search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விளையாட்டு
    X

    குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விளையாட்டு

    • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும்.
    • குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும்.

    தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம் வீடியோக்கள் வடிவில் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் ஓரிடத்தில் முடங்கியபடியே குழந்தைகள் வீடியோ கேம்களை பார்த்து ரசிக்கிறார்கள். அதில் இருந்து மீள வைப்பதற்கு உடல் ரீதியான விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடவைப்பதுதான் ஒரே வழி. குழந்தை பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை விதைப்பதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கலாம். அதற்கு விளையாட்டு எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.

    1. மன - உடல் ஆரோக்கியம்:

    உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டு உதவும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சரியான பாதையில் செல்வதற்கு வழி நடத்தும். குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். உடல் பருமன் பிரச்சினையில் இருந்தும் விலக்கி வைக்கும். உடல் சம நிலையை பேணவும் உதவும். மன ரீதியாக தோல்விகளை எவ்வாறு கையாள்வது என் பதையும் கற்றுக்கொடுக்கும். மன அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கும்.

    2. குழு செயல்பாடு:

    கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளை விளையாடுவது குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிய உதவும். ஒவ்வொரு வீரரையும் மதிக்கவும், மரியாதை யுடன் நடத்தவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் கற்றுக்கொடுக்கும். பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு பின்பு அலுவலக பணியில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்க்கவும் உதவும்.

    3. ஒழுக்கத்தை கற்றுத்தரும்:

    குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும். அதிகாலையில் பயிற்சி செய்வதற்கு சீக்கிரமாக எழும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும். உணவு விஷயத்தில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வைக்கும். துரித உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடும் வழக்கம் இயல்பாகவே ஏற்படும். மனரீதியாக வலிமையாக செயல்படுவதற்கும் விளையாட்டு வழிகாட்டும்.

    4. சமூக செயல்பாடு:

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் ஆர்வத்தை குறைத்துவிடுகிறது. நண்பர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மறக்கடித்துவிடுகிறது. நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து விளையாடும்போது தகவல் தொடர்பு திறன் வலுப்படும். சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதற்கும் வித்திடும்.

    5. சுயமரியாதை:

    குழந்தைகளிடத்தில் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்க்க விளையாட்டு உதவும். போட்டியில் வெற்றி பெறுவது அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடிப்பது அவர்களின் தனித்திறன்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். பயிற்சியாளரின் ஊக்கமும், சக வீரர்களின் பாராட்டும் சுயமரியாதையை வளர்க்க உதவும். எனவே, குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி விளையாட விடுங்கள். அவர்கள் வளரட்டும்!

    Next Story
    ×