search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்: பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது
    X

    திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்: பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது

    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
    • 8-ந்தேதி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசிப்பெரும் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு எட்டு ரத வீதிக ளில் உலா வந்து 7.40 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து 7.50 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. தேரை மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேர் எட்டு ரத வீதிகளில் வலம் வந்து நிலையம் சேர்ந்தது.

    விழாவில் மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கதிரேசன் ஆதித்தன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷீத் குமார், கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அக்தார்கள் குமர குருபர ஆதித்தன், ரெங்க நாத ஆதித்தன், ராதாகிருஷ் ணன் ஆதித்தன்,காயா மொழி ஊர் பிரமுகர்கள் எஸ்.எஸ்.ஆதித்தன், ஹெக்டேவார் ஆதித்தன், ஜீவானந்த ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், குமரேச ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், ஏரல் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    11-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப் படி வந்து அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பா டுகளை கோவில் அறங்காவ லர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவ லர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×