search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும்.
    • சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சென்னை :

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும்.

    இதையொட்டி சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் துளசி மாலை கொடுத்து வழிபாடு செய்தனர்.

    சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.

    இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான கோவிலில் குவியத்தொடங்கினார்கள். அவர்கள் வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அலங்காரங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றன. இங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டது. சிறப்பு 4 கால பூஜை நடக்கிறது.

    மேலும் கல் பதித்த ரத்னாங்கி சேவையும் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், துளசி மாலை, தாமரை மாலை, சம்பங்கி மாலை ஆகியவற்றால் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா என்று பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோத்தகாரி பெருமாள் உள்ளிட்ட திவ்ய தேசங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    Next Story
    ×