search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் வைணவத் திருத்தலங்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு
    X

    கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் வைணவத் திருத்தலங்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு

    • இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.
    • பஜனை குழுவினர் தேவபாராயணம் பாடினார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவத் திருத்தலங்களான பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக நேற்று இரவு 10 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.

    சொர்க்க வாசல் திறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கே பரமபதவாசலுக்கு வெளியே நம்மாழ்வார் நிறுத்தி வைக்கப்பட்டார். 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் வாசல் வழியாக பெருமாள் வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வெளியே வந்த பெருமாள் அங்கு நின்றிருந்த நம்மாழ்வாரை பார்த்தார். அதன் பிறகு அங்கிருந்த பஜனை குழுவினர் தேவபாராயணம் பாடினார்கள்.

    பின்னர் பெருமாள் கோவிலில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புரசைவாக்கத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

    அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

    தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நள்ளிரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினார்கள்.

    அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். அதன் பிறகு பக்தர்கள் தொடர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அப்போது கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை மண்டபத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.

    திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை கருட சேவை நடைபெற உள்ளது.

    திருத்தணி விஜயலட்சுமி சமேத விஜயராகவா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி உற்சவர் பிரகலாத வரதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூரில் 108 திவ்ய தேசங்களில் 58வது திருத்தலமாக அமைந்துள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனை செய்து சொர்க்க வாசல் வழியே சுவாமி வெளியே வந்ததும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    மூலவர் சன்னதிக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் ஸ்ரீ வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலையிலேயே காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, பரமபத வாசல் வழியாக சென்று லஷ்மி தேவியுடன் சயன கோலத்தில் காட்சி அளிக்கும் ஸ்ரீ அரங்கநாத பெருமாளையும்,கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் வைகுண்ட பெருமாளையும், பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    பொன்னேரி அடுத்த திரு ஆயர்பாடியில் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக மன்னன் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட ஹரி கிருஷ்ணா பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் விசேஷ பூஜைகள் இன்று அதிகாலை நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×