search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    ஆன்லைன் விளையாட்டால் வளர்இளம் பருவத்தினருக்கு ஏற்படும் ஆபத்து
    X

    ஆன்லைன் விளையாட்டால் வளர்இளம் பருவத்தினருக்கு ஏற்படும் ஆபத்து

    • விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
    • வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும்.

    தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    Next Story
    ×