அழுத்தத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பிறக்க வைக்க முடியும். டாக்டர்களின் ஆலோசனையின்படி முறையான உடற்பயிற்சிகளையும் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டும். யோகா பயிற்சியின் மூலமாக தான் சுகப்பிரசவங்கள் அதிகரிக்கும்.

    யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் விரைவாக நடக்கும். கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.
    Next Story
    ×